Published:Updated:

எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே! - மெடிக்கல் மாஃபியாக்களின் சுரண்டல்கள் - 3

ஊருக்கு வந்ததும் நம் அன்புச் சொந்தங்கள் கூட்டமாக வந்து, `ஆபரேஷன் வேண்டாம்... ஸ்டென்ட் வேண்டாம்' என்றெல்லாம் ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளிப்பார்கள். நாம் நெக்குருகிப் போய் நிற்கும்நேரத்தில்தான் ஆரம்பமாகும்... அந்த `நாகர்கோவில் ஆபத்து'.

நமதூரில் யாருக்காவது நெஞ்சுவலி ஏற்பட்டால், உடனடியாக உள்ளூர் டாக்டரிடம் அழைத்துச் செல்வோம். பெரும்பாலும், `பில்லிங் பார்ட்டி'களாக இருக்கும் டாக்டர்களிடம்தான் சிக்கிக்கொள்வோம் (எப்படிச் சுத்திப்பார்த்தாலும் ஊர்முழுக்க அதிகமாக நிறைந்திருப்பது அவர்கள்தானே!). சோதனைக் கருவிகளைக் கொண்டு சோதனை செய்துவிட்டு, தனக்குப் `புரிந்துணர்'வுள்ள ஏதாவது ஒரு மருத்துவமனைக்கோ மதுரை, திருச்சி, சென்னையிலிருக்கும் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கோ அனுப்பி வைத்துவிடுவார். பசை உள்ள பார்ட்டி என்றால்... ஆம்புலன்ஸ், நர்ஸ், ஆக்ஸிஜன் வசதியுடன் அனுப்பிவைத்து, அதற்கேற்ப கமிஷனும் பார்த்துவிடுவார்.

`புகழ்பெற்ற' மருத்துவமனைக்குச் சென்றதும், தேவையிருக்கிறதோ... இல்லையோ... உடனே 'ஆஞ்சியோ செய்துவிடலாம்' என்று படுக்க வைத்துவிடுவார்கள். ரிசல்ட்டுக்காகப் பக்பக்கென்று காத்திருப்போம்.
``கொஞ்சம் பிரச்னைதான் சார். மூணு பிளாக் இருக்கே. பைபாஸ் செய்ய வேண்டியிருக்கும். இல்லனா, ஸ்டென்ட் வைக்க வேண்டியிருக்கும்'' என்று பக்பக்கை மேலும் எகிற வைப்பார்கள்.

Heart Care (Representatinal Image)
Heart Care (Representatinal Image)
Photo by Karolina Grabowska from Pexels
எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே! - சத்தாரின் உஷார் அனுபவங்கள் - 1

``ஊருக்குப் போய், பணம் தோது பண்ணிட்டு வர்றோம்'' என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். ஆனாலும், 15 தினங்கள் அவகாசம் கொடுத்து, மருந்து, மாத்திரைகளையும் அள்ளிக்கொடுத்து, அதற்கென்று சிலபல ஆயிரங்களை பில் போட்டுத்தான் அனுப்பி வைப்பார்கள். அடுத்த கட்டமாகச் சில பல லட்சங்களுக்கும் அடிபோட்டே அனுப்பி வைப்பார்கள்.

ஊருக்கு வந்ததும் நம் அன்புச் சொந்தங்கள் கூட்டமாக வந்து, `ஆபரேஷன் வேண்டாம்... ஸ்டென்ட் வேண்டாம்' என்றெல்லாம் ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளிப்பார்கள். நாம் நெக்குருகிப் போய் நிற்கும்நேரத்தில்தான் ஆரம்பமாகும்... அந்த `நாகர்கோவில் ஆபத்து'.

நாகர்கோவில் என்றாலே ஆஸ்பத்திரி பெருத்த ஊர் என்பது பலரும் அறிந்ததே! மூத்திர சந்துக்குள்கூட ஒரு மருத்துவமனை கட்டாயம் இருக்கும். இந்த வகையில் அங்கிருக்கும் ஓர் ஆஸ்பத்திரி பற்றியும், யான் பெற்ற இன்பம்... பெறுக இவ்வையகம் என்பதுபோல, அங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கிறார்கள். ஆபரேஷன் இல்லை... ஸ்டென்ட் இல்லை என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து சொல்லி, நாகர்கோவிலுக்கு வண்டி ஏற்றாமல் விடமாட்டார்கள், தமிழகத்தின் எந்த ஊரில் குடியிருந்தாலும். எந்தக் கஷாயத்தைக் குடித்தாவது பித்தம் தெளியட்டும் எனப் பலரின் மனதையும் கொள்ளையடித்த அந்த நாகர்கோவில் மருத்துவமனைக்கு நாமும் சென்றுவிடுவோம்.

இனி, நாகர்கோவிலில் இருந்து நேரடி (அனுபவ) ரிப்போர்ட்...

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நான், காலை 8 மணி வாக்கில் நாகர்கோவில் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தேன். முதலில் முகவரியைக் கேட்டு எழுதிக்கொண்டவர்கள், லேபுக்கு அனுப்பினார்கள். எடுத்ததுமே 1,500 ரூபாய் கட்டியதும், ரத்தம் டெஸ்ட். உடனே ஒரு ரூம் கொடுத்தார்கள். இட்லி மட்டும் சாப்பிடச் சொன்னார்கள். `உள்ளேயே கேன்டீன் இருக்கு. நீங்க வெளியில போய் சாப்பிட்டுடாதீங்க. வெளியில 10 ரூபாய்க்கு கொடுக்கற இட்லியை, அங்க 5 ரூபாய்க்கே கொடுப்பாங்க. மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்' என்று அன்பு உறவுகள் அழுத்தம் கொடுத்துச் சொன்னது, அப்போது நினைவுக்கு வர, வருஷம் 16 (குஷ்பு இட்லி) படத்தையும் நினைத்துக்கொண்டு (அந்தப் படத்தின் ஷூட்டிங் நாகர்கோவில் பகுதியில்தான் நடந்தது-இது பொது அறிவுக்காக), `அடடா' சொன்னபடி சாப்பிட்டு முடித்தேன்.

9 மணிக்கு ஒரு நர்ஸ் வந்து உடலில் உள்ள முடியை அகற்றினார். 11 மணியளவில் அழைத்துச் சென்று ஏ.டி.எம் போன்று இருக்கும் மெஷினுக்கு பின்புறம் படுக்க வைத்தார்கள். ECG வயர் போன்று உடலில் மாட்டி ``ரிலாக்ஸடா இருங்க ரிலாக்ஸ்டா இருங்க'' என்று அவர் சொல்லிக்கொண்டே இருக்க, சிறிது நேரம் படுத்திருந்தேன்.

ECG (representational image)
ECG (representational image)
Pixabay

பிறகு, லெமன் டீ கொடுத்தார். குடித்துவிட்டு ஹாலில் வெயிட் செய்தால், ஒரு துண்டு சீட்டில் ரூ.8,000 என எழுதி நீட்டினார், மருத்துவமனை ஊழியர். கூடவே, ஒரு ஃபார்ம் கொடுத்து, கையெழுத்து கேட்டார்கள். `இந்த ஆஸ்பத்திரியையோ உபகரணங்களையோ சேதப்படுத்த மாட்டேன்' என அதில் எழுதியிருந்தது. `நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ளத்தானே வந்திருக்கிறோம். ஏதோ காலேஜ் ஹாஸ்டல் அட்மிஷன் போல கேட்கிறார்களே' என்று தோன்றியது. ஆனாலும், பொறுத்துக் கொண்டேன். உடம்பு சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே!

அடுத்து, டாக்டரின் நேரடி பரிசோதனை...

``எந்த இடத்தில் வலி?"
``சுகர், பிரஷர், சளி, இருமல், கை, கால் வலி" என எனக்கிருக்கும் பிரச்னைகளையெல்லாம் நான் வரிசையாக அடுக்கிக்கொண்டே இருக்க, தலைநிமிராமல், நோட்டில் டாக்டர்களுக்கே உரிய ஸ்பெஷல் ஷார்ட்ஹேண்டில் எழுதிக்கொண்டே இருந்தார். நமக்கிருக்கும் உடல் பிரச்னைகள் பற்றி அக்கறையாகக் குறிப்பு எழுதுகிறார் என திருப்திப்பட்டுக் கொண்டேன் (`மெர்சல்' டாக்டர் போல மருந்துகளை அவர் எழுதித்தள்ளியிருப்பது பார்மசி சென்ற பிறகு தெரிந்து, அதிர்ந்தது தனிக்கதை!).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியாக, நமக்கு ரிப்போர்ட் கொடுத்தார்கள் - ரத்தக்குழாயில் மூன்று பிளாக். ஏற்கெனவே ஸ்டென்ட் அல்லது பைபாஸ் பண்ணியிருந்தால், இரண்டு ஆப்ஷன் உண்டு. ஒன்று, 12 நாள் தங்கி வைத்தியம் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று மூன்று மாதத்துக்கு மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும்.
``எப்படி வசதி?'' என்று டாக்டர் கேட்க,
``இப்போதைக்கு முடிவெடுக்க முடியல... யோசிச்சு சொல்றோம்'' என்று வெளியேறினோம். டாக்டர் ரூம் வாசலில் தயாராக நின்றிருந்த நர்ஸ், 5,445 கேட்டார்.

``எதற்கு?"

``5 ஊசி மருந்துக்கான பணம். ஒரு ஊசியை இங்க போடுவோம். மீதி நாலையும் ஊருக்குக் கொண்டுபோய் நீங்க போட்டுக்கணும்.''
ரூ.5,500 கொடுத்தேன்.

அந்தப் புண்ணியவதி ரூ.445 சில்லறை மாற்றிக் கொண்டு வரச்சொன்னார்.
`சரி மருந்து வாங்கும்போது சில்லறை மாற்றிக்கொள்ளலாம்' என மெடிக்கல்ஷாப் போய் சீட்டை நீட்டினேன்.
``நீங்க புதுசா?''
``ஆமாம்.''
``உள்ளே வெயிட் பண்ணுங்க.''
அரை மணி நேரம் கழித்து திரும்பச் சென்றோம்.
``மருந்து எடுக்க கொஞ்சம் லேட் ஆகுது. நீங்க சாப்பிட்டு வந்துடுங்களேன்!''

Money (Representational Image)
Money (Representational Image)

அன்புச் சொந்தங்கள் நாக்கு சொட்ட சொட்ட சொன்னது போலவே கேன்டீன் சாப்பாடு அருமை. 50 ரூபாய்க்கு அன்லிமிடெட் மீல்ஸ் (மீன் வறுவல் தேவையென்றால் காலையிலேயே ஆர்டர் செய்திருக்க வேண்டும்). கேன்டீனில் அடியக்கமங்கலம் (திருவாரூர் அருகில் உள்ள ஊர்) ஆச்சி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. நிறைய தகவல் சொன்னார். அவருடைய அம்மாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, தெரிந்தவர் ஒருவர் இந்த நாகர்கோவில் மருத்துவமனை பற்றி சொல்லவே, ஆம்புலன்சில் கொண்டு வந்தார்களாம். இங்கு வந்து டெஸ்ட் எடுத்த பிறகு, நெஞ்சுவலி அதிகமாகிவிட்டதாம். உடனே 45,000 ரூபாய்க்கு ஊசி போட்டதும் சரியாகிவிட்டதாம்.

நல்லவேளை, என்னை இறைவன் காப்பாத்தினான்.
காலை 8 மணிக்கு மருத்துவமனையில் நுழைந்ததுமே எனக்கும் டெஸ்ட் எடுத்து முடித்து அறை ஒதுக்கிக் கொடுத்தார்கள். நெஞ்சுவலி அதிகமாவது போல தோன்றியது. என் துணைவியார் ரிசப்ஷனில் போய் சொன்னதற்கு, ``8.30 மணிக்குதான் சிஸ்டர் வருவார்" என்று சொல்லிவிட்டனர். அந்த இடைவெளியில் எனக்கு சற்று வலி குறையவே, 45,000 ரூபாய் மிச்சம். ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நொடிகளுக்கு நீடிக்கவில்லை. மீண்டும் மெடிக்கல் ஷாப் சென்றால்... மருந்து பில் 45,000 ரூபாய்.
மருந்தின் விவரங்கள் கேட்டேன்.

சுகருக்கு சாப்பிடும் மாத்திரைகள் 15-க்கு 80 ரூபாய்தான். இங்கே 1,090 ரூபாய் (தங்கபஷ்பத்தில் செய்திருப்பார்களோ?!).
ஏற்கெனவே, மல்ட்டி விட்டமின் மாத்திரை அப்போலோவில் வாங்கியிருக்கிறேன். 10 மாத்திரை 39 ரூபாய்தான். இங்கு அதே காம்பினேஷன் பெயர் மட்டும் மாறி இருந்தது. விலை 820 ரூபாய்!
இதையெல்லாம் தெரிந்துகொண்டதால், வீட்டில் நிறைய மாத்திரைகள் இருக்கின்றன என்று சொல்லி, ஒவ்வொன்றாகக் குறைத்து ஒரு மாதத்துக்கு மட்டும் மருந்து வாங்கலாம் எனத் திட்டமிட்டு, நாங்கள் ஊருக்குப் போய் பணம் அனுப்புறோம். கூரியரில் மருந்தை அனுப்புங்க என்றோம்.

அட்ரஸ் பெற்றுக்கொண்டார். ஆனால், எவ்வளவுதான் விவரமாக இருந்தாலும், மினி கோகோகோலா போல் இருந்த பாட்டில் ஜூஸ் ரூ. 1,200; இன்னொரு கேப்ஸுல் மாத்திரை சூடன் டப்பா போல் இருந்தது ரூ. 1,500; மற்ற மருந்துகளுக்கும் ஆக மொத்தம் 8,500 ரூபாய்க்கு மருந்து வாங்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது.

ஏ.ஏ.சத்தார்
ஏ.ஏ.சத்தார்

ஊசி விற்கும் நர்சிடம் போய், ``ஒரு ஊசி மருந்து மட்டும் வாங்கி இப்ப போடுறோம். மீதியை ஊர்ல போய் வாங்கிப் போட்டுக்கிறோம்'' என்றோம்.
``5 ஊசியை செட்டாதான் கொடுப்போம். நீங்க வேணும்னா டாக்டரிடம் கேட்டா எழுதித் தருவார்'' என்று உள்ளே அனுப்பினார். டாக்டருடைய நேர்மை மிகவும் பிடித்திருந்தது. ``வேணும்னா மெடிக்கல்ல வாங்கின மருந்தையும் ரிட்டர்ன் பண்ணிடுங்க. ஊசி மருந்து எழுதித் தர மாட்டோம்'' எனக் கறாராகக் கூறிவிட்டார் டாக்டர்.

ஆகவே, பேரன்புக்குரிய பெருங்குடிமக்களே... நெஞ்சு வலி ஏற்பட்டால் அக்கம்பக்கத்தில் ஆண்டாண்டுகாலமாக பிராக்டீஸ் செய்து, உண்மையிலேயே தரமான சிகிச்சைகளை செய்துவரும் எளிய மருத்துவர்களிடம் முதலில் ஆலோசனை செய்யுங்கள். ஊசி இல்லை, ஆபரேஷன் இல்லை... என்றெல்லாம் கலர் கலராக ரீல்விடும் போலிகளைத் தவிருங்கள். குறிப்பாக, சுற்றமும் நட்பும் கூடிக்கூடி கும்மியடித்து புகழ்பாடும் போலிகளைக் கட்டாயமாகத் தவிருங்கள்.

`இல்லாத சிபிஐ மாமாவால் திரும்ப வந்த ₹12,000 லஞ்சப்பணம்!' - சத்தாரின் உஷார் அனுபவங்கள் - 2

நாகர்கோவிலில் காசு கொடுத்து வாங்கிய மருந்தை, நானும் இரண்டு நாள்கள் சாப்பிட்டேன். முகம் வீங்கி, மயக்கமாக இருந்தது. அதை அப்படியே நிறுத்திவிட்டு, ஏற்கெனவே பார்த்த உள்ளூர் மருத்துவர் தந்த மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தேன். உடல்நிலை தேற ஆரம்பித்தது. அதன்பிறகு, உள்ளூரிலிருக்கும் தரமான மருத்துவரிடமே திரும்பவும் சென்றேன். நடந்த கதைகளை எல்லாம் சொல்லி ஓய்ந்த பிறகு, சில மருந்துகளை மாற்றி எழுதிக் கொடுத்தார். இப்பொழுது உடல் நலத்துடன் உள்ளேன்.

இதயமே இல்லாமல் கொள்ளையடிக்கும் அந்த நாகர்கோவில் மருத்துவமனையின் மெடிக்கல் வாசலில் ஒரு போர்டு வைத்துள்ளார்கள் - ``பில் தேவை என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்'. மற்றபடி மருத்துவமனையில் எல்லாத்துக்கும் ரோக்கா சீட்டுதான் (வெள்ளைத்தாளில் எழுதிக்கொடுப்பது).

எச்சரிக்கை: அந்த நாகர்கோவில் மருத்துவமனைக்கு... திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை என்று பல மாவட்டங்களிலும் ஏஜென்ட்டுகள் உள்ளனர். தாங்கள் சிகிச்சை எடுத்துத் தேறியதாக வண்டி வண்டியாகக் கதை சொல்வார்கள். இதை நம்பி அந்த நாகர்கோவிலில் மருத்துவம் பார்த்த நம் ஊர்க்காரர்கள் பலரும் இப்போது திருச்சி, சென்னை என்று தரமான மருத்துவர்களையும் மருத்துவமனைகளைத் தேடிச் சென்று மருத்துவம் பார்த்துக்கொண்டுள்ளனர். இது விழிப்புணர்வு பதிவு மட்டுமே. நலம், நலமறிய ஆவல்!

- ஏ.ஏ.சத்தார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு