Published:Updated:

`இல்லாத சிபிஐ மாமாவால் திரும்ப வந்த ₹12,000 லஞ்சப்பணம்!' - சத்தாரின் உஷார் அனுபவங்கள் - 2

அரசு அலுவலகத்தில் அன்பளிப்பில்லா சேவையை எதிர்பார்க்க முடியாதுதானே. வேறு வழியில்லாமல் அவருக்கான ஈவுத் தொகையையும் செலுத்தினேன். ஆனால், ஒரு வேலைக்கு இரண்டு தடவை லஞ்சம் என்பதை நம்முடைய மனசாட்சி (இருக்கிறதா என்று தெரியவில்லை) பொறுத்துக் கொள்ளவில்லை.

1990களின் பிற்பகுதி... நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையத்தில் கடை வைத்திருந்தேன். சீனி மொத்த வியாபாரம் செய்வதற்கான லைசென்ஸ் கேட்டு, மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தேன்.
ஒரு நாள், உள்ளூர் தொழிலதிபர் செட்டியண்ணன் (காங்கிரஸ்காரரான இவர், வட்டார நெல் அரிசி வணிகர் சங்கத் தலைவரும்கூட) எனக்கு போன் செய்தார்.
`திருச்செங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி வந்திருக்கார். உங்களை பார்க்கணுமாம். உடனே வாங்க' என்றார்.

அவரது மில்லுக்கு சென்று அந்த அதிகாரியை பவ்யமாகச் சந்தித்தேன். மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு அப்ளை செய்த ஃபைல், அவரிடம் இருந்தது. செட்டியண்ணன் அவரிடம் பேசி முடித்து, 2000 ரூபாய் கொடுக்கச் சொன்னார். அத்தனையும் சரியாக இருந்தாலும், அரசாங்க அதிகாரிக்கு மொய் எழுதித்தானே ஆகவேண்டும். வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு திரும்பினேன்.

இரண்டு மாதங்களாக லைசென்ஸ் வரவில்லை. திருச்செங்கோடு அலுவலகத்துக்கு நேரில் சென்றபோது, அந்த டி.எஸ்.ஓ மாறுதல் செய்யப்பட்டு, புதிய டி.எஸ்.ஓ அமர்ந்திருந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னுடைய ஃபைல் சம்பந்தமாகக் கேட்டேன். அதை எடுத்துக் காண்பித்தவர், ``நாளை ஆய்வுக்கு வருகிறேன்'' என்றார்.

ஏ.ஏ.சத்தார்
ஏ.ஏ.சத்தார்

ஏற்கெனவே இருந்த டி.எஸ்.ஓ.வுக்கு பணம் கொடுத்த விவரம் சொன்னேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. `ஆய்வு செய்தே தீருவேன்' என்றார். அரசு அலுவலகத்தில் அன்பளிப்பில்லா சேவையை எதிர்பார்க்க முடியாதுதானே. வேறு வழியில்லாமல் அவருக்கான ஈவுத் தொகையையும் செலுத்தினேன். ஆனால், ஒரு வேலைக்கு இரண்டு தடவை லஞ்சம் என்பதை நம்முடைய மனசாட்சி (இருக்கிறதா என்று தெரியவில்லை) பொறுத்துக் கொள்ளவில்லை. ஆயிரம் இருந்தாலும், நியாயம் என்று ஒன்று இருக்க வேண்டும்தானே!

வெளியில் வந்து, முன்பு இருந்த டி.எஸ்.ஓ எங்கே இடமாறுதலாகிச் சென்றுள்ளார் என விசாரித்தபோது, மோகனூர் சர்க்கரை ஆலையில் தனி அதிகாரியாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன், `அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கின்றனரா... எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள். சிறப்பு அதிகாரி, சி.பி.ஐ (மத்திய புலனாய்வுத்துறை) ஹாடோஸ் சாலை, சென்னை’ என்ற முகவரியுடன் தொலைபேசி எண்ணும் நாளிதழ் விளம்பரத்தில் பளபளத்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று அந்த முகவரி மற்றும் எண்ணை, டெலிபோன் இன்டெக்ஸின் கடைசி பக்கத்தில் குறித்துவைத்த நினைவு வந்தது.

உடனே, மோகனூர் சர்க்கரை ஆலை தனி அதிகாரிக்குக் கடிதம் எழுதினேன். செட்டியண்ணன் மில்லில் வைத்து அவரைச் சந்தித்தது, கொடுத்தது உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டுவிட்டு, எனக்குப் பணக்கஷ்டமாக இருக்கிறது. எனவே, மேற்கொண்டும் உங்களுக்கு ஏதும் உதவிகள் தேவைப்பட்டால், இந்த முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள் என்று சிபிஐ முகவரியையும் குறிப்பிட்டிருந்தேன். சிபிஐ சிறப்பு அதிகாரியாக இருப்பவர் என்னுடைய மாமா அப்துல் மஜீது என்று இல்லாத மாமாவையும் இணைத்தே அனுப்பியிருந்தேன்.
இரண்டு, மூன்று நாள்கள் கழித்து செட்டியண்ணன் எனக்கு போன் செய்தார்.

Money (Representational Image
Money (Representational Image
எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே! - சத்தாரின் உஷார் அனுபவங்கள் - 1

``இரண்டு நாளில் பணம் கொண்டு வந்து தருகிறேன். நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம் என மோகனூரில் இருந்து தகவல்'' என்று சொன்னார்.
அன்று மாலை என்னுடைய கடைக்கு வந்த செட்டியண்ணன், ``எனக்கும் 10,000 வர வேண்டியுள்ளது. அதைத் திரும்ப வாங்க வழியுண்டா?'' என்று கேட்டார்.
`பார்ப்போம்‘ என அனுப்பிவைத்தேன்.
இரண்டு நாளில் 2000 ரூபாயுடன் வந்தார் மோகனூர் அதிகாரி.
``மீதி 10,000?''
``ஓ... அதுவும் உங்களிடம்தான் வாங்கிக் கொடுத்தாரா?'' என்று அதிர்ந்தவர், ஒரு வாரம் டைம் கேட்டார். பத்து நாளில் செட்டியண்ணன் ஸ்வீட் பாக்ஸுடன் வந்து, நின்றார்
``ஸ்வீட் எடு... கொண்டாடு’

பின்குறிப்பு: இங்கே லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நகர்வதில்லை. அதற்கு நானும் விதிவிலக்கில்லை. ஆனாலும், கொஞ்சம்போல எனக்குள்ளும் போர்க்குணம் உண்டு.

- ஏ ஏ சத்தார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு