Published:Updated:

`ஆன்லைன்ல 5,000 ரூபாய், அதனால நாங்களே பண்ணிட்டோம்!' -கால்களை இழந்த நாய்; நெகிழவைத்த ஏழைத் தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடைவண்டி பொறுத்தப்பட்ட நாய்
நடைவண்டி பொறுத்தப்பட்ட நாய்

விபத்தில் பின்னங்கால்களை இழந்த நாயைத் தத்தெடுத்து வளர்த்துவரும் கடலூர் தம்பதியினர், அதற்கு நடைவண்டி செய்து கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் நாம், சக உயிர்கள் சந்திக்கும் துயரங்களை ‘அய்யோ பாவம்’ என்ற ஒற்றை வார்த்தையுடன் கடக்கப் பழகிவிட்டோம். மனிதநேயம், பிற உயிர்கள் மீதான நேசம் போன்ற நிகழ்வுகள் மிக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நடக்கின்றன. அப்படியான ஒரு நெகிழ்ச்சி குறித்த பதிவுதான் இது.

கடலூரைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - சுதா தம்பதி. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்திருக்கும் ஆல்பேட்டை என்ற பகுதியில், துணிகளை சலவை செய்யும் கடையை நடத்தி வருகிறார்கள். சொற்பமான வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்திவரும் இவர்கள், ஆதரவற்ற நாய்களுக்கு உணவளித்து, அவைகளைத் தங்களது குழந்தைகளைப் போல பராமரித்து வருகிறார்கள்.

நாயுடன் கண்ணன்
நாயுடன் கண்ணன்

மேலும், விபத்திலோ அல்லது உடல்நலம் குன்றியோ உயிரிழந்து கிடக்கும் நாய்களை எடுத்து உரிய முறையில் நல்லடக்கம் செய்துவருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, விபத்து ஒன்றில் பின்னங்கால்களில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாய்க்கு சிகிச்சை அளித்து, அதைக் காப்பாற்றிய கண்ணன் – சுதா தம்பதியினர், அதற்கு குணசேகரன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். நாய் குணசேகரன் உயிர் பிழைத்துவிட்டாலும், பின்னங்கால்கள் இரண்டும் செயலிழந்ததால் நடப்பதற்கு சிரமப்பட்டது.

நாய் குணசேகரன் தவழ்ந்து செல்வதைப் பார்த்து கலங்கிய அந்த தம்பதியினர், அது நடப்பதற்கு வசதியாக சக்கரங்கள் பொருத்தப்பட்ட பி.வி.சி பைப்பைக் கொண்டு நடைவண்டியை தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சுதா, “ஒன்பது மாசமிருக்கும். ஒருநாள் நைட் நாங்க தூங்கிட்டு இருக்கும்போது இவன் கத்தற சத்தம் கேட்டுது. நைட்ல நாய்ங்க கத்தறது வழக்கம்னு விட்டுட்டேன். காலைல எந்திரிச்சிப் பாக்கும்போது கால், வாயெல்லாம் ஒடஞ்சி போயி அடிப்பட்டு ரத்தசகதியா கத்திக்கிட்டு கெடந்தான்.

நாய்க்கு நடைவண்டியை மாட்டி விடும் சுதா
நாய்க்கு நடைவண்டியை மாட்டி விடும் சுதா

ரோட்டுல போன எல்லாரும் இவனை வேடிக்கைதான் பாத்துக்கிட்டு போனாங்க. உடனே நான், எங்க வீட்டுக்காருகிட்ட சொல்லி அழுததும், அவனை போயி தூக்கிட்டு வந்தாரு. அப்போ உசுரு மட்டும்தான் அவன் ஒடம்புல இருந்துச்சி. வாய் ஒடஞ்சி பல்லெல்லாம் விழுந்துடிச்சி. எங்க வீட்ல ஏற்கெனவே 5 பசங்க இருந்ததால் (நாய்களை அப்படித்தான் குறிப்பிடுகிறார்) இவனை பக்கத்து வீட்டு திண்ணையில வச்சு பாத்துக்கிட்டோம். அப்புறம் மழையில அவன் நனைஞ்சதால எங்க வீட்டுக்கே எடுத்துட்டு போயிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்ககிட்ட துணி அயர்ன் பண்ணக் குடுக்கிற டாக்டர் ஒருத்தரு மூலமா இவனுக்கு வைத்தியம் பாத்தோம். ஒரு நாளைக்கு 3 ஊசினு 15 நாளுக்குப் போட்டோம். ரெண்டு காலுலயும் நரம்பு அடிபட்டதாலதான் நடக்க முடியலனு சொன்ன டாக்டர், சரியா போயிடும்னு சிரப் ஒன்னு எழுதி ரெகுலரா குடுக்கச் சொன்னாரு. நாலு மாசமா படுத்த படுக்கையாத்தான் கெடந்தான். சாப்பாடு, மருந்துனு ரெகுலரா குடுத்ததால கொஞ்சம் கொஞ்சமா தேற ஆரம்பிச்சான். மத்த பசங்கல்லாம் வெளில போகும்போது இவனும் போறதுக்கு ஆசைப்பட்டு அழுதிட்டிருப்பான்.

நடக்க முடியாத நிலையில் நாய் குணசேகரன்
நடக்க முடியாத நிலையில் நாய் குணசேகரன்

நாங்க எங்கயாவது போயிருக்கும்போது எங்களுக்குத் தெரியாம தவழ்ந்து போய்டுவான். அப்படி போகும்போது, காலும் இடுப்பும் தரையில தேச்சிக்கிட்டு மறுபடியும் காயமாகி ரத்தம் கொட்டும். அதனால யூடியூப்ல பாத்து அவனுக்கு வீல் சேர் ஒன்னை அமேசானில ஆர்டர் போட்டுட்டேன். ஆனா அதோட விலை 5,000 ரூபாய்னு இருந்ததால என் வீட்டுக்காரரு அதை வேணாம்னு சொல்லிட்டு, அவரே செய்து கொடுத்துட்டாரு. இப்போ அவன் செம சந்தோஷமா இருக்கான். மத்த பசங்களைப் போல அவனும் வெளில போயிட்டு ஜாலியா சுத்திட்டு வர்றான் என்கிறார் மகிழ்ச்சியுடன்.

கண்ணனிடம் பேசினோம். “பேச்சு மூச்சில்லாம கெடந்தவன் இன்னைக்கு தெருத்தெருவா ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான். காலைல அந்த வீல் சேரை அவனுக்கு போட்டுட்டா, ரெண்டு தெருவை ஜாலியா சுத்திப் பாத்துட்டு கடைக்கு வந்து எங்ககூட இருந்துடுவான். அதேபோல சாயந்திரம் 4 மணிக்கு வீல் சேரை மாட்டி விட்டுடனும். இல்லைனா சாப்பிடாம அழுதுகிட்டே இருப்பான். இவன் கஷ்டப்படுறத பாத்துட்டு என் மனைவி அமேசானில் ஆர்டர் போட்டுட்டாங்க.

Vikatan

எங்க வருமானமே ஒரு நாளைக்கு 200, 300 ரூபாய்தான். அந்த வருமானத்துலதான் நாங்க எட்டுபேரும் சாப்பிடறோம். அப்புறம் எப்படி எங்களால அந்த வண்டியை வாங்க முடியும்? அதனாலதான் எங்க ஹவுஸ் ஓனர் உதவியுடன் பைப்ல இந்த வண்டியை ரெடி பண்ணோம். அது அவனுக்கும் புடிச்சுப்போச்சு” என்கிறார் உற்சாகக் குரலில்.

காலம்காலமாக, இவர்களைப் போன்ற எளிய மனிதர்களால்தான் இந்த பூமிப்பந்து சுழல்கிறது போலும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு