Published:Updated:

விருதுநகர்: பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையைத் திருமணம் செய்த இளைஞர்!

ஹரினா - கருப்பசாமி
ஹரினா - கருப்பசாமி

விருதுநகரில், திருநங்கையாக மாறிய ஹரினாவை, ஓராண்டாகக் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. 24 வயதான அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார். பின்னர் தன் பெயரை `ஹரினா ‘ என மாற்றிக்கொண்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரினாவின் தாய் மாமாவின் மகனான, டிரைவர் வேலை பார்த்து வரும் கருப்பசாமியும், ஹரினாவும் கடந்த ஓராண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

ஹரினா - கருப்பசாமி
ஹரினா - கருப்பசாமி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கருப்பசாமி, திருநங்கை ஹரினாவைக் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், பிறகு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் காரியாபட்டியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஹரினாவுக்கும், கருப்பசாமிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தை அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் அனைவரும் இணைந்து நடத்தி வைத்தனர். இதுகுறித்து திருநங்கை ஹரினாவிடம் பேசினோம்.

``சின்ன வயசுலயிருந்தே என்னோட உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுச்சு. என்னை ஒரு பெண்ணா உணர்ந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னால முழுமையான திருநங்கையா மாறினேன். என்னோட தாய்மாமா கந்தசாமியின் மகன்தான் கருப்பசாமி.

ஹரினா - கருப்பசாமி
ஹரினா - கருப்பசாமி

முதலில் அவர்தான் என்னிடம் காதலைச் சொன்னார். திருநங்கையிடம் பேசுவதையே அவமரியாதையா பார்க்கும் நிலையில், என்னை நேசிப்பதாகச் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமாவும், அதிர்ச்சியாவும் இருந்தது. அன்பா பேசுவார், என்கிட்ட அதிக அக்கறை காட்டினார். காதலிச்ச சில மாதங்களிலேயே, `நாம கல்யாணம் செஞ்சுக்குவோமா..?’னு கேட்டார். என்னை அவர் ஏற்றுக்கொண்டாலும் இந்தச் சமூகம் என்ன சொல்லும் என்ற தயக்கம் அதிகமா இருந்துச்சு.

இது சரியா, தப்பான்னு பல நாள்கள் யோசிச்சேன். அவர் எனக்கு தைரியம் கொடுத்தார். பெற்றோர்களின் சம்மதம் கிடைச்சா கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொன்னேன். காதலில் இணைந்த நாங்க, நினைச்ச மாதிரியே கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்” என்றார்.

திருமண கோலத்தில் மணமக்கள்
திருமண கோலத்தில் மணமக்கள்

மணமகன் கருப்பசாமியிடம் பேசினோம். ``ஹரினா பொறுப்பானவ. அவளோட அமைதி, இரக்கம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இதெல்லாம்தான் அவள் மேல ப்ரியத்தை ஏற்படுத்தியது. அது காதலா மாறிச்சு. அவ மேல எனக்குக் காதல் வந்தபோதே, கல்யாணம் செஞ்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். `ஒரு திருநங்கையைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்’னு வீட்ல பெற்றோரிடம் சொன்னேன்.

`என்னல சொல்லுற… உனக்கு புத்தி கெட்டுப் போச்சா? இந்த ஊரு உலகம் என்ன பேசும் தெரியுமா?’னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா, என்னோட முடிவை உறுதியா சொல்லிட்டேன். பல நாள்கள் என்கிட்ட பேசாமலே இருந்தாங்க. உறவினர்களும் என்னை ஏளனமா பேசினாங்க. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பெத்தவங்களை சமாதானப்படுத்தினேன். ஹரினா வீட்டுலயும் பேசி ரெண்டு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணத் தேதியைக் குறிச்சோம். ஆண்டவன் புண்ணியத்துல கல்யாணமும் நல்லபடியா நடந்துச்சு.

மணமக்கள்
மணமக்கள்

அன்பும், அக்கறையும் உள்ள ஒரு திருநங்கையை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுல ரொம்பப் பெருமைப்படுறேன். கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டுவோம்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

``எங்களில் ஒரு திருநங்கையை உறவுக்கார மாப்பிள்ளையே வாழ்கைத்துணையா ஏற்றுக் கொண்டதையும், இந்தத் திருமணத்துக்கு இரு வீட்டுப் பெற்றோர்களும் சம்மதிச்சதையும் தலை வணங்கி பாராட்டுறோம்” என்றனர் திருமண விழாவிற்கு வந்திருந்த திருநங்கைகள்.

அன்பு கரைகளை உடைக்கும்!

அடுத்த கட்டுரைக்கு