வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (22/08/2017)

கடைசி தொடர்பு:08:54 (23/08/2017)

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அங்கீகார சர்ச்சை...! - கேரளப் பல்கலைக்கழகத்தால் ஏற்பட்ட குழப்பம்

கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை அறிவியல் இளங்கலை பயின்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 'அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதாக' இதற்குக் காரணம் குறிப்பிட்டுள்ளது கேரளா பல்கலைக்கழகம். இதனால், வருகிற 24-ம் தேதி  அப்பல்கலைக்கழகம் நடத்தவுள்ள நுழைவுத்தேர்வில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலை பயின்ற மாணவர்கள் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நம்மிடம் பேசிய  மாணவர்கள், ''1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்புலம் 1954-ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு படித்த பலர் இந்திய அளவில் வேளாண்துறையில் தலைமைப்பதவிகளில் இருக்கின்றனர். பலர் விவசாய விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இங்கு படித்தவர்தான். மாநிலஅரசின் உதவிபெறும் பல்கலைக்கழகமாக இருந்தபோது வேளாண்புலத்துக்கு ஐ.சி.ஏ.ஆர் அங்கீகாரம் வாங்கப்பட்டது. ஆனால், 2013-ல் மாநில அரசுப் பல்கலைக்கழகமாக மாறிவிட்டதால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்புலத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் ஐ.சி.ஏ.ஆர்.-க்கு இல்லை. மாநில அரசு பல்கலையின் வேளாண் பல்கலைக்கு அங்கீகாரம் வழங்க விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்படும் என்று இந்த ஆண்டுதான்  மார்ச் மாதத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே, இனிமேல்தான் ஐ.சி.ஏ.ஆர்-ல் அங்கீகாரத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் விண்ணப்பிக்க முடியும்.

கேரளா வேளாண்மை பல்கலை  

பொதுவாக மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி-யின் அங்கீகாரம்தான் முக்கியமாகத் தேவை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் யூ.ஜி.சி-யின் அங்கீகாரத்தில்தான் இயங்கி வருகிறது. இந்தச் சூழலில் யு.ஜி.சி-யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தை அங்கீகாரமற்ற பல்கலையின் பட்டம் என்று கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகம் குறிப்பிட்டிருப்பது கண்டனத்துக்குரிய விஷயமாகும். புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகமே அங்கீகாரமற்ற பல்கலைக்கழகம் என்பதுபோல் கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. அந்த அடிப்படையில்தான் இங்கு படித்தவர்களின் விண்ணப்பங்களையும் நிராகரித்துள்ளது. 

 ஐ.சி.ஏ.ஆர்-ன் அங்கீகார விதிமுறைகள் Accreditation from icar is not mandatory rather voluntary என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு மேல்படிப்பு மற்றும் பணிக்குச் செல்வதற்கு ஐ.சி.ஏ.ஆர் அங்கீகாரம் பாதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம், என்னதான் யூசி.ஜி-யின் அங்கீகாரமாக இருந்தாலும், பாரம்பர்யமிக்க பல்கலைக் கழகமாக இருந்தாலும், அரசே ஏற்று நடத்தினாலும்கூட, இதை அங்கீகாரமற்ற பல்கலை என்று ஒரு நொடியில் நிராகரித்துவிட்டார்கள். இந்திய அளவில் முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கேரளா வேளாண்மைப் பல்கலைக் கழகம் உள்ளது. அதனால்தான் அங்கு உயர் கல்வி பயில மாணவர்கள் விரும்புகிறார்கள்.

இருந்தாலும் இதுபோன்றதொரு சிக்கல் இளங்கலை மாணவர்களுக்கு வரும் என முன் கூட்டியே உணர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப்புல நிர்வாகம் தக்க ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சிக்கல்கள் நடைபெறாமல் இருக்க பல்கலையின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அடுத்த ஆண்டு இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்'' என்றனர்.

தமிழகத்தின் முக்கியமான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் பற்றி விசாரிக்காமல், அங்கு பயின்ற மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்த கேரளா வேளாண்மைப் பல்கலை நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் பெறவேண்டும் என்கின்றனர்  மாணவர்கள். மேலும், இவ்விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல்வரிடம் முறையிட உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்