Published:Updated:

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன் செய்த தவறுகளும், நமக்கான முன்னெச்சரிக்கைகளும்! - ஒரு பார்வை!

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுமிகளை மிகவும் ஆபாசமாகப் பேசியதாகவும், மோசடியாக நிதி வசூல் செய்ததாகவும் யூடியூபர் மதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் நடந்த தவறுகள் என்னென்ன, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

யூடியூபில் மதன் என்பவர், சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை மதன் என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இந்தச் செயல் அவரின் பக்கத்துக்கு அதிக பார்வையாளர்களை இழுத்து வந்தது. அவரின் யூடியூப் பக்கத்தை 7.8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தனர்.

யூடியூபர் மதன்
யூடியூபர் மதன்

இந்தப் பார்வையாளர்களில் பெரும்பாலானோரும் சிறுவர், சிறுமிகள். ஒரு கட்டத்தில், 'டாக்ஸிக்' மதன் 18+ என்ற யூடியூப் பக்கத்தை ஆரம்பித்த மதன், இந்த பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சிறுமிகளைத் திட்டிவந்தார். இவரின் இந்தச் செயல்பாடுகள் பலரிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன என்பதுதான் வருத்தமான செய்தி. அதோடு, நிதி வசூல் என்ற பெயரில் நிதி மோசடி செய்ததாகவும் இவரின் மேல் புகார் எழுந்துள்ளது.

சிறுமிகள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்புகொள்ள, அவர் அந்தச் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதன் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

`நீங்க என்மேல என்ன புகார் வேணும்னாலும் கொடுத்துக்கோங்க. என்கிட்ட இருக்கிற காசும், என் லாயரும் எல்லாத்தையும் பார்த்துப்பாங்க’ என்று சர்வ சாதாரணமாகக் கூறியிருக்கிறார் மதன். அதோடு தன்மீது கூறப்படும் அனைத்துப் புகார்களையும் முற்றிலுமாக மறுத்திருக்கிறார் அவர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அவரை சென்னை புளியந்தோப்பிலுள்ள சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணைக்கு மதன் வராத நிலையில் அவரைக் கைதுசெய்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்து, அதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அவர்மீது புகாரளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுப்பெறுகின்றன. மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் அந்த நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மதன் செய்தது என்ன?

இப்படி ஆன்லைன் கேமில் ஆபாசமாகப் பேசுவது மதன் மட்டும் கிடையாது. இப்படித் தரக்குறைவாகப் பேசும் நபர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். ஆனால், மதனின் பக்கத்தைப் பின்தொடர்ந்த பலரும் சிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். மதனின் செயலைப் பார்த்து அவரைப் போலவே 18+ யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து நடத்தும் சிறுவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துவருகிறது.

சிந்து யூடியூப் பக்கம்
சிந்து யூடியூப் பக்கம்

சிந்து போன்ற சில பெண்களும் `கேமிங் பக்கம்’ என்ற பெயரில் 18+ பக்கத்தை ஆரம்பித்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசும் செயல்களும் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பல சிறுவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது என்றுதான் பப்ஜி போன்ற விளையாட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இருந்தபோதிலும், மதன் போன்ற சிலர் வி.பி.என் பக்கத்தைப் பயன்படுத்தி விளையாடுவது மட்டுமல்லாமல், மேலும் பல சிறுவர்களையும் விளையாடத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய சூழலில் பெரும்பாலான பள்ளிச் சிறுவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனைப் பயன்படுத்திவருகிறார்கள். சிறுவர்கள் பலரும் ஆன்லைன் வகுப்புகளை மட்டுமல்லாமல், மொபைலில் கேம் விளையாடுவது, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது, டிக்டாக் , யூடியூப் பார்ப்பது என்று பல்வேறு செயல்களையும் செய்கிறார்கள். சிறுவர்கள் மதன் போன்றவர்களின் வீடியோக்களைக் கண்டு திசைமாறிப் போவதோடு, பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

மதன் போன்றவர்கள் இப்படியான செயலைச் செய்வதற்கு என்ன மாதிரியான மனநிலை காரணம், மற்ற சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம். `` தீயதைச் செய்து மிக எளிமையாகப் பெயர் சம்பாதித்துவிடலாம். தற்போது மதன் செய்ததும் அதேதான். ஆனால், அப்படிச் சம்பாதித்த பெயரும் புகழும் நீண்டநாள் நிலைக்காது. அது ஒருநாள் அவர்களுக்கு ஆபத்தில் சென்று முடியும் என்பதை உணரவில்லை. இது போன்றவர்கள் பலரும் செய்யும் தவறு என்னவென்றால். தாங்கள் செய்துகொண்டிருப்பதைத் தவறு என்று தெரியாமல் செய்வதுதான்.

Dr T.V.அசோகன்,
மனநல மருத்துவர்
Dr T.V.அசோகன், மனநல மருத்துவர்

தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம், எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். பெரியவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சிறுவர்கள் கையில் அதீத தொழில்நுட்பத்தைக் கையில் கொடுக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது முழுக்க முழுக்க பெற்றோர்களின் கடமை மட்டுமே. ஒருபுறம் குழந்தையின் கையில் மொபைல்போனைக் கொடுத்துவிட்டு, மறுபுறம் அப்பாவும் அம்மாவும் மொபைல்போனை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கும் இடத்தில்தான் எல்லா பிரச்னைகளும் ஆரம்பமாகின்றன. நமது குழந்தை என்ன செய்கிறது, எந்த மாதிரியான சூழலில் வளர்கிறது, அவர்களின் நண்பர்கள் எப்படி, மொபைலில் என்ன பார்க்கிறார்கள், யாரோடு பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது பெற்றோர்களே... குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச் சுதந்திரம் கொடுக்கலாம். ஆனால், அந்தச் சுதந்திரமே அவர்கள் வேறு வழிக்குச் செல்வதற்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது." என்று பேசினார்.

மதன் செய்த தவறுகள் என்னென்ன, மற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பிரபல யூடியூபர் ஒருவரிடம் கேட்டபோது, `` மதன் மட்டும் இல்லை. கெட்ட வார்த்தைகளைப் பல யூடியூபர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த வார்த்தைகளை எங்கு பயன்படுத்துகிறோம், எதற்கு பயன்படுத்துகிறோம், யாரிடம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பெரும்பாலான யூடியூபர்கள் கெட்ட வார்த்தை பேசும்போது, அதை பீப் பயன்படுத்தித்தான் வீடியோவாக வெளியிடுவோம். ஆனால், மதன் செய்ததோ அவரின் லைவில் அவரை யாரேனும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவரை மட்டுமல்லாமல், கேட்டவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவது. உண்மையில் சொல்லப்போனால், மதன் போன்றவர்கள் மிகவும் வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக இருப்பவை, மிகவும் பிரபலமான சிலரின் தொடர்புகளும், அவர்களின் மூலம் மதனுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமும்தான். தொடர்ச்சியாகச் சிலர் கொடுத்த அங்கீகாரத்தின் விளைவுதான் இவை அனைத்தும்" என்றார்.

மேலும், ``குறிப்பாக மதன் கூறியது, யாராவது அவரின் டாக்ஸிக் மதன் 18+ யூடியூப் பக்கத்தில் 'ஏன் ப்ரோ இவ்வளவு அசிங்கமா பேசுறீங்க, எத்தனை சின்னப் பசங்க உங்க லைவைப் பார்த்துட்டு இருக்காங்க' என்று கேட்டால். கேட்பவர்களை, 'அதுதான் 18+னு போட்டிருக்குதானே... அப்புறம் எதுக்கு இங்க வர்றே... உன்னை யாரு இங்க வரச் சொன்னா? கிளம்பிப் போகவேண்டியதுதானே...' என்று தரக்குறைவாக ஆண், பெண், குழந்தைகள் என்று எந்த பேதமும் இல்லாமல் திட்டிக் குவிப்பது. அந்த லைவைப் பார்க்கும் சிறுவர்களுக்கு என்ன தெரியும், கேம் விளையாடுகிறார்கள் என்றால் அதை ஆர்வமாகப் பார்ப்பார்கள்தான். மதன் தனது யூடியூப் பக்கத்தில் வெறும் 18+ என்று மட்டும் போட்டால், அது அனைத்துத் தரப்பினருக்கும் செல்லத்தான் செய்யும். வீடியோ வெளியிடும்போது, `இது குழந்தைகளுக்கான வீடியோ இல்லை’ என்ற விவரத்தைக் கூறி வெளியிட்டால், அது 18 வயதுக்கும் குறைவானவர்களுக்குச் செல்லாது. அப்படி அவர் போடாததற்குக் காரணம், அந்த வீடியோக்களில் வருவாய் குறைவாகும் என்பதாகக்கூட இருக்கலாம். கணக்கெடுத்துப் பார்த்தால் அவரின் பக்கத்தில் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் குழந்தைகள்தான் வீடியோக்களைப் பார்த்துள்ளார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலத்தில் இப்படிக் கீழ்த்தரமான தவறுகள் செய்யும் நபர்கள் இந்த சமூகத்துக்கே கேடு" என்று கூறினார்.

மதனுக்குக் கிடைக்கப்போகும் தண்டனை, அவருக்கு மட்டும் ஒரு பாடமாக இருக்காது. அவரைப்போலவே வீடியோ வெளியிட்டுவரும் பலருக்கும் பாடமாக இருக்கும். மேலும், இது போன்ற சம்பவங்கள் பின்வரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதையும் உறுதி செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு