Published:Updated:

`கரை திரும்பாத படகு; கடலில் தத்தளித்த மீனவர்’ -ராமநாதபுரத்தில் குடும்பத்தினர் அச்சம்

ராமேஸ்வரம் துறைமுகம்
ராமேஸ்வரம் துறைமுகம் ( உ.பாண்டி )

கடந்த 13-ம் தேதி அன்று, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 800 விசைப்படகுகள் சென்றிருந்தன.

மீன்பிடி தடைக் காலம் முடிந்த முதல் நாளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் நால்வர், இரண்டு நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மீன் துறை அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டம்
மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டம்
உ.பாண்டி

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் தமிழக மீனவர்கள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த ஊரடங்கைத் தொடர்ந்து, பாக் நீரிணைப் பகுதியில் ஆண்டு தோறும் அமல்படுத்தப்படும் 61 நாள் மீன்பிடி தடை வந்த நிலையில், ஊரடங்கில் இருந்து அரசு விலக்கு அளித்தும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 3 மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது

இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கவேண்டிய மீன்பிடி தடைக் காலம் மார்ச் மாதம் முதலே அமலானதால், வழக்கமான மீன்பிடி தடைக்காலம் 15 நாட்களுக்கு முன்னதாகவே (மே 31-ல்) முடிவுக்கு வந்தது. இதனால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல அரசு அனுமதித்தது. ஆனாலும் மீன்களைக் கொள்முதல் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களை வாங்க வராததால், மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களை வாங்குவதாக அறிவித்தன.

மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம்
உ.பாண்டி

இதையடுத்து கடந்த 13-ம் தேதி அன்று, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். இதில், ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 800 விசைப்படகுகள் சென்றன. ஒரே நாளில் எல்லாப் படகுகளும் சென்ற நிலையில், போதுமான மீன் கிடைக்கவில்லை. குறைந்த அளவிலான மீன்களுடன் மறுநாள் மீனவர்கள் கரை திரும்பினர்.

இதில், ராமேஸ்வரத்திலிருந்து ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின்பாஸ்கர், மலர்வண்ணன், ஆனந்த், சேசு ஆகிய 4 மீனவர்கள் சென்றனர். வழக்கம் போல் மீன்பிடித்துவிட்டு மற்ற படகுகளுடன் கரை திரும்பவேண்டிய இவர்கள், 2 நாட்களாகியும் திரும்பவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மீன்வளத் துறையினரும் கரை திரும்பாத மீனவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
உ.பாண்டி

இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், நேற்று இரவு ராமேஸ்வரம் மீன் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை மற்றும் மீன் துறை அதிகாரிகள், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்நிலையில், கரை திரும்பாத மீனவர்களில் ஒருவரான சேசு என்பவர் கடலில் தத்தளித்த நிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீட்டுள்ளனர். தற்போது, மயக்கமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மற்ற 3 மீனவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு