Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ரஜினிகாந்துக்கு நான் வழக்கறிஞர் இல்லை!” - தமிழருவி மணியன் விளக்கம்

“ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா?' என்ற தலைப்பில், திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்! ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு கிளம்பிவரும் அதேநேரத்தில், எதிர்ப்புகளும் வலுத்துவருகின்றன. 

இந்த நிலையில், ரஜினிகாந்த்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் தமிழருவி மணியன் குறித்தும் வலைதள விவாதங்கள் சூடு பறக்கின்றன. இவற்றுக்கு விளக்கம் கேட்டு தமிழருவி மணியனிடம் பேசினோம்...

தமிழருவி மணியன்

''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணிக்காக முயன்றபோதே, 'தமிழருவி மணியன் ஒரு புரோக்கர்' என்ற கடுமையான விமர்சனம் எழுந்தது. இப்போதும் 'ரஜினிகாந்திடம் பணம் பெற்றுக்கொண்டு மாநாடு நடத்தியிருக்கிறார் தமிழருவி மணியன்' என்றெல்லாம் இணையதளங்களில் விமர்சிக்கிறார்களே...?''

'' 'புரோக்கர்' என்ற சொல்லுக்குத் தமிழில் 'தரகன்' என்று பெயர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து அவர்களை ஒரே கூட்டணியில் ஒன்றாக இணைத்ததற்காக, திருமாவளவன் என்னைப் பார்த்து 'புரோக்கர்' என்று சொன்னார். மற்றபடி 'கமிஷன் வாங்கினார்' என்ற அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. ஆனாலும் அதே வேலையைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருமாவளவன் மக்கள் நலக்கூட்டணிக்காகச் செய்தார். அப்போது அவரை நான் 'தரகர்' என்று சொல்லவில்லை.
'ஆட்சியில் யார் இருப்பது சரியானது?' என்ற சமூக நலன் என்ற நோக்கத்தோடு செய்கிற ஒரு சீரிய முயற்சியை 'புரோக்கர்' என்று சொல்வது சரியல்ல. என்னைத் 'தரகன்' என்று சொல்லக்கூடிய எந்த மனிதனும் தமிழருவி மணியன் வாழக்கூடிய வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடத் தகுதி இல்லாதவர்கள். கையூட்டு பெற்று தமிழருவி மணியன் காரியம் செய்கிறான் என்று எவராவது சொன்னால், அவர்களுக்கு நரகத்தின் வாசலில்தான் இடம் கிடைக்குமே தவிர... வேறொன்றுமில்லை.

ரஜினிகாந்த்

1967-ல் மாணவனாக காமராஜர் காலில் விழுந்துதான் தமிழக அரசியலுக்குள் நுழைந்தேன். இப்போது 2017... முழுமையாக 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். இந்த 50 ஆண்டுகளில் எந்தத் தலைவனிடமாவது தமிழருவி மணியன் கை நீட்டி 50 பைசா பெற்றான் என்று ஒரு மனிதனும் சொல்லமுடியாது. ஆனால், அப்படிச் சொல்லக்கூடிய மனிதர்கள் அத்தனைபேருமே ரொம்பவும் அருவருப்பான பின்னணி உடையவர்கள். விலைமகளாக இருக்கக்கூடிய ஒரு பெண், எந்தப் பெண்ணையும் கற்புள்ள கண்ணகியாகப் பார்க்கமாட்டாள்; சீதையாக சிந்திக்க மாட்டாள். எனவே, இதுபோன்ற தரம்தாழ்ந்த விமர்சனங்களுக்கெல்லாம் தமிழருவி மணியன் தலைதாழ்ந்துவிடுவான் என்று நினைக்கவேண்டாம். 'விமர்சனங்களுக்கு வீழ்ந்துவிடாதே' என்ற விவேகானந்தரின் வரிகளின்படிதான் நான் நடக்கிறேன். 'விமர்சனங்களில் வீழ்ந்தவன் சரித்திர சாதனைகளை நிகழ்த்தமுடியாது'.

'காமராஜர் பற்றிப் பேசிய, தமிழருவி மணியன் இப்படி ரஜினிகாந்த் பின்னாடி போய் நிற்பது சரியா?'  என்று என்னைக் கேட்பார்களேயானால், அந்த ஜனநாயகக் கருத்தை நானும் வரவேற்று பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், ரஜினிகாந்திடம் போய் 10 கோடி ரூபாய் வாங்கிவிட்டார், இவர் அரசியலில் விபசாரம் செய்கிறவர் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் அத்தனைபேருமே இறைவனால், ஒருகட்டத்தில் தண்டிக்கப்படுவார்கள்.

20 ஆயிரம் ரூபாய் பென்ஷனில்தான் வாழ்க்கையை நடத்திவருகிறேன். நான் வாழ்ந்து வருகிற வீட்டுக்கு இதுவரையிலும் இருந்துவந்த 5000 ரூபாய் வாடகையை, இப்போது திடீரென தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டது. இதில், மின்சாரம், தண்ணீர் கட்டணம் எல்லாம் போக மீதமுள்ள தொகையில் எப்படி வாழ்க்கையை நகர்த்துவது என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, 'அப்பா மாதந்தோறும் நான் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன்' என்று எனது மகன் முன்வந்து சொல்லியிருக்கிறான். ஆக,  நான் வாழ்வது சத்தியம் சார்ந்த தவ வாழ்க்கை!'

ரஜினி மாநாடு

''ரஜினிகாந்த், திரையுலகில் நேர்மையாகத்தான் சம்பாதிக்கிறார் என்று உறுதிகூற முடியுமா? என்றெல்லாம் எதிர்த்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்களே...?''

''நான் ரஜினிகாந்துக்கு வழக்கறிஞர் அல்ல... ஆதலால் ரஜினிகாந்தின் நேர்மையைப் பற்றியெல்லாம் இதுவரை நான் பேசியதே கிடையாது. 'ஊழலற்ற தூய்மையான ஆட்சியைக் கொடுப்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்' என்று என்னிடம் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். அதை நான் முன்னெடுக்கிறேன்... அவ்வளவுதான்! மற்றபடி ரஜினிகாந்தை உள்ளும் புறமுமாக அறிந்து வைத்திருக்கிற கடவுள் இல்லை நான். 

தமிழினத்தின் பொதுச்சொத்துகளை மாறி மாறி கொள்ளையடித்து கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கிற இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் எனக்கு வேண்டியது. அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெறக்கூடிய ஒரு மனிதனை முன்னிறுத்தவேண்டும். நடிப்புலகிலிருந்து வருகிறவர்கள் பின்னாடி போய் நிற்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், என்னுடைய சபதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ரஜினிகாந்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்... அவ்வளவுதான்!''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement