Published:Updated:

`சொத்துகளை வாங்கிக்கொண்டு விரட்டிவிட்ட மகன்!’ - மீட்டுக் கொடுத்த நெல்லை கலெக்டர், சப்-கலெக்டர்

நெல்லையில் தந்தையின் பெயரில் இருந்த வீடு உள்ளிட்ட சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு தந்தையை வீட்டைவிட்டு வெளியேற்றிய மகனிடமிருந்து சட்டப்படி சொத்துகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்த சப்-கலெக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

மீட்கப்பட்ட சொத்துக்கான ஆணை
மீட்கப்பட்ட சொத்துக்கான ஆணை

பாளையங்கோட்டை சேர்ந்தவர் பூதத்தான். கட்டுமானத் தொழில் செய்துவந்த அவர் மனக்காவலன்பிள்ளை நகர் பகுதியில் மனைவியுடன் குடியிருந்து வந்தார். 85 வயதாகும் தம்பதிக்கு ஒரு பெண் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் மகாலிங்கம் கூலித்தொழில் செய்து வருகிறார் இரண்டாவது மகள் செல்வி, திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

வழக்கறிஞர் ஜெனியுடன் பூதத்தான்
வழக்கறிஞர் ஜெனியுடன் பூதத்தான்

பூதத்தானின் கடைசி மகன் முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். பூதத்தானுக்கு மனக்காவலன்பிள்ளை நகர் பகுதியில் 8 சென்ட் நிலம் வீட்டுடன் உள்ளது. அதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் இருக்கும். ஓட்டுநர் முருகன், பெற்றோரைத் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு முருகன் தன் தந்தையிடம், `உங்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை என் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள் நான் உங்கள் இருவரையும் கடைசிக் காலம் வரை பராமரித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். அதை நம்பிய பூதத்தான் சொத்துகளைக் கடைசி மகன் முருகன் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். 

மகன் மகாலிங்கம், மகள் செல்வி, வழக்கறிஞர் ஜெனியுடன் பூதத்தான்
மகன் மகாலிங்கம், மகள் செல்வி, வழக்கறிஞர் ஜெனியுடன் பூதத்தான்

ஆனால், சொன்னதுபோல நேர்மையாக நடந்துகொள்ளாத முருகன் தன் பெயரில் தந்தை எழுதிக் கொடுத்த சொத்துகளை மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதன் பின்னர், பெற்றோரைப் பராமரிக்க மறுத்து வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். அதனால் செய்வது அறியாமல் தவித்த பூதத்தானும் அவரின் மனைவியும் சாலையோரங்களிலும் பேருந்து நிழற்குடையின் கீழும் தங்கியிருந்திருக்கிறார்கள்.

பெற்றோரின் நிலைமை பற்றிக் கேள்விப்பட்ட மூத்த மகன் மகாலிங்கம் வருத்தம் அடைந்ததுடன் அவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் பூதத்தானும் மகாலிங்கமும் இரு வாரங்களுக்கு முன்பு முருகனைச் சந்தித்து அவரது நடவடிக்கை குறித்து அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். 

சப்-கலெக்டர் மணிஷ் நாரணவரேயுடன் பூதத்தான்
சப்-கலெக்டர் மணிஷ் நாரணவரேயுடன் பூதத்தான்

சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரைத் தவிக்க விட்ட சம்பவம் தொடர்பாக முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பூதத்தான், மகாலிங்கம் ஆகியோர் மீது முருகன் அவரின் மனைவி சாந்தி, மகன் கஜேந்திரன் ஆகியோருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் மூவரும் மகாலிங்கம் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பூதத்தான் மற்றும் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெனிக்கு தெரிய வந்ததால் அவர் உதவி செய்ய முன்வந்துள்ளார். அதன்படி, பூதத்தான் மகள் செல்வி மூலம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷிடம் புகார் அளிக்கப்பட்டது. சொத்தை அபகரித்துக்கொண்டு தந்தையைத் தவிக்கவிட்டதுடன் அறிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றது குறித்து அவர் ஆட்சியரிடம் தெரிவித்துக் கதறியுள்ளார். 

கலெக்டர் ஷில்பா பிரபாகர்சதீஷ்
கலெக்டர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

நடந்த விவரங்களைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், துணை ஆட்சியர் மணிஷ் நாரணவரே விசாரிக்குமாறு உத்தரவிட்டார். மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ன் கீழ் வழக்குப் பதிந்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஏமாற்றிப் பதியப்பட்ட சொத்துகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் சொத்துகளை மீண்டும் பூதத்தான் பெயருக்கே மாற்றி அதற்கான ஆணையும் அவரிடம் வழங்கப்பட்டது. பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.