நெல்லை-பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியார் பாலம், கடந்த 176 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த சுலோச்சன முதலியார் என்ற கொடையாளி தனது சொந்தப் பணத்தில் அந்தப் பாலத்தைக் கட்டினார்.

தற்போது, அந்த சாலையில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. அதனால் பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் போக்குவரத்து திணறியது. இந்தப் போக்குவரத்தில் சிக்கி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். அதனால் தாமிரபரணி ஆற்றின் மீது கூடுதலாக பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தாமிரபரணி ஆற்றில், சுலோச்சன முதலியார் பாலம் அருகே புதிதாக பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் புதிய பாலம் கட்டுவதற்கு 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து தேவர் சிலை வரை பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலம் 237 மீட்டர் நீளமும், 14.8 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இதற்காக ஆற்றுக்குள் 11ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது பாலம் கட்டப்படுகிறது. இரவும், பகலுமாக பணிகள் நடந்ததால் தற்போது 90 சதவிகிதம் பணிகள் முடிவடைந்ததால் ஓரிரு மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுமானப் பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டதற்கு, ``தாமிரபரணி ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால் தூண்களை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தூண்கள் அமைக்கச் குழி வெட்டினால் தண்ணீர் ஊறுகிறது. அதனால் மிகுந்த சிரமப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நீரோட்டத்தின் வேகத்தால் தூண்கள் பாதிக்கப்படாத வகையிலும், வெள்ளக் காலத்தில் உறுதியோடு நிற்கும் வகையிலும் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில் ஆற்றின் உள்ளே பாலம் அமைக்கச் சிக்கல் ஏற்படும் நிலையில், 176 வருடங்களுக்கு முன்பு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரும் தாமிரபரணி ஆற்றின் உள்ளே பிரமாண்டமான பாலம் அமைத்திருக்கிறார்கள். அதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்போது வரையிலும் அந்தப் பாலம் உறுதித்தன்மை குறையாமல் இருப்பது கூடுதல் சிறப்பு’’ என்று வியந்து பேசினார்.