Published:Updated:

தஞ்சாவூர்: `எனக்குக் கால் கொடுத்தது கலெக்டர்... கரம் கொடுத்தது ஜூ.வி!' - நெகிழ்ச்சியில் விவசாயி

விவசாயி சோமசுந்தரம் ( ம.அரவிந்த் )

விவசாயி சோமசுந்தரம் தானாக எழுந்து நிற்கவே பல மாதங்கள் ஆகும் என்ற நிலை இருக்க வீடு, சாப்பிட வழியுமில்லாத சூழ்நிலையில் கடந்த வருடம் பரவிய கொரோனா பரவலைக் காரணம் காட்டி சிகிச்சை முடிவதற்கு முன்பாகவே மருத்துவமனை அவரை வீட்டுக்கு அனுப்பியது.

தஞ்சாவூர்: `எனக்குக் கால் கொடுத்தது கலெக்டர்... கரம் கொடுத்தது ஜூ.வி!' - நெகிழ்ச்சியில் விவசாயி

விவசாயி சோமசுந்தரம் தானாக எழுந்து நிற்கவே பல மாதங்கள் ஆகும் என்ற நிலை இருக்க வீடு, சாப்பிட வழியுமில்லாத சூழ்நிலையில் கடந்த வருடம் பரவிய கொரோனா பரவலைக் காரணம் காட்டி சிகிச்சை முடிவதற்கு முன்பாகவே மருத்துவமனை அவரை வீட்டுக்கு அனுப்பியது.

Published:Updated:
விவசாயி சோமசுந்தரம் ( ம.அரவிந்த் )

ஒரத்தநாடு அருகே விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் வீடு இடிந்து விபத்துக்குள்ளானதில் கால் சிதைந்து பாதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை முடிவதற்குள்ளேயே கொரோனாவைக் காரணம் காட்டி அவரை அரசு மருத்துவமனை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பியது. இதனால் ஒரு வருடத்துக்கு மேலாக கடும் துயரங்களைச் சந்தித்துவந்த அந்த விவசாயிக்கு ஜூ.வி ஆக்‌ஷன் மூலம் நல்லது நடந்திருக்கிறது. முடங்கிக்கிடந்த அவர் சிகிச்சை முடிந்து மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கிறார்.`எனக்குக் கால் கொடுத்தது கலெக்டர், கரம் கொடுத்தது ஜூ.வி’ என நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிவருகிறார் அவர்.

சிகிச்சை முடிவதற்கு முன்பே வீட்டில் சோமசுந்தரம்
சிகிச்சை முடிவதற்கு முன்பே வீட்டில் சோமசுந்தரம்

ஒரத்தநாடு அருகேயுள்ள புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரின் மனைவி சுசீலா. இவர்களுக்கு சுகுமாறன், சுந்தர் எனப் பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவனும் மனைவியும் விவசாயக் கூலி வேலை செய்துவந்தனர். அதுதான் குடும்பத்துக்கான ஆதாரம். குறைந்த வருமானமே வந்தாலும் மகிழ்ச்சிக்கு எந்தக் குறையுமில்லாமல், தனது தாத்தாவால் கட்டப்பட்ட பழுதடைந்த பழைய கான்கிரீட் வீட்டில் சோமசுந்தரம் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில் 2019-ல் தொடக்கத்தில் கனமழை பெய்தது. நான்கு பேரும் வீட்டுக்குள் அசந்து தூங்கிக்கொண்டிருந்த அதிகாலை நேரத்தில், மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த வீடு இடிந்து விழுந்தது. வீட்டுக்குள் இருந்தவர்கள் உயிர் பிழைப்பதே கேள்விக்குறிதான் என்ற நிலை. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த நான்கு பேரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மகன்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாகப் பெரிய காயங்களின்றி தப்பினர். சோமசுந்தரத்தின் வலது கால் நசுங்கியது. அவர் மனைவி சுசீலாவுக்குக் கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு நடந்த சம்பவங்கள், `பொழச்சுட்டோம்’ என நிம்மதியடைவதற்கு பதிலாக, `ஏண்டா உயிர் பொழச்சோம்...’ என நினைத்து மனம் வெதும்புகிற நிலைமைக்கு சோமசுந்தரமும் அவரது குடும்பமும் தள்ளப்பட்டதுதான் வலியின் உச்சம்.

