Published:Updated:

`நீண்ட இடைவெளிக்குப் பின் எடுக்கப்பட்ட பைக்; விஷப்பாம்புடன் பயணம்!’ - நெல்லை இளைஞர் அதிர்ச்சி 

பிடிபட்ட விஷப்பாம்பு
பிடிபட்ட விஷப்பாம்பு

பைக்கில் ஏறிய பாம்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கும் எஞ்சினுக்கும் இடையில் எங்கேயே பதுங்கிக்கொண்டது. இருக்கையைக் கழற்றிய பின்னரும் பாம்பைக் காணாமல் தவித்தனர்.

நெல்லை  டவுன் பகுதியைச் சேர்ந்தவர், நடராஜ். அவர், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையப் பகுதிக்குள் உள்ள  செல்போன் கடைக்கு வந்தார். பைக்கை ஓட்டி வந்து கடையின் முன்பாக நிறுத்திவிட்டு ஸ்டாண்டு போடும்போது, நீளமான வால் பகுதியைப் பார்த்துள்ளார். 

பைக்கில் ஏறிய பாம்பை விரட்டும் முயற்சி
பைக்கில் ஏறிய பாம்பை விரட்டும் முயற்சி

அதனால் அச்சம் அடைந்த அவர், உற்று நோக்கியபோது பைக்கின் எஞ்சின் பகுதியில் பாம்பு இருந்துள்ளது. அவசரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கேட்டுள்ளார். அதனால் அங்கிருந்தவர்கள் வந்து பாம்பை விரட்ட முயன்றனர்.

பைக்கில் ஏறிய பாம்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கும் எஞ்சினுக்கும் இடையில் எங்கேயே பதுங்கிக்கொண்டது. இருக்கையைக் கழற்றிய பின்னரும் பாம்பைக் காணாமல் தவித்தனர். ஆளாளுக்கு பைக்கை ஆங்காங்கே தட்டியதால் பயந்த பாம்பு, முகப்பு விளக்கின் கீழ் பகுதிக்கு ஏறி, சாலையில் குதித்துப் பாய்ந்தது. 

கொடிய விஷமுடைய நல்ல பாம்பு
கொடிய விஷமுடைய நல்ல பாம்பு

அங்கிருந்தவர்கள் விரட்டுவதற்குள், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏறி பதுங்கிக்கொண்டது. அங்கும் யார் கண்ணிலும் படாமல் பதுங்கியதால், சற்று நேரம் போராடவேண்டியதிருந்தது. பின்னர், பைக்கில் இருந்து இறங்கிய பாம்பை அங்கிருந்தவர்கள் கற்களால் தாக்கினர். இதில் அந்தப் பாம்பு இறந்துவிட்டது.

அது, விஷத் தன்மை கொண்ட நல்ல பாம்பு என்று தெரியவந்தது. மூன்று அடி நீளம் கொண்டிருந்த அந்தப் பாம்பு எப்படி பைக்கில் வந்தது என்பது தெரியாமல், அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நடராஜன் அச்சம் அடைந்தார். 

பாம்பு
பாம்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாள்கள் பைக்கை எடுக்காமல் இருந்ததால், அதில் பாம்பு பதுங்கி இருந்திருக்கலாம் என்று பைக் உரிமையாளர் தெரிவித்தார். கொடிய விஷப்பாம்பு பைக்கில் ஏறிய விவகாரத்தால் சந்திப்பு பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது. .

அடுத்த கட்டுரைக்கு