Published:Updated:

``சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்னு போனவங்க இதுவரைக்கும் வரலை!" - தாயைத் தேடி அலையும் சிறுவன்

சுரேஷ்
சுரேஷ்

பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என உற்சாகமாகக் கழிக்க வேண்டிய பால்ய பருவத்தில், கவலைகளைச் சுமந்துகொண்டு, தொலைந்துபோன தனது தாயையும் தேடிவருகிறார் இந்தச் சிறுவன்.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கிறது அந்தச் சிறிய ஓட்டு வீடு. களிமண்ணால் கட்டப்பட்டிருக்கும் வீட்டின் சுவர்கள் முழுமையாகப் பூசப்படாமல், மழை வந்தால் பல இடங்களில் ஒழுகும் நிலையில் பாழடைந்துள்ளது. அதில் தனியாக வசித்து வருகிறார் சிறுவன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஹெச்.ஐ.வி பாதிப்பால் தந்தையைப் பறிகொடுத்த நிலையில், சுரேஷின் அம்மாவுக்கும் அதே பாதிப்பு இருந்துள்ளது. ஆனாலும், பல்வேறு சவால்களுடன் மகனை வளர்க்கப் பெரிதும் பாடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய், சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போய்விட்டார். எனவே, சமையல் செய்வது, துணி துவைப்பது உட்பட தனக்கான தேவைகளைச் சுயமாகச் செய்துகொள்கிறார் சுரேஷ். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என உற்சாகமாகக் கழிக்க வேண்டிய பால்ய பருவத்தில், கவலைகளைச் சுமந்துகொண்டு, தொலைந்துபோன தன் தாயையும் தேடிவருகிறார் இந்தச் சிறுவன்.

சுரேஷ்
சுரேஷ்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், தான் வசிக்கும் ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் நடந்தேதான் பள்ளிக்குச் செல்கிறார். எந்தக் குழந்தைக்கும் ஏற்படக் கூடாத அசாதாரணமான சூழலையும் எதிர்கொள்வதற்கான மனத்திடத்தை, சிறுவயதிலேயே பெற்றிருக்கிறார் சுரேஷ். இருப்பினும் சுரேஷின் பேச்சில் வெளிப்படும் வலிமிகுந்த வார்த்தைகள், நம் மனதை ரணமாக்குகின்றன.

"அப்பாவுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்துச்சு. அப்போ, கர்ப்பமான அம்மாவுக்கும் ஹெச்.ஐ.வி ஏற்பட்டிருக்கு. ஆனா, கருவில் இருந்த எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படலை. நான் பிறந்த அஞ்சாவது மாசத்துலயே அப்பா இறந்துட்டார். பிறகு, அம்மா தனியாளாக என்னை வளர்ந்தாங்க. அவங்களுக்குக் காய்ச்சல், தலைச்சுற்றல்னு ஓயாமல் தொந்தரவு இருந்துகிட்டே இருக்கும். ஆனாலும், விவசாயக் கூலி வேலை, 100 நாள் வேலை என ஓடி ஓடி உழைப்பாங்க. அந்த வருமானத்துலதான் எங்க குடும்பமே நடந்துச்சு.

சுரேஷ்
சுரேஷ்

ஹெச்.ஐ.வி பாதிப்புடன் இருதய பிரச்னையும் அம்மாவுக்குச் சேர்ந்துகிச்சு. அதற்கான சிகிச்சைகள் எடுத்துகிட்டாங்க. தொடர்ந்து 13 வருஷமா காலையில எழுந்ததுல இருந்து தூங்கப்போற வரைக்கும் நிறைய மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவாங்க. இதனால, பக்கவிளைவுகள் ஏற்பட்டு அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுச்சு. அவங்க வேலைகளைச் செய்துக்கவே சிரமப்பட்டாங்க. அதனால சமையல், வீட்டு வேலைகள் செய்ய கத்துக்கிட்டேன். அடிக்கடி அரசு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் அம்மாவைக் குணப்படுத்த என்னாலான அளவுக்கு மெனக்கெட்டேன். இந்த நிலையில, கடந்த ஆண்டு மே மாசத்துல அம்மாவின் மனநலமும் பாதிக்கப்பட்டுச்சு.

அடிக்கடி தன்னிலை மறந்து சுயநினைவில்லாம இருப்பாங்க. இதனால மருத்துவ சிகிச்சைகளுக்கும் சரியா ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டுப்போனால், நான் சாப்பாடு அல்லது மருந்து மாத்திரைகள் வாங்கிகிட்டு வர்றதுக்குள்ளே எங்கேயாவது போயிடுவாங்க. தேடிக் கண்டுபிடிச்சு கூட்டிகிட்டு வருவேன். இதுவே தொடர் நிகழ்வாயிடுச்சு. அம்மாவை வீட்டுக்கே கூட்டிட்டுவந்து பழைய நினைவுகளைப் பேசிப் பேசி ஓரளவுக்குச் சுயநினைவுகளை மீட்டேன். ஆனாலும், முழுமையான பலன் கிடைக்கலை'' என்று கலக்கத்துடன் கூறும் சுரேஷுக்கு அச்சப்படும் அளவில் எந்த உடல்நிலைப் பாதிப்பும் இல்லை.

வீட்டிலுள்ள சில சமையல் பாத்திரங்களுடன், ஒரு பையும் சூட்கேஸ் பெட்டியும்தான் சுரேஷின் சொத்துகள். சூட்கேஸில் தாயின் நினைவாக வைத்திருக்கும் சில பொருள்களை நம்மிடம் காட்டி நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

சுரேஷ்
சுரேஷ்

"அம்மா இருந்தப்போ சில சொந்தக்காரங்க எங்களை எப்போதாவது வந்து பார்ப்பாங்க. ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்ததால, பல்வேறு புறக்கணிப்புகளை நானும் அம்மாவும் எதிர்கொள்வதும் வாடிக்கையாவே இருந்துச்சு. அம்மா காணாமல்போன பிறகு எனக்கான ஆதரவாக யாருமில்லை. நானும் அதுக்காக வருத்தப்படலை. தனிமையும் தவிப்பும் சின்ன வயசுல இருந்தே எனக்குப் பழகிப்போச்சு.

ஏழாவது வரைக்கும் நல்லா படிச்சேன். குடும்பப் பிரச்னைகள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், நல்லா படிச்சு அம்மாவைக் குணப்படுத்தணும்னு ஆர்வமா படிச்சேன். அம்மாவின் உடல்நிலை ரொம்பவே மோசமானதால, அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டுப்போறது, தொலைஞ்சுபோகாம இருக்கும்படி பார்த்துக்கிறதுனு படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியல.

சுரேஷ்
சுரேஷ்

தினமும் குளிப்பாட்டிவிடறது, சமையல் செய்து ஊட்டிவிடறது, மருந்து மாத்திரைகள் கொடுக்கிறதுனு அம்மாவை ஒரு குழந்தையை மாதிரிதான் பார்த்துகிட்டேன். போன வருஷம் இறுதியில ஒருநாள் நான் ஸ்கூல்ல இருந்தப்போ, `சாப்பாடு வாங்கிகிட்டு வர்றேன்'னு அக்கம்பக்கத்து வீட்டார்கிட்ட சொல்லிட்டு கிளம்பிப்போன அம்மா இப்போவரை வரவேயில்லை" என்கிற சுரேஷின் குரல் உடைகிறது. மனம் வெதும்பி, உரையாடலுக்கு இடைவெளிவிடும் சிறுவனின் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

தொலைந்துபோன தன் அம்மாவைத் தேடி, நான்கு மாதங்களுக்கும் மேலாக அலைந்துகொண்டிருக்கும் சுரேஷுக்கு, எதிர்காலம் குறித்து பெரும் கேள்விக்குறியும் வேதனையும் சுட்டெரிக்கிறது.

"எட்டு வருஷமா எனக்கு ஆஸ்துமா பிரச்னையும் இருக்கு. தனது உடல்நிலையையும் பொருள்படுத்தாம அம்மா என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டுப்போனாங்க. வறுமை, நோய்ன்னு இருந்தாலும், அம்மா என்னைச் சந்தோஷமாகவே பார்த்துக்கிட்டாங்க. ஆனா, இப்போ அம்மா இல்லாததால எனக்குள் ரொம்பவே வெறுமையான உணர்வு.

சுரேஷ்
சுரேஷ்

இதனால, படிப்புலயும் கவனம் செலுத்த முடியாம தவிக்கிறேன். ஆரம்பம் முதலே நான் படிக்கிற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் எல்லோரும் என்மேல அதிக அன்பு காட்டுறாங்க. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி அம்மாவால் வேலைக்குப் போக முடியாத சூழல் ஏற்பட்டப்போ, என் ஆசிரியர்கள்தான் மளிகைப் பொருள்கள் வாங்க பண உதவி செய்தாங்க. இப்போகூட அவங்களால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்றாங்க. அதனால, இந்த வீட்டுல தனியா வசிச்சுக்கிட்டு, நானே சமையல் உட்பட எல்லாத் தேவைகளையும் செய்துகிட்டு வாழறேன். எத்தனை நாளைக்குப் பிறர் உதவியால் வாழமுடியும்னு கேள்விகள் எனக்குள் எழுகின்றன.

மாவட்ட கலெக்டர்கிட்டயும் காவல் நிலையத்திலும் அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கச் சொல்லி மனுக்கொடுத்திருக்கேன். `உங்க அம்மாவைப்போல ஒருவரைப் பார்த்தேன்'னு யாராவது சொல்றப்போ எல்லாம் உடனே அந்த இடத்துக்கு ஓடிப்போய் பார்ப்பேன். அங்கே அம்மா இருக்க மாட்டாங்க. எங்க இருக்காங்களோ... எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்களோன்னு நினைக்கிறப்போ வேதனையா இருக்கு. படிப்புக்கு இடையே, அன்றாடம் அம்மாவைத் தேடி அலையறேன். என் அம்மாவைக் கண்டுபிடிக்கவும் என் உயர்கல்வித் தேவைக்காகவும் யாராச்சும் உதவி செய்தால் நல்லா இருக்கும்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறார் சுரேஷ்.

ஹெச்.ஐ.வி குறித்த புரிதல் அதிகம் இல்லாத நம் சமூகத்தில், சுரேஷ்க்கு அந்தப் பாதிப்பு இல்லையெனினும், அந்தச் சிறுவன் எதிர்கொள்ளும் சவால்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. சுரேஷைக் கரைசேர்க்க ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே! அதற்கு உதவுவது சுரேஷின் பெற்றோரின் கனவை நனவாக்குவது இணையாகும். ஒரு தலைமுறையை முன்நகர்த்தி வைப்பதாகும்.

சுரேஷ்
சுரேஷ்

சுரேஷின் நிலையைக்கண்டு வருந்தும் விகடன், சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளது. வாசகர்களாகிய நீங்களும் சிறுவனுக்கு உதவ முன்வரலாம். உங்களின் உதவியை சிறுவனுக்குக் கொண்டுசேர்க்கும் பொறுப்பை விகடன் ஏற்கிறது.

உதவும் உள்ளம் கொண்டவர்கள் Vasan Charitable Trust என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி-யாக...

ஆனந்த விகடன்,

வாசன் அறக்கட்டளை,

757 அண்ணா சாலை,

சென்னை 600002

என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர்,

எங்கள் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாகவும் அனுப்பலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `சிறுவனைக் காப்போம்’ அல்லது `For Namakkal Boy' என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரைத் தவறாமல் குறிப்பிடவும். முடிந்தால் முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடவும். மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு