Published:Updated:

ராமநாதபுரம்: 'உதவிசெய்ய முடியாவிட்டால் கருணைக்கொலை செய்துவிடுங்கள்' - மாற்றுத்திறனாளி கண்ணீர்

மாற்றுத்திறனாளி திருமால்
News
மாற்றுத்திறனாளி திருமால்

'உதவி கேட்டு இதற்கு மேல் என்னால் அலைய முடியாது, தயவுசெய்து‌ என்னைக் கருணைக்கொலை செய்துவிடுங்கள்’ என இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்: 'உதவிசெய்ய முடியாவிட்டால் கருணைக்கொலை செய்துவிடுங்கள்' - மாற்றுத்திறனாளி கண்ணீர்

'உதவி கேட்டு இதற்கு மேல் என்னால் அலைய முடியாது, தயவுசெய்து‌ என்னைக் கருணைக்கொலை செய்துவிடுங்கள்’ என இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
மாற்றுத்திறனாளி திருமால்
News
மாற்றுத்திறனாளி திருமால்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுவருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தீர்வு பெற்றுவருகின்றனர்.

அதன்படி நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா புளியங்குடியைச் சேர்ந்த இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி திருமால் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கேனில் மறைத்து கொண்டு வந்திருந்த டீசலை தன்னுடைய உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பார்த்த, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரின் உடலில் தண்ணீரை ஊற்றி, அவரை அங்கிருந்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அங்கு மாற்றுத்திறனாளி திருமாலிடம் நாம் பேசிய போது,

"எனக்குச் சொந்த ஊர் பார்த்திபனூர் அருகேயுள்ள பரளை. எனக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகின்ரன. தற்போது என் மனைவி, ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தையுடன் முதுகுளத்தூரில் எனது மனைவி வீட்டில் வசிக்கிறேன். என் மனைவி களையெடுத்து, விறகு வெட்டி என்னையும் எனது குழந்தைகளையும் கடும் சிரமத்துடன் காப்பாற்றிவருகிறார். எனக்கு இரண்டு கால்களும் இல்லாததால் என்னால் எங்கும் சென்று வேலை பார்க்க முடியாது. மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு பலமுறை அலைந்தும் பின்னர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் கொடுத்தார்கள்.

வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். குடும்ப பாரம் முழுவதையும் என் மனைவி சுமப்பதைப் பார்த்து வேதனையாக இருக்கிறது. அதற்காகத்தான் மூன்று சக்கர வாகனம், இலவச வீடு கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துவருகிறேன். தரையில் தவழ்ந்து வந்து மனு அளிக்கும் என்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதிவில்லை, கேவலமாகப் பார்க்கின்றனர்.

யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ முடியாது. என் மனைவி ஒருநாள் வேலைக்குச் செல்லவில்லை என்றாலும் எனது குடும்பமே பட்டினியாகக் கிடக்கும். அதனால் நான் அவரை சிரமப்படுத்தாமல் ஒவ்வொருவரிடமாக உதவி கேட்டுக் கேட்டு மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கிறேன். இதற்கு மேல் என்னால் அலைய முடியாது என்பதால் இப்படிச் செய்துவிட்டேன். இது என் மனைவிக்குத் தெரிந்தால் அவர் துடித்துப்போய், `உதவியும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நான் உன்னைவெச்சு காப்பாத்துறேன்’ என்று சொல்லுவா. இருந்தாலும் 'அவ கஷ்டபடுவதை என்னால் பார்க்க முடியலை. என் குடும்பத்துக்கும் நான் பாரமாக இருக்க விரும்வில்லை.

மாற்றுத்திறனாளி திருமால்
மாற்றுத்திறனாளி திருமால்

எனக்கு உதவி செய்ய முடியவில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கருணைக்கொலை செய்துவிடுங்கள்” எனக் கதறி அழுதார். இதைப் பார்த்த போலீஸார், அவரது கோரிக்கைகளை சொல்ல சொல்ல மனுவாக எழுதி திருமாலை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் திருமாலுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

பின்னர் போலீஸார், இது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என திருமாலை எச்சரித்து பேருந்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பிவைத்தனர்.