புதுக்கோட்டை மாவட்டம், போஸ் நகரைச் சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவரின் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு முடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்ததால், வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவே மருத்துவக் கல்வியை முடித்து தேர்ச்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பயிற்சிக்காக சமீபத்தில் அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து சீனாவுக்கு அப்துல்லா புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக, சீனாவின் விதிமுறைப்படி எட்டு நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஷேக் அப்துல்லா, அதன் பிறகு பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருக்கிறார். இதற்கிடையேதான், கடந்த வாரம் ஷேக் அப்துல்லாவின் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டு, ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்ற அதிர்ச்சித் தகவலைப் பல்கலைக்கழகம் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் பதற்றமடைந்த பெற்றோர், மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு மகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, ஷேக் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்தாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஊரிலிருந்து மருத்துவச் செலவுக்கு பணம் அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்கள், நண்பர்கள் அதுபோக கடன் என ரூ.6,40,000 ஆயிரத்தைத் திரட்டி அங்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்பட்ட, ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சீனப் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்த அப்துல்லாவின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர்.
``மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து அப்துல்லாவின் உறவினர்களிடம் பேசினோம்.
``கூலி வேலை பார்த்து, கடன் வாங்கித்தான் அப்துல்லாவை, சீனாவில் மருத்துவம் படிக்க வச்சாங்க. நல்லா இருந்தவனுக்கு திடீர்னு முடியாமப்போய் இறந்தது அதிர்ச்சியா இருக்கு. கொரோனா இருந்துச்சான்னு தெரியலை. ஆனா, கல்லீரல், கிட்னினு அடுத்தடுத்த பிரச்னைகள் இருந்ததாச் சொல்றாங்க. அனைத்தும் மர்மமாகவே இருக்குது. சிகிச்சைக்குக்கூட இங்கிருந்து பணத்தை அனுப்பிவெச்சுருக்கோம்.
ஆனா, இப்போ அப்துல்லாவின் உடலை, சொந்த ஊருக்குக்கூட கொண்டுவர முடியாத சூழல்தான் இருக்குது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு உடனே இறந்த அப்துல்லாவின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கணும். உயிரிழந்த அப்துல்லாவின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண உதவி வழங்கணும்" என்றனர்.