Published:Updated:

தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத தடுப்பணை... இது ரெட்டணை கிராமத்தின் சோகம்

உடைந்துபோன சாலை
உடைந்துபோன சாலை

7.9 கோடி மதிப்பீட்டில் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டிருந்தாலும், இதுவரை எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாமல் போனதே சாதனையாக உள்ளது.

ஒரு கிராமத்தின் நீர்நிலை ஆதாரங்களே அந்த கிராமத்தின் செழுமையையும் விவசாயத்தையும் கிராம மக்களின் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. நீர் ஆதாரமின்றி ஏற்படும் வறட்சியால், மனிதர்கள் மட்டுமின்றி பல உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு அரசு நிதி ஒதுக்கினாலும், பெரும்பாலான நீர்நிலைகள் போதிய பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கின்றன. அரசு அதிகாரிகளின் அலட்சியமும் ஒப்பந்ததாரர்களின் கொள்ளை நோக்கமுமே இதற்கு முதன்மையான காரணம்.

தடுப்பணை
தடுப்பணை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அடுத்துள்ளது, ரெட்டணை கிராமம். இந்த ஊரின் வழியே இரண்டு ஆறுகள் கடந்து செல்வதனாலேயே இந்த ஊருக்கு இந்தப் பெயர். இந்த ஊர் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இரு ஆறுகளில் ஒன்று, தொண்டி ஆறு. விவசாயத்துக்கான நீர்ப் பற்றாக்குறையையும் ஊர்மக்களின் குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும் வகையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, அந்த ஆற்றின் தடுப்பணை உயரத்தையும் கரை உயரத்தையும் உயர்த்திக்கட்ட முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 7.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையில் ஏற்பட்ட பழுதைப் பற்றியும் மக்களின் குமுறல்களையும் 27.8.2019 அன்று கட்டுரையாகத் தன் தளத்தில் வெளிச்சமிட்டது விகடன்.

7.9 கோடி மதிப்பீட்டில் இந்த தடுப்பணை கட்டப்பட்டிருந்தாலும், பெய்யும் மழைநீரைத் தேக்கிவைக்க முடியாமல்போனதே இந்தத் தடுப்பணையின் சாதனையாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்புவரை திண்டிவனம் நகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்துவந்த நதி, தற்போது அப்பகுதி மக்களின் தண்ணீர்த் தேவையைக் கூடப் போக்க முடியாத நிலையில் உள்ளது. அதற்கே, 250 அடிக்கு மேல் போர்வெல் போடவேண்டியிருக்கிறது. முட்புதர்களின் கூடாரமாகவும் மாறிவிட்டது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களும் தொகுதி எம்.எல்.ஏ-வும் பலமுறை கோரிக்களை முன்வைத்தும் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து நாம் பொதுப்பணித்துறை அதிகாரி சுமதியிடம் முன்னர் பேசியபோது, "சீமக்கருவேல மரங்களை அகற்ற வாகனத்தை வரச்சொல்லி இருக்கிறோம். தடுப்பணை கதவைச் சரிசெய்ய டெண்டரும் கொடுக்க உள்ளோம். பருவமழைக்குள் கதவைச் சரிசெய்து தந்துவிடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

முட்புதர்
முட்புதர்

தற்போது தமிழகத்தில் பருவமழை பரவலாகப் பொழிந்துவரும் நிலையில், அரசு அதிகாரியின் வாக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதைப் பார்வையிட அப்பகுதிக்கு விசிட் அடித்தோம். அங்கு சென்றபோது, ஊர் மக்களின் வருத்தமும் ஏமாற்றமும்தான் மிஞ்சியிருந்தன. பருவமழையால் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது. ஆனால், அணையின் கதவுகள் சரி செய்யப்படாமல், வரும் நீர் அப்படியே வெளியேறிச் சென்றுகொண்டிருந்தது. முட்புதர்களும் அப்படியே இருந்தன.

இதுகுறித்து ஊர் மக்கள் சிலரிடம் விசாரித்தோம்.

"நாங்க பல வருஷமா இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துவருகிறோம். இப்போது, அப்போதுன்னு இழுத்துக்கொண்டே இருந்தாங்க. இரண்டு மாதத்திற்கு முன்னாடி இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வும் பத்திரிகையாளர்களும் அழுத்தம் கொடுக்கவே, சீக்கிரமா சரிசெய்து தரேன்னு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொல்லியிருந்தாங்க. அதற்குப் பிள்ளையார் சுழி போடணும்னுதான் ஊர் மக்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து, முடிந்த அளவுக்கு சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தினோம். அதற்கு, ரூ. 5,000 வரை செலவாச்சு. ஆனால் அரசு அதிகாரிகளோ, இதுவரை எந்த வேலையும் செய்யவில்லை. இப்போது, பருவமழை பொழிந்திருந்தாலும் ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே மதகின் கதவு மற்றும் அடித்தளம் வழியே வெளியேறிவிடுகிறது. இப்படியே போனால் ஒரு வாரத்திலேயே அனைத்து தண்ணீரும் வெளியேறிவிடும். கோடைகாலத்தில் நாங்கள் தண்ணீருக்காகக் கஷ்டப்பட வேண்டியதுதான்'' என்று வருத்தத்தோடு பேசியவர்கள்,

தடுப்பணை
தடுப்பணை

''தொண்டி ஆறுதான் இப்படி இருக்கிறது என்றால் சங்கராபரணி (வராக நதி)ஆறும் சரியாக இல்லை. அந்த நதியைத் தாண்டி இருக்கிற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தம் தேவைக்காகவும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் ஆற்றைக் கடந்துதான் இந்த ஊருக்கு வர வேண்டும். ஆனால், இதுவரை அந்த நதியில் மேம்பாலம் இல்லை. தரைப்பாலம் மட்டும்தான் இருக்கிறது. மழைக்காலத்தில், பள்ளிக்கு மாணவர்கள் வரவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு மாதத்திற்கு முன்பு, மேம்பாலம் கட்டுவதற்கு அரசு சார்பில் பழைய தரைப்பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக பணியைத் தொடங்கினார்கள். கொஞ்ச நாளாக அப்படியே பணி நடக்காமல் இருந்தது. இப்போது, சில மாதங்களாகத்தான் பணி நடக்கிறது. பாலம் கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்று தார்சாலை, சில நாள்களுக்கு முன்பு (31.10.19) வந்த ஆற்று வெள்ளத்தில் உடைத்துக்கொண்டு போய்விட்டது. எம்.எல்.ஏ மாசிலாமணி, அதிகாரிகள் சிலர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இங்குள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது'' என்றவர்கள், தொண்டி ஆறு கரையை விரிவுபடுத்த 2016-17 ஆண்டில் வந்த 20 லட்ச ரூபாய் நிதியை அதிகாரிகள் அப்படியே ஏமாற்றிவிட்டார்கள். எந்த வேலையும் செய்யவில்லை" என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர் வருத்தத்தோடு.

அப்போது ஒருவர், எங்க ஊரிலும் இப்படித்தான் நடக்கிறது என்றார். அவரிடம் விசாரித்தபோது...

"நாங்கள் இதே ரெட்டணை ஊராட்சிக்கு உட்பட்ட நரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்க ஊரில் ஏரியின் உட்புறமாக ஊர் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக 2015-16 ஆம் ஆண்டு 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிணறு வெட்டப்பட்டது. அந்தக் கிணற்றுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டில்தான் சுற்றுச்சுவர் கட்டி முடித்தனர். இனி, ஊரில் தண்ணீர்ப் பிரச்சனை இருக்காது என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், இம்மாதம் பொழிந்த பருவமழையால், கடந்த 26-ம் தேதி கிணற்றின் சுற்றுச்சுவருடன் மண்சரிவு ஏற்பட்டு கிணறு தரைமட்டமாகிவிட்டது. எந்த அளவுக்குக் கட்டி இருந்தால், இவ்வளவு குறுகிய காலத்திலேயே இடிந்துவிழும்? இதை எதிர்த்துக் கேட்கவும் முடியாது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஊராட்சி அலுவலகம்
ஊராட்சி அலுவலகம்

தடுப்பணையில் கதவுகள் சரி செய்யப்படாமலும், முட்புதர்கள் அப்புறப்படுத்தாமலும் இருப்பது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரி எஸ்.டி.ஓ சுமதியிடம் பேசினோம்."அதற்கான நிதி ஒதுக்கீட்டில் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. தற்போது, தடுப்பணை கதவில் ஒரு கதவை மட்டும் முழுமையாகச் சரி செய்து மூடிவிட்டோம். மீதமுள்ள கதவுகளைச் சரி செய்வதற்காக ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து உடனே கதவை சரிசெய்துவிடுவார்கள். அதன்பின், ரப்பர் சீல் கொண்டு தடுப்பணை மதகின் கதவைச் சுற்றி தண்ணீர் வெளியேறாமல் இருக்குமாறு பொருத்துவார்கள். அதன் தடிமன் சாதாரண நிலையில் சிறிதாகவே இருக்கும். நீரில் அது ஊறிய பின்னர் விரிவடைந்து இருக்கமாக பிடித்துக்கொள்ளும். அந்தப் பணி முடியும்வரை நீர் வெளியேறாமல் இருக்க மணல் மூட்டை கொண்டு அடைப்பதற்கு வீடூர் அணையிலிருந்து ஆட்கள் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவிப் பொறியாளர் அங்கு உடனிருந்து பணியைச் செய்துகொண்டிருக்கிறார்" என்றார்.

வேலை செய்யாமலே 20 லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது எனும் மக்களின் குற்றச்சாட்டை அவரிடம் முன்வைத்தோம். "தடுப்பணை அருகே கரையைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அருகில் நான்கு நபர்களின் பட்டா நிலம் இருந்தது. அப்பகுதியில் கரையைப் பலப்படுத்த மூன்று பேர் ஒப்புக்கொண்டனர். ஒருவர் மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அனைவரும் ஒப்புக்கொண்டால் தான் எங்களால் பணியைத் தொடங்க முடியும். ஏனெனில், நிலம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவர் ஒப்புக் கொள்ளாததால் நிதியை அரசிடமே திருப்பி ஒப்படைத்து விட்டோம். இன்றும் அவர்களிடம், 'நான்கு பேரும் ஒப்புக் கொண்டால் நிதியை மீண்டும் பெற்று பணியை முடித்துத் தருகிறோம்' என்றுதான் கூறியுள்ளோம். கரை பலவீனமாகவெல்லாம் இல்லை. அப்பகுதி மக்கள் சிலர் மணலை மறைமுகமாக எடுத்துச்சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால்தான் கரை பலவீனமாக வாய்ப்பு உள்ளது. சங்கராபரணி நதி, சாலை உடைப்பு ஏற்பட்டது நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் வரும்" என்று கூறினார்.

நீர்
நீர்

நாரேரிக்குப்பம் கிராமத்தில் கிணறு தரைமட்டமானது குறித்து மயிலும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், பொறியாளர் அசோக்குமாரிடமும் பேசினோம்.

"கிணறு தோண்டியதற்கான 7 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது வரை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அமைப்பதற்கான 1 லட்சம் ரூபாயை இன்னும் நாங்கள் தரவில்லை. கிணறு சேதமடைந்ததை அடுத்து ஒப்பந்ததாரர் நேற்று எங்களிடம் வந்து பேசினார். அவரிடம் 'கரையைச் சரிசெய்து தந்தால்தான் பணம் தருவோம்' என கூறி விட்டோம். இதற்கு முன்னரே இது போல ஒரு முறை நடந்துள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் இடம் தேர்வு செய்ததுதான். ஏரியின் மிகவும் தாழ்வான பகுதியைத் தேர்ந்தெடுத்து கிணறு எடுத்துள்ளனர். கரை அமைக்கப்பட்டிருந்தாலும், இப்போது மழை பொழிந்தால் நீர் தேங்கி ஏற்பட்ட அழுத்தத்தாலும் ஏரியின் மண் தன்மையாலும் கரை இடிந்துள்ளது. மீண்டும் சரிசெய்தால்தான் 1லட்சம் ரூபாய் தருவோம் எனக் கூறியுள்ளோம்" என்றனர்.

இப்படி தனித்தனியாக பல பிரச்னை காரணமாக பொதுமக்களுக்கான ஒரு நல்ல விஷயம் நடைபெறாமல் இருப்பது வருத்தத்துக்குரிய ஒன்று என்பது மட்டும் உண்மை!

பின் செல்ல