Published:Updated:

கோடி ரூபாய் யார்கிட்டதான் இல்லை..? வேலுமணியின் ரெய்டு சொல்லும் உண்மைகள்!

வேலுமணி
வேலுமணி

சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டால் இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இந்நேரத்தில், சாம்பிளாக சில தலைவர்களின் சொத்து விவரங்கள்... அதாவது அவர்களே தங்களிடம் இவ்வளவு இருக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது மட்டும் உங்கள் பார்வைக்கு...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எஸ்.பி.வேலுமணி... திரும்பிய பக்கமெல்லாம் இதுவே தற்போது பேச்சாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த அ.தி.மு.க-வின் இந்த எஸ்.பி.வேலுமணி மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. தற்போது ஆட்சி மாறியதும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக இவரை வளைக்க ஆரம்பித்துள்ளது. வேலுமணிக்குச் சொந்தமான இடங்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் ஏகப்பட்ட சொத்துக்களை குவித்திருப்பதாகக்கூறித்தான் தற்போது ரெய்டு நடக்கிறது.

வேலுமணி மட்டுமல்ல, கடந்தகால அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பலருமே சொத்துக்குவித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் ஓடிக்கொண்டுள்ளன.
அதேசமயம், கடந்த காலத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கு, சோதனைக்கு ஆளானவர்கள்தானே என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார்கள் அ.தி.மு.க-வினர்.
பரஸ்பரம்... நூறு கோடி, இருநூறு கோடி, ஆயிரம் கோடி என்று ஆளாளுக்கு ஒரு கணக்கைச் சொல்லி தலை சுற்றவைக்கிறார்கள்.

எஸ்.பி. வேலுமணி வீடு
எஸ்.பி. வேலுமணி வீடு
`மொத்தம் 100 பேருக்குக் குறி!’ - எஸ்.பி.வேலுமணி ரெய்டு பின்னணி..!

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இந்தத் தலைவர்கள் எல்லாம் தேர்தலின்போது தாக்கல் செய்யும் சொத்துக்கணக்கைப் பார்த்தால், அப்படியொன்றும் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததுபோல் தெரியவில்லையே என்று சொல்லும் அளவுக்கே இருக்கிறது அவர்கள் அந்த அஃபிடவிட்டில் குறிப்பிட்டிருக்கும் தொகைகள். அதேசமயம், விவசாயி, பொதுச்சேவகர் போன்றவற்றையே தங்களின் தொழிலாகக் குறிப்பிட்டிருக்கும்சூழலில், இவர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த சில கோடிகளே மலைக்க வைப்பதாகத்தான் இருக்கின்றன.

சாம்பிளாக சில தலைவர்களின் சொத்து விவரங்கள், அதாவது அவர்களே தங்களிடம் இவ்வளவு இருக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது மட்டும் உங்கள் பார்வைக்கு... மற்றவை உங்கள் கணிப்புக்கே!

மு.க.ஸ்டாலின், 2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறார். அந்த ஆண்டு மட்டும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்த மூன்று தேர்தல்களிலும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது முதலமைச்சர் அவருடைய சொத்துக்கணக்கு இதோ...

மு.க.ஸ்டாலின் (பொதுசேவகர்)

2006 - ரூ. 1.5 கோடி
2011 - ரூ. 2.11 கோடி
2016 - ரூ. 5.84 கோடி
2021 - ரூ. 8.88 கோடி

பொதுச்சேவையை தொழிலாகக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினின் சொத்துக் கணக்கு... ஆண்டுக்கு ஆண்டு ஏறுமுகமாகவே இருக்கிறது. ரூ. 1.5 கோடியில் தொடங்கியது, பதினைந்து ஆண்டுகளில் ரூ. 8.88 கோடியாக உயர்ந்திருக்கிறது.
பொதுச்சேவகரால்கூட இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பது ஆச்சர்யமான விஷயமே. இந்த வித்தையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தால், தமிழகம் கடனில் மூழ்காமல் காப்பற்ற உதவியாக இருக்கும்!

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, விவசாயி. அதாவது இவருடைய தொழில் விவசாயம். 2006-ம் ஆண்டில் அந்தத் தொகுதியில் தோற்றுப்போனார். அதற்கடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றியே! இதோ அவருடைய சொத்துக்கணக்கு...
எடப்பாடி பழனிசாமி (விவசாயி)
2006 - ரூ. 1.39 கோடி
2011- ரூ. 3.67 கோடி
2016- ரூ. 7.80 கோடி
2021- ரூ. 6.70 கோடி

2006ல் ரூ. 1.39 கோடியில் ஆரம்பித்தவர், அடுத்த ஆண்டே கூடுதலாக இரண்டு கோடி சேர்த்துள்ளார். அதற்கடுத்த ஆண்டு கூடுதலா நான்கு கோடி. ஆனால், சமீபத்திய தேர்தலில், ஒரு கோடி ரூபாய்க்கான சொத்துக்கள் குறைந்துவிட்டன. பாவம் நிறைய செலவு செய்துவிட்டார் போல. ஆயிரம் இருந்தாலும் முன்னேற்றமே. அதிலும் விவசாயத்தில் இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பதை மற்ற விவசாயிகளுக்கும் சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.கவைச் சேர்ந்த கே.என் நேரு, தன்னை விவசாயி மற்றும் தொழிலதிபர் என்று அறிவித்திருக்கிறார். திருச்சி நகரில் தொடர்ந்து போட்டியிடும் இவர், 2011-ம் ஆண்டு மட்டும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
2006 - ரூ. 2.79 கோடி
2011- ரூ. 17.77 கோடி
2016- ரூ. 3.75 கோடி
2021- ரூ. 3.93 கோடி

ரூ. 2.79 கோடியில் கணக்தைத் துவங்கும் இவர், அப்போது தி.மு.க சார்பில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது அந்த ஆட்சி முடிவுக்கு வந்த 2011-ம் ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு ரூ. 17.77 கோடியாக உயர்ந்துவிட்டது. அதாவது 6 மடங்கு கூடுதலாக உயர்ந்துள்ளது.

கே.என் நேரு
கே.என் நேரு

ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அப்படியே கிட்டத்தட்ட அதே அளவுக்கு சரிந்தும் உள்ளது. தற்போது இவர் உள்ளாட்சித் துறை அமைச்சர். அதாவது, எஸ்.பி. வேலுமணி கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் வகித்து வந்த அதே பதவிதான். அடுத்த ஐந்தாண்டின் முடிவில் ரெய்டு வரும் அளவுக்கு சொத்து மதிப்பு மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சரி, தற்போது ரெய்டில் சிக்கியிருக்கும் எஸ்.பி.வேலுமணி விஷயத்துக்கு வருவோம். இவர் தன்னை விவசாயி என்று வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். கோவை பகுதியில் தொடர்ந்து வெற்றிமுகம் காட்டிவருபவர்.
2006 - ரூ. 32.3 லட்சம் (வெற்றி)
2011 - ரூ. 2.62 கோடி (வெற்றி)
2016 - ரூ. 4.01 கோடி (வெற்றி)
2021 - ரூ. 5.59 கோடி (வெற்றி)
2006-ல் ரூ. 32 லட்ச ரூபாயுடன் கணக்தைத் தொடங்கியவர் 15 ஆண்டுகளில் ரூ. 5.59 கோடியில் வந்து நிற்கிறார்.

வேலுமணி
வேலுமணி
டீ முதல் டிபன் வரை..! - ரெய்டுக்கு வேலுமணி தயாரானது எப்படி?

ஆனால், தற்போது ரெய்டு நடத்தப்படுவதாக சொல்லப்படும் இடங்கள், நபர்கள் எல்லாவற்றையும் வைத்துக் கணக்குப் போட்டால், 2ஜி ரேஞ்சுக்கு பேச்சுகள் றெக்கை கட்டுகின்றன. இந்நிலையில், இந்த 5 கோடியெல்லாம் ஒரு தொகையா என்று கேட்கிறீர்களா... அதுவும் சரிதான்.

சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாஸிட், மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட், தங்க முதலீடு இது எல்லாற்றையும் மிஞ்சிய முதலீடு... அரசியல்தான். என்ன, எல்லோருக்கும் அது வாய்த்துவிடுவதில்லை.
வாழுங்கள் தலைவர்களே!

- விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு