Published:Updated:

`6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு!’ - அதிர்ச்சி கொடுத்த கோவை பள்ளி

பள்ளிக்கு சீல்
பள்ளிக்கு சீல்

``குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையே ரத்து செய்கிறது. ஆனால், இவர்களது ஆதாயங்களுக்காகக் குழந்தைகளைப் பணயம் வைக்கின்றனர்”

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் நாடே ஸ்தம்பித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் காலவரையற்று மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகின்றனர். இதனிடையே, பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படிக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

ஆனால், அவரது உத்தரவை மீறி பல இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. மறுபுறம், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து குழப்பமான போக்கு இருந்து வந்தது. தற்போது, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. இந்நிலையில், கோவையில் ஒரு பள்ளி 6-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தியுள்ளதாகப் புகார் எழுந்தது.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

கோவை டவுன்ஹால் பகுதியில் இயங்கிவரும் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த சில வாரங்களாக புதிய மாணவர் சேர்க்கைக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியானது.

அந்தப்பள்ளி குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார் பிரேம்குமார் என்பவர். அவர் நம்மிடம், ``கடந்த வாரமே குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து, கட்டணமும் வசூலித்துவிட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று 6-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காகப் பல்வேறு இடங்களிலிருந்து மாஸ்க்குகள் அணிந்தபடி மாணவர்களும் கூடிவிட்டனர்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி 
அறிந்துகொள்வோம்!

குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையே ரத்து செய்கிறது. ஆனால், இவர்களது ஆதாயங்களுக்காக குழந்தைகளைப் பணயம் வைக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகாரளித்துள்ளேன். இதை எப்படியோ தெரிந்துகொண்ட பள்ளி நிர்வாகம், தேர்வு நடந்துகொண்டிருக்கும்போதே மாணவர்கள், பெற்றோரை அவசர அவசரமாக அங்கிருந்து அனுப்பியுள்ளனர். எனவே, சி.எஸ்.ஐ பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சீல் வைக்கப்பட்ட பள்ளி
சீல் வைக்கப்பட்ட பள்ளி

இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி நிர்வாகம், "நாங்கள் நுழைவுத்தேர்வை நடத்தவில்லை. அட்மிஷன் கேட்டு பெற்றோர், மாணவர்கள் தாங்களாகவே கூடிவிட்டனர். தேர்வு நடந்ததாக இவர்கள் காட்டும் வினாத்தாள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வினுடையது" என்று கூறியுள்ளனர்.

ஆனால், அவர்களின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்பதாலும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையிலும் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

`கட்டணம் குறித்த வாட்ஸ்அப் உரையாடல்; நீக்கப்பட்ட 60 மாணவர்கள்?’ -கோவை பி.எஸ்.பி.பி பள்ளி மீது புகார்
அடுத்த கட்டுரைக்கு