Published:Updated:

`தேநீரோடு திருக்குறளும் பருகலாம்!' - 30 ஆண்டுகளாக அசத்தும் தூத்துக்குடி டீக்கடை தாத்தா

கந்தசாமி
கந்தசாமி

கடை முழுவதும் திருக்குறள்களை எழுதி வைத்தது மட்டுமல்லாமல், கடைக்கு வருவோரிடம் இரண்டடி குறளை இரண்டு நிமிடங்களில் வாசித்து பொருளையும் கூறி அசத்துகிறார் டீக்கடைக்காரர் கந்தசாமி.

பேருந்து பயணக் களைப்பிலோ, பணி அழுத்தத்திலோ தேநீரை அருந்த நினைத்து டீக்கடைக்குள் நுழைந்தால் டீயோடு சேர்த்து சிலர் போண்டா, வடையையும் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், தூத்துக்குடியில் உள்ள கந்தசாமி தாத்தாவின் கடைக்குள் நீங்கள் நுழைந்தால் டீயோடு சேர்த்து திருக்குறளையும் கற்றுக் கொண்டுதான் வெளியே வருவீர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது அய்யநேரி கிராமம். இங்கு வசித்துவருபவர் கந்தசாமி. 65 வயதான இவர், 30 ஆண்டுகளாக டீக்கடை நடத்திவருகிறார். திருக்குறளால் தன் வாழ்வு மகிழ்ச்சியாகச் சென்றதால், குறிப்பாக இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனது டீக்கடை சுவர் முழுவதும் தனக்குப் பிடித்த திருக்குறளை எழுதிவைத்துள்ளார்.

திருக்குறள் சொல்லித்தரும் கந்தசாமி
திருக்குறள் சொல்லித்தரும் கந்தசாமி

30 ஆண்டுகளாக கடையில் சிறுசிறு மாற்றம் செய்தாலும், சுவரில் குறளை எழுதி வைப்பதை மட்டும் நிறுத்தவில்லை. கடைக்கு டீ, காபி அருந்த வருபவர்களின் கண்களில் திருக்குறள் நேரடியாகத் தென்படுவதால், அதை அவர்கள் படிப்பது மட்டுமின்றி, பலரும் அதற்கானப் பொருள் குறித்து கேட்கும்போது, தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி அசத்திவருகிறார் கந்தசாமி.

`சாதி, மத சண்டையில்லாத கிராமம் இது!'- திருவள்ளுவர் சர்ச்சையால் பதறும் பிள்ளையார்பட்டி

கந்தசாமியிடம் பேசினோம், ``நான் 10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது எனக்குப் பாடம் எடுத்த தமிழ் ஆசிரியர் சண்முகையா, திருக்குறளைப் பற்றி நடத்தும்போது, குறளை அவரது காந்தக் குரலில் பாடல்போல பாடி மனதில் படியும்படி சொல