காலில் கம்பி கட்டப்பட்ட நிலையில் சோமசுந்தரம்
காலில் கம்பி கட்டப்பட்ட நிலையில் சோமசுந்தரம்

சோமசுந்தரத்தின் காலின் வெளிப் பகுதியில் முழங்காலிலிருந்து பாதம் வரை நான்கு வட்ட விடிவிலான கம்பிகளும், நான்கு நீளக் கம்பிகள் பொருத்தப்பட்டு, ஒரு வருடத்துக்கு மேலாகவே சிகிச்சை தொடர்ந்துவந்திருக்கிறது. சோமசுந்தரம் தானாக எழுந்து நிற்கவே பல மாதங்கள் ஆகும் என்ற நிலை. வீடு, சாப்பிட வழியுமில்லாத சூழல். இந்தநிலையில் கடந்த வருடம் பரவிய கொரோனாவைக் காரணம் காட்டி சிகிச்சை முடிவதற்கு முன்பாகவே மருத்துவமனை நிர்வாகம் சோமசுந்தரத்தை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சார், என்னோட கால் குணமாகுமா, பழையபடி நான் எழுந்து நடப்பேனா என்பதே சந்தேகமா இருக்கு. நான் வேலைக்கு போனாத்தான் வீட்டுல அடுப்பெரியும்கிற நிலைமை. எனக்கு இருக்க வீடுமில்லை. இப்ப என்னை வெளியே அனுப்புனீங்கன்னா எங்கே போவேன்... என் கால் சரியான பெறகு என்னைய அனுப்புங்க. எப்படியாவது நான் பொழச்சுக்குவேன்” என அவர் கதறியது யார் காதிலும் விழவில்லை. வேறு வழியில்லாமல் மருத்துவமனையிலிருந்து வந்தவர் சில்லத்தூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கினார். கம்பி பொருத்தப்பட்ட காலுடன் அடுத்த ஆறு மாதங்கள் அவர் அடைந்த வேதனையையும், வலிகளையும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சோமசுந்தரத்தைப் பற்றிய தகவல் ஜூ.வி-க்கு வர உடனே வீட்டுக்குச் சென்றோம்.

மீண்டும் சிகிச்சையில்...
மீண்டும் சிகிச்சையில்...

வலி தாங்க முடியாமல் கட்டிலில் முனகிக்கொண்டே படுத்திருந்தார். காலில் கம்பி பொருத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. மனைவியும் மகன்களும் அருகில் நின்று கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர். அவரின் நிலைமையைப் பார்த்து அவரின் உறவினர்களும் கண்கலங்கினர். நடந்ததை நம்மிடம் சொல்லக்கூட முடியாத அளவுக்கு அவர் அவஸ்தைகளை அனுபவித்ததை நாம் கண்கூடாகப் பார்த்தோம். சோமசுந்தரத்தின் நிலையை அங்கிருந்தபடியே தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவுக்குத் தெரியப்படுத்தினோம்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டு, மனம் கலங்கிய கலெக்டர், உடனடியாக ஒரத்தநாடு தாசில்தாரை சோமசுந்தரம் தங்கியிருந்த வீட்டுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தார். அதன் பிறகு நடந்தவை அனைத்தும் சோமசுந்தரத்துக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கே நம்பிக்கை கொடுப்பவையாக அமைந்தன. ஜூ.வி முயற்சியில் மறுபடியும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோமசுந்தரம் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். கலெக்டர் கோவிந்தராவ், தன் நிதியிலிருந்து ரூ.50,000 பணத்தை சோமசுந்தரத்தின் மனைவி சுசீலாவிடம் வழங்கினார். சுமார் இரண்டு வருடங்களாக முடங்கிக்கிடந்தவர்களுக்கு அந்தப் பணம் பெரும் உதவியாக இருந்தது.

சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு...
சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு...

நீண்ட போராட்டத்துக்கும், சிகிச்சைக்கும் பின்னர் அவருடைய கால் மெல்ல சரியானது. எட்டு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி நீக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது தானாகவே எழுந்து நிற்கிறார். வாக்கர் ஸ்டிக்கைப் பிடித்துக்கொண்டு தானாகவே நடக்கிறார். அவரது வீட்டில் எல்லோர் முகத்திலும் மெல்ல மகிழ்ச்சி எட்டிப்பார்க்கிறது. `ஜூ.வி-லேருந்து நீங்க வந்து பார்க்கும் வரை குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் எல்லோரும் இருந்தோம். யார் செஞ்ச புண்ணியமோ, நீங்க வந்தீங்க...” என்று உணர்ச்சி பெருக்கெடுக்கப் பேசினார் சோமசுந்தரம்.

``வீடு இடிஞ்சு விழுந்ததில் என் மகன்களுக்கு அடிபடலைங்கறதுதான் எனக்கிருந்த ஒரே நிம்மதி. என் மனைவிக்குத் தலையிலும் கையிலும் அடிபட்டுச்சு. அவளுக்கு கையில பிளேட்வெச்சு ரெண்டு மாசத்துக்குப் பெறவு சரியாகிடுச்சு. எனக்குக் காலின் அடிப் பாதம் நொறுங்கிருச்சு. முழங்காலுக்கு கீழே செதஞ்சுடுச்சு. தொடைப் பகுதியிலருந்து சதையையும், முழங்கால் பகுதியிலருந்து லேசாக எலும்பையும் எடுத்துவெச்சு ஆபரேஷன் செஞ்சாங்க. சப்போர்ட்டுக்காக வட்டமான கம்பிகளைவெச்சு கட்டியிருந்தாங்க. அதுவே காலுல பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வெச்சிருக்குற மாதிரி இருக்கும்.

விவசாயத் தொழிலாளி சோமசுந்தரம்
விவசாயத் தொழிலாளி சோமசுந்தரம்

முன்ன மாதிரி நடக்க முடியும், கால் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையே எனக்கு விட்டுப்போச்சு. கவலை சூழ்ந்திருந்த நெலைமையில கொரோனா பரவியதால் என்னைய வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல குடும்பமே மருத்துவமனையில் முடங்கியதால சாப்பாட்டுக்கும் வழியில்லை. மனைவியோட தம்பி அப்பப்ப தன்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சார். ஒவ்வொரு மாசமும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குப் போவணும். கம்பி கட்டப்பட்டிருந்ததால கார்லதான் போக முடியும். அதுக்கே 4,000 ரூபா வரைக்கும் செலவாகும். அதுக்காக அக்கம் பக்கத்துல கடன் வாங்கிச் செலவழிச்சோம்.

கையில பிளேட்வெச்சுருந்ததால என் மனைவியால என்னையத் தாங்கிப் பிடிக்க முடியாது. என் ரெண்டு பசங்களும் என்னைத் தாங்கிக்கப் படாதபாடு பட்டாங்க. இனி என்ன செய்யப்போறோம்னு நெனச்சா ராத்திரியில தூக்கமே வராது. சாப்பாட்டுக்கே வழியில்லாத நெலைமைக்குப் போயிட்டோம். உதவிக்காக அ.தி.மு.க-வின் அப்போதைய எம்.பி வைத்திலிங்கத்திடம் மனு கொடுத்தேன். எந்தப் பலனும் இல்லை. ஒரத்தநாடு வந்த அப்போதைய உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்கிட்ட உதவி கேட்க, கார் எடுத்துக்கிட்டு போய் காலில் ரத்தம் வழிந்த நெலைமையில கால் கடுக்க நின்னேன். என்னைப் பார்த்த அவர் கையில 3,000 பணத்தைக் கொடுத்து, நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிவிட்டுப் போனதோடு சரி. எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆஸ்பத்திரிக்குப் போகக் காசும் இல்லை. காலுக்குள் கம்பி பொருத்தப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வழிஞ்சு கால் கறுத்துப்போயிடுச்சு. எனக்குக் காலையே எடுக்க வேண்டிய நிலை வந்துடுமோன்னு பயம் அதிககிடுச்சு. நம்ம பிள்ளைகளோட எதிர்காலம் என்னவாகும்னு கவலை வந்துடுச்சு. ஒவ்வொரு நாளும் நரகத்துல இருக்கறது மாதிரியான உணர்வை அனுபவிச்சேன்.

மனைவி மகனுடன் சோமசுந்தரம்
மனைவி மகனுடன் சோமசுந்தரம்

கண்முன்னே பொண்டாட்டி, பிள்ளைகள் கண்ணீர் வடிக்கறதைப் பார்க்குற தைரியமும் எனக்கு இல்லை. சரின்னு ஒரு முடிவுக்கு வந்தப்பதான் நீங்க வந்தீங்க... என்னோட நெலைமையை கலெக்டர் சார் கவனத்துக்குத் தெரியப்படுத்தின பிறகு நான் நடந்துடுவேன்னு எனக்கு லேசாக நம்பிக்கை துளிர்விட்டுச்சு. என்னைய சிகிச்சைக்காகச் சேர்த்தது தொடங்கி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிற வரை கலெக்டர் என்மீது காட்டின அக்கறை அளப்பரியது. இப்போ 90 சதவிகிதம் கால் குணமாகிடுச்சு. தனியாகவே நடக்கிறேன். `எனக்குக் கால் கொடுத்தது கலெக்டர். அதற்குக் கரம் கொடுத்தது ஜூ.வி’ன்னு சொன்னா மிகையாகாது.

இப்போ இருக்குறதுக்கு வீடு இல்லை. வருமானத்துக்கும் வழியில்லை. என்னாலயும், என் மனைவியாலயும் கடினமான வேலை எதுவும் செய்ய முடியாது. அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்படுற தொகுப்பு வீட்டை எங்களுக்குக் கட்டி கொடுக்கவும், வருமானம் வருவதற்கு ஏற்பாட்டையும் செஞ்சா காலைச் சரிசெஞ்சு நடக்கவெச்ச மாதிரி கஷ்டமில்லாம என் குடும்பமும் நடந்துரும். அதற்கு ஒரு ஏற்பாடு செஞ்சிடுங்க’’ என்று கூறி, அதுவும் நடக்கும் என்ற நம்பிக்கையோடு, கண்ணீர்மல்க ஜூ.வி-க்கும் கலெக்டருக்கும் நன்றி கூறினார்.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

கலெக்டர் கோவிந்தாரவிடம் பேசினோம். ``சோமசுந்தரம் குணமாகி நடப்பது மகிழ்ச்சிக்குரியது. அவரின் சிகிச்சைக்காக டாக்டர்கள் ரொம்பவே மெனக்கெட்டனர். அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அவர் எதிர்பார்ப்பதுபோலவே அரசு சார்பில் வீடு கட்டிக்கொடுக்கவும், அவருடைய வாழ்வாதாரத்துக்கான ஏற்பாட்டைச் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism