Published:Updated:

`கைகூப்பிக் கேட்டுக்கறேன், வீட்டுல இருங்க!’ -தனிமைப்படுத்திக்கொண்ட டி.எஸ்.பியின் உருக்கமான பதிவு

காவல் அதிகாரியின் கார்
காவல் அதிகாரியின் கார் ( Representational image )

இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் தனது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட சிதம்பரம் டி.எஸ்.பி உருக்கமான ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி காவல் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தக் காவல் நிலையம் மூடப்பட்டது. அதையடுத்து அந்தப் பெண் இன்ஸ்பெக்டரின் கணவர், சிதம்பரம் டி.எஸ்.பி ஆக பணியாற்றி வருகிறார். அவரும், அவரது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆடியோ பதிவு மூலம் அவர் வெளியிட்டிருக்கும் உருக்கமான வேண்டுகோள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா விழிப்புணர்வு பாடலை வெளியிடும் டி.எஸ்.பி
கொரோனா விழிப்புணர்வு பாடலை வெளியிடும் டி.எஸ்.பி

அந்த ஆடியோ பதிவில், “சிதம்பரம், புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எனது காலை வணக்கம். ஒருசில வருத்தங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி உண்மையில் நான் சந்தோஷப்படுகிறேன். எனக்கு பிரச்னை என்றவுடன் நேற்றிலிருந்து எனக்கு போன் செய்து பேசினீர்கள். எனக்காக வருத்தப்பட்டீர்கள். எனக்காக வேண்டிக்கிட்டீங்க. இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?

கொரோனா
கொரோனா

உங்களின் அன்பாலும், கடவுளின் அருளாலும் எனக்கு எந்தவித தொற்றும் இல்லை. நேற்று எடுத்த பரிசோதனையில் எனக்கும், என் குழந்தைக்கும் எந்தவித தொற்றும் இல்லை. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். அதுமட்டுமல்லாமல் கடந்த 18-ம் தேதியும் நான் பரிசோதனை செய்தேன். அதிலும் எனக்கு எந்தவித தொற்றும் இல்லை.

அந்தவகையில் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் எங்கள் பணி சவால்கள் நிறைந்தது. உங்களுக்கு தெரியாதது இல்லை. பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். பலரைச் சந்திக்க வேண்டும். ஆனாலும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது, சமூக இடைவெளி என அனைத்தையும் கடைப்பிடித்தேன். இந்நிலையில்தான் கடந்த வாரம் எனது மனைவியைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

கோவிட் -19 கொரோனா வைரஸ்
கோவிட் -19 கொரோனா வைரஸ்

அவர்களும் காவல் இன்ஸ்பெக்டர்தான். வாணியம்பாடியில் பணி புரியும் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் கொரோனா தொற்று இருந்தது. எனக்கு அப்போது தெரியவில்லை. நேற்று கூறியவுடன் அவர்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார்கள். நானும் என்னைத் தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டேன்.

அதனால் இதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கொரோனா தொற்று பெரிய பிரச்னை இல்லை. அது நமக்கு வராது என்று சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. இதையே நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் பாதுகாப்பாக இல்லாமல் இருந்தால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அரசாங்கம் கூறுவது போல அனைவரும் வீட்டிலேயே இருங்கள். விலகி விழிப்புடன் இருங்கள். அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். புதியதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் அனுமதிச் சீட்டு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

`ப்ளீஸ் நீங்க கொஞ்சம் வீட்ல இருங்க..’- சிறுமியின் உருக்கமான பதிவு #Viral #Corona

வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வெளியே வாருங்கள். மற்ற நாள்களில் வீட்டிலேயே இருங்கள். கொரோனா தொற்று நம் நாட்டைவிட்டு முழுமையாக வெளியேறும்வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும். அதற்கு பொதுமக்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தால்தான் நாம் அதிலிருந்து மீண்டு வர முடியும்.

இந்தத் தொற்றுக்கு மருந்து இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தொற்றின் விளைவுகள் குறித்து நீங்கள் ஆழமாகத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுகூட நல்லதுதான். ஆனால் நீங்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புடன் இருந்தால் கொரோனா தொற்று குறித்து நீங்கள் கவலையே படவேண்டாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதனால் அரசு உத்தரவை மதித்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தற்காத்துக்கொள்ளுங்கள் என்று மன்றாடி, இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள். வீட்டில் இருங்கள். விலகி இருங்கள். விழிப்புடன் இருங்கள். நான் மறுபடியும் உங்களுக்காகப் பணியாற்ற வருவேன். மீண்டும் வருவேன். மீண்டு வருவேன். கட்டாயம் வருவேன் நன்றி” என்று முடித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு