Published:Updated:

`நீங்கதானே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்..?' -பண்ருட்டி சிறுமியின் புகாரால் மனம் திருந்திய தந்தை

பண்ருட்டி காவல் நிலையம்
பண்ருட்டி காவல் நிலையம்

உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்த அப்பா மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையம் சென்றிருக்கிறார் சிறுமி ஒருவர்.

இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்த இவர், கடந்த சில மாதங்களாக பண்ருட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு பயமும் பதற்றமும் இருக்கக்கூடாது என்று கூறும் இவர், தன்னால் இயன்றவரை தான் பணிபுரியும் காவல் நிலையத்தின் கட்டமைப்பை உடைத்து, அலுவலகம் போல பளிச்சென்று மாற்றிவிடுவார். சமூக வலைதளத்தில் பிரபலமானவர் என்பதால் மக்கள் இவரை பயமின்றி அணுகுவார்கள். இவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று போராட்டமும் கடையடைப்பும் செய்த சம்பவங்கள் பல இருக்கின்றன.

பண்ருட்டி காவல் நிலையம்
பண்ருட்டி காவல் நிலையம்

இந்நிலையில், நேற்று காலை பண்ருட்டி காவல் நிலையம் சென்ற 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், அங்கிருந்த அதிகாரிகளிடம், ”புதுசா வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சாரை பாக்கணும்” என்று கூறியிருக்கிறார். அவர்கள் அம்பேத்கரின் அறைக்கு வழிகாட்ட, அங்கு சென்ற அந்தச் சிறுமி, “நீங்கதானே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்?” என்று கேட்டிருக்கிறார். ``ஆமாம் சொல்லுமா" என்று அவர் கூறியதும், “என் அப்பா, நான் உண்டியல்ல சேத்து வெச்சிருந்த பணத்தை எடுத்துட்டுப் போயி குடிச்சிட்டாரு. அதைக் கேட்ட என் அம்மாவையும், என்னையும் அடிச்சிட்டாரு. அவர் மேல கேஸ் போட்டு ஜெயில்ல வைங்க” என்று கூறி அழுதிருக்கிறார்.

அதற்கு, “அப்பா தானேம்மா எடுத்தாரு. உண்டியல்ல இருந்தது அவர் உனக்கு கொடுத்த காசுதானே” என்று கேட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர். அதற்கு, “அது அவரு குடுத்த காசு இல்லை. அவரு கடைங்களுக்கு வேலைக்கு போவாரு. இப்போ கொரோனாவால எங்கயும் போகாம வீட்டுலதான் இருக்காரு. என் அம்மா கஷ்டப்பட்டு டீ கடை வச்சி நடத்தறாங்க. அவங்க எனக்கு குடுக்கற காசைத்தான் நான் உண்டியல்ல சேத்து வெச்சிருந்தேன். அதைத்தான் அப்பா எடுத்துட்டுப் போயி குடிச்சிட்டு வந்திட்டாரு. அவரை கூப்ட்டு விசாரிச்சி ஜெயில்ல வைங்க” என்று அழுதிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்
இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்

உடனே காவலர்கள் மூலம் அந்தச் சிறுமியின் தந்தையை அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், குழந்தையின் உண்டியல் பணத்தை ஏன் எடுத்தாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, ”செலவுக்கு காசில்லாததால எடுத்துட்டேன்” என்று கூறிய சிறுமியின் தந்தையை அடிப்பது போல லத்தியை ஓங்கிப் பிடித்தார். உடனே, “சார்... வேண்டாம் சார். எங்க அப்பாவை அடிக்காதீங்க. ப்ளீஸ்... அடிக்காதீங்க.” என்று அந்தச் சிறுமி தேம்பித் தேம்பி அழ, அந்த நபரும் ஓடிச்சென்று தனது மகளை கட்டிப்பிடித்து, “தெரியாம செஞ்சிட்டேன்மா” என்று கூறி கதறி அழுதிருக்கிறார்.

அதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் சென்ற அந்த நபர், ”சார் உங்களைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இனி இப்படிச் செய்ய மாட்டேன். நான் திருந்திட்டேன் மன்னிச்சிடுங்க” என்று கூறி தனது மகளுடன் வீடு திரும்பியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் பேசினோம். “கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, அவர்களின் உறவுச் சங்கிலிகளையும் உரசிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

சில வழக்குகளை குற்றப் பார்வையோடு அல்லாமல் உளவியல் ரீதியாக அணுகினாலே சரியான தீர்வு கிடைக்கும்.
இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்

தன் அப்பா உண்டியல் பணத்தை எடுத்துவிட்டார் என்பதைவிட, அதை எடுத்து அவர் குடித்துவிட்டாரே என்ற ஆதங்கம் அந்தச் சிறுமிக்கு. மதுவுக்கு அடிமையாகிவிட்ட அந்த தகப்பன் வேலைக்குச் செல்ல முடியாமல் மகளின் உண்டியல் பணத்தை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சில வழக்குகளை குற்றப் பார்வையோடு அல்லாமல் உளவியல் ரீதியாக அணுகினாலே சரியான தீர்வு கிடைக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு