Published:Updated:

புதுக்கோட்டை: `ஒரு விபத்துல எல்லாம் மாறிடிச்சு’ - பெண் பிள்ளைகளுடன் போராடும் ராஜேஸ்வரி

மெய்யர்
News
மெய்யர்

அவர் நல்லா இருக்கும்போது இரவு பகலாக லாரி ஓட்டி எங்களை எல்லாம் ரொம்ப நல்லாவே பார்த்துக்கிட்டாரு. அப்படி இருக்கும்போது எப்படி அவரை அப்படியே விட்டுவிட்டுப் போக மனசு வரும்.

புதுக்கோட்டை அருகே குரும்பூர் பட்டறைச்சேரியில் வசிக்கிறது மாற்றுத்திறனாளி மெய்யரின் குடும்பம். அம்மா, அப்பா, மனைவி, 3 பெண் பிள்ளைகள் எனப் பெரிய குடும்பம். 15 வருடங்களுக்கும் மேலாக, லோடு லாரி ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்த மெய்யர், கடந்த சில வருடங்களாகவே எழுந்து நடக்கக்கூட முடியாமல் முடங்கிக் கிடக்கிறார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்து, மெய்யரின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.

மெய்யர்
மெய்யர்

கூலி வேலைக்குச் செல்லும் மெய்யரின் மனைவி ராஜேஸ்வரியின் வருமானத்தில்தான் மொத்த குடும்பமும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறது. வீட்டில் தினமும் 7 பேருக்காகக் கட்டாயம் அடுப்பு எரிய வேண்டிய நிலை. ஒரு நாள் ராஜேஸ்வரி உடம்பு சரியில்லாமல் படுத்தால், அடுத்த இரண்டு நாள்கள் சாப்பாட்டுக்கே அந்தக் குடும்பத்தின் பாடு திண்டாட்டம்தான். தற்போது கொரோனா ஊரடங்கால் பல நாள்களாகத் தினம் தினம் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராஜேஸ்வரியிடம் பேசினோம், "வீட்டுல அன்னைக்கு விஷேசம், மொத நாளு அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு, "லாரியவிட்டு இறங்கிட்டேன். இன்னும் சில மணி நேரத்துல வீட்டுக்கு வந்திடுவேன்"னு சொல்லிவிட்டுப் போன வச்சிட்டாரு. போன் செஞ்சு ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரலை. அதுக்கப்புறம் சுய நினைவே இல்லாம இருந்த அவரை ஆஸ்பத்திரியில் போய்தான் பார்த்தேன். லாரிய விட்டுவிட்டு ஊருக்கு பஸ் ஏற வந்த மனுசனை கார்காரன் அடிச்சிப்போட்டுப் போய்ட்டான். 8 மாசம் கோமாவுலதான் கிடந்தாரு. போகாத கோயிலே இல்லை.

மெய்ரின் குடும்பம்
மெய்ரின் குடும்பம்

ஒரு வழியாக சுய நினைவு வந்திருச்சுன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கலை. ஒத்த காலை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. காலை எடுத்துறாதீங்கன்னு கெஞ்சிக் கூத்தாடினேன். ஏகப்பட்ட ஆபரேஷன்கள் செஞ்சு காலை எடுக்காமல் சரிபண்ணிட்டாங்க. ஆனாலும், ஒத்த காலும், ஒத்த கையும் பழையபடி இயங்காது. எந்த வேலையும் செய்ய முடியாது. அவரு என்னைக்கு படுத்தோரோ அன்னைக்கே குடும்பமும் படுத்திருச்சு. "உன்னால இத்தனை பேரையும் வச்சு சமாளிக்க முடியாது உன் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு அப்பா வீட்டுக்குப் போயிடுன்னு" சிலர் சொன்னாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் நல்லா இருக்கும்போது இரவு பகலாக லாரி ஓட்டி எங்களை எல்லாம் ரொம்ப நல்லாவே பார்த்துக்கிட்டாரு. அப்படி இருக்கும்போது எப்படி அவரை அப்படியே விட்டுவிட்டுப் போக மனசு வரும். 4 வருஷமாகக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கிட்டு 100 நாள் வேலைக்குப் போவேன். வந்தவுடன் கூலி வேலை, அதற்கப்புறம் வீட்டுவேலைன்னு பார்த்துக்கிட்டு வந்தேன். எனக்குக் கிடைக்கிற வருமானம் 7 பேரின் சாப்பாடு செலவுக்கே கஷ்டமா இருக்கும். அப்புறம் எங்க பிள்ளைகளுக்காகச் சேமித்து வைக்கிறது. ஒரு வீல்சேர் வாங்கிக்கொடுத்திடலாம்னு 2 வருஷமாக நெனச்சுக்கிட்டு இருக்கேன் இப்ப வரைக்கும் முடியலை.

புதுக்கோட்டை: `ஒரு விபத்துல எல்லாம் மாறிடிச்சு’ - பெண் பிள்ளைகளுடன் போராடும் ராஜேஸ்வரி

இப்ப ஸ்டிக் உதவியோடு ஓரளவு எந்திருச்சு நடக்கிறாரு. மாற்றுத்திறனாளிகள் ஓட்டுகிற 3 சக்கர வாகனம் இருந்தால், கண்டிப்பாக அவர் வெளிய போய் முடிந்த வேலையைச் செய்து சம்பாதித்துக்கொண்டு வந்துவிடுவார். அவரும் ஆர்வமாக இருக்காரு. அவர் மேல எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. என் தலையை அடமானம் வச்சாவது சீக்கிரம் அவருக்கு அந்த வண்டி வாங்கிக்கொடுக்கணும். 3 பொம்பளை பிள்ளைகளை வச்சிருக்கோம். அந்தக் கவலையும் ஒரு பக்கம் இருக்கு. பிள்ளைகளுக்கு பெரிய சீர் செனத்தி செஞ்சு கட்டிக்கொடுக்க முடியலாட்டியும், எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வச்சிடணும். இந்த ரெண்டு வைராக்கியத்தோடதான் ஓடிக்கிட்டு இருக்கேன்" என்கிறார்