Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையின் இந்த லேண்ட்மார்க்குகளில் நீங்கள் எவற்றுக்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள்? #Chennai378

`மதராசப்பட்டினம் - சென்னப்பநாயக்கன் பட்டினம்' என்றெல்லாம் அழைக்கப்பட்டு `மெட்ராஸ்' ஆகி, இன்று மீண்டும் சென்னையாகியுள்ள தமிழகத்தின் தலைநகருக்கு வயது 378. பல ஆயிரம் ஆண்டுகள்கொண்ட நகரங்கள் தமிழகத்தில் இருந்தாலும் அறுதியிட்டுச் சொல்லக்கூடிய ஒரே நகரம் என்றால், அது சென்னைதான். சென்னை, உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் இணைக்கும் பல்வேறு வரலாற்று இடங்களைக்கொண்டது. அதிலும் இந்த நான்கு இடங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

சென்னை

விக்டோரியா ஹால்:

ஒட்டுமொத்த இந்தியாவின் சமூக உரிமைக்கான வித்து விழுந்த இடமாகவும் வகுப்புவாரி உரிமை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தந்த நீதிக்கட்சி தோன்றிய இடமாகவும் இந்த விக்டோரியா ஹால் திகழ்கிறது. முதன்முதலாக ஒளிப்படக் காட்சிகள் ஒளிபரப்பட்ட இந்த விக்டோரியா ஹாலில்தான், 1916-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி சர் பி.டி.தியாகராயர், டாக்டர். டி.எம்.நாயர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கூடி நீதிக்கட்சியைத் தொடங்கினர். இங்கு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தாக்கமும், முதல் முதலாகத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் தாக்கமும் இன்னமும் தமிழகத்தில் வெகுவாக இருக்கின்றன. 

அப்போட்ஸ்பரி ஹால்: 

பிளாக் அண்ட் ஒயிட் சென்னையின் பெருமைமிகு அரங்கம் இது. சிவாஜி கணேசனில் தொடங்கி தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அனைவரின் இல்ல விழாக்களும் இங்குதான் நடைபெற்றன. `365, அண்ணாசாலை, சென்னை' என்கிற முகவரி இல்லாத பிரபலங்களின் அழைப்பிதழ்களே இல்லை எனலாம். 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அபோட்ஸ்பரி ஹால், சென்னையின் மையப் பகுதியில் சிறப்பான பார்க்கிங் கொண்டிருந்தது முக்கியமான காரணம். இந்த அபோட்ஸ்பரி ஹால், தாராபூர் குழுமத்தின் உரிமையாக இருந்தது. அவர்கள் புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு நன்கொடையாக எழுதிக்கொடுத்தனர். பிறகு, அது வேறு ஒருவர் வாங்கி தற்போது ஹயாத் ஹோட்டலாக உள்ளது. அங்கு இருந்த அபோட்ஸ்பரி ஹாலின் பேரில் இன்று ஹயாத் ஹோட்டலில் ஓர் அரங்கம் இருக்கிறது. 

சென்னை

கன்னிமாரா நூலகம்:

பேரறிஞர் அண்ணா பயன்படுத்திய நூலகம். சென்னை மாகாணத்துக்கான முதல் பொது நூலகம். ஆனால், இதை உண்மையாக உருவாக்கியவரின் பெயர் இதற்கு சூட்டப்படவில்லை என்பது நகைமுரண். சென்னை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்ட இடத்தில் இருந்த சிறுபகுதியில் அதன் பொறுப்பாளராக இருந்த கேப்டன் ஜீன் மிட்செல் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை அமைத்தார். இங்கிலாந்தின் எய்லிபெரி பல்கலைக்கழகத்திலிருந்து புத்தகங்களையும் கப்பல் வழியாகத் தருவித்தார். பிறகு, சென்னை ஆளுநராக வந்த கன்னிமாராவின் உத்தரவின் பெயரில் சென்னை மாகாணத்துக்கான பொது நூலகமாக உருவாக்கப்பட்டது. பொது நூலகமாக அறிவித்த கன்னிமாராவின் பெயரே அந்த நூலகத்துக்குச் சூட்டப்பட்டது. அப்போது அவர் பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை

மெரினா கடற்கரை:

`இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரை; உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை' என்றெல்லாம் பெயர்கொண்ட மெரினா, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று. இங்கு இருந்த திலகர் திடலில்தான் சுதந்திரம் கேட்டு ஹோம்ரூல் இயக்கத்தினர் கூடினர். பாரதியார் தொடங்கி காந்தியடிகள் வரை இங்கு பேசியுள்ளனர். இந்திய தேசியத்துக்கான முகமாக `திலகர் திடல்' இருந்ததால், அதே மெரினாவில் 45 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க ஆட்சிக் காலத்தில்  கட்டப்பட்ட சீரணி அரங்கம் திராவிட இயக்கக் கட்சிகளின் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக இருந்தது. பல்வேறு மாநாடுகளும், மிக முக்கியமான பொதுக்கூட்டங்களும் இங்கு நடைபெற்றன.

தி.மு.க-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆரும் இங்கு பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளார். அதன் பிறகு பிரிந்த வைகோவின் பிரமாண்டமான முதல் பொதுக்கூட்டமும் இங்குதான் நடைபெற்றது. கடந்த 2001-ம் ஆண்டு காவல்துறையால் கருணாநிதி வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமும் இங்குதான் நடைபெற்றது. இவை எல்லாவற்றையும் மிஞ்சும் அளவுக்கு சென்னையின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் மிக முக்கியமான போராட்டமாக, முக்கியமான அறவழியில் நடைபெற்ற போராட்டமாகக் கருதப்படும் `சென்னை மெரினா ஜல்லிக்கட்டு' போராட்டமும் இங்குதான் நடைபெற்றது. 

சென்னை இருக்கும் வரை மெரினாவும் அதன் போராட்ட நினைவுகளும் இருக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement