வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (22/08/2017)

கடைசி தொடர்பு:09:00 (23/08/2017)

ஆங்கிலேயர்களிடம் வரிவசூல் செய்த சென்னைத் தமிழர்களின் கதை தெரியுமா ? #Chennai378


                                        சென்னை

ண்டுக்குச் சில வராகன்களை நீங்கள் கிஸ்தி (வரி) யாக கொடுத்தால் புனிதஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்கு நாங்கள் இடத்தை வழங்குகிறோம்... என்று சொல்லி ஆங்கிலேயரிடமே வரியை வாங்கியவர்கள் சென்னைத் தமிழர்கள். அந்த சென்னை பிறந்தநாள் இன்றுதான். சென்னை...  தமிழ்நாட்டின் தலைநகரம்.  இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். 1996-ம் ஆண்டு வரை சென்னையின் பெயர் மெட்ராஸ். 17- ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னைக்குள் நுழைந்தனர். அதற்கு முந்தைய வரலாறு என்று பார்த்தால் கி.பி. 1-ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, விஜயநகர பேரரசுகளின் ஒரு அங்கமாகத் திகழ்ந்தது சென்னை.

 அது பதினாறாம் நூற்றாண்டு! சென்னைக்கு அருகேயுள்ள காஞ்சிபுரத்திலும், சென்னையிலும் அதிகளவு விவசாய நிலங்களை வைத்திருந்தவர் சென்னப்ப நாயக்கர். நிலங்கள் தவிர அவருக்கு ஏராளமான சொத்துகளும்  இருந்தன. அந்நாளில் சென்னைக்குள் காலடி வைத்த பிரான்சிஸ்டே  மற்றும் ஆண்ட்ரு கோகன் என்ற ஆங்கிலேயர்கள் மெட்ராஸில் ஒரு கோட்டை கட்டும் திட்டத்தில் இருந்தனர்.   அதிக நிலத்தை  வைத்திருந்த சென்னப்ப நாயக்கரின் பிள்ளைகளான சகோதரர்கள் வேங்கடப்பன், அய்யப்பன் ஆகியோரை  அணுகினர். சகோதரர்கள் வேங்கடப்பன், அய்யப்பன் இருவரும் சென்னைக்குள் கோட்டை அமைக்கும் திட்டத்துக்கு நிலத்தைக் கொடுக்க முன்வந்தனர். அதற்காக அவர்கள் வைத்த ஒரு கோரிக்கையையும் முன் வைத்தனர்.

"கோட்டையைக் கட்டுவதற்கு   நாங்கள் இடத்தை வழங்குவதாக இருந்தால் எங்களுடைய தந்தையார் சென்னப்ப நாயக்கர் பெயரை நினைவுகூரும் வகையில் சென்னப்பட்டினம் என்று இந்த ஊருக்குப் பெயர் வைக்க வேண்டும். அதேபோல் ஆண்டுக்கு சில வராகன்களை நீங்கள் கிஸ்தி (வரி) யாக கொடுக்க வேண்டும். அந்த வரியை ஒரு நூறாண்டு வரை நீங்கள் கொடுக்க வேண்டும். பாழடைந்து கிடக்கும் கோயில்களைப் புனரமைக்க அந்த கிஸ்தி வசூல் தொகையை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்" என்பதுதான் சகோதரர்கள் வைத்த கோரிக்கை! கிஸ்தியை மட்டுமே  பெற்றுக்கொண்டு கோட்டையைக் கட்ட இடம் தருகிறோம் என்றவர்களின் கோரிக்கையை ஆங்கிலேயர்கள் ஏற்றனர். ஆங்கிலேயே அரசின் பிரதிநிதிகளான பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் இருவரும் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு பெரிதிம்மப்பாவை உதவிக்கு வைத்துக்கொண்டனர். பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் போனது. பன்மொழி வித்தகரான பெரிதிம்மப்பா, நேர்த்தியாக பேச்சுவார்த்தையைக் கொண்டு போனார்... எல்லாம் நல்லவிதமாக முடிந்தது. சென்னையில் கோட்டையைக் கட்டி முடிப்பதற்காகவே, ஈஸ்ட் இன்டியா இன்டஸ்ட்ரீஸ் ஆஃப் இன்டியா என்ற மிகப் பெரிய தொழிற்சாலையை  ஆங்கிலேயர்கள் சென்னைக்குள் நிறுவினர்.   இன்று தமிழக அரசு தலைமைச் செயலகம் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டையை அன்று கட்டுவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போடப்பட்டது... அந்த நாள்தான், இந்த நாள்! ஆம், 1639-ம் ஆண்டு, இதே ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதிதான் அந்நாள்...


டிரெண்டிங் @ விகடன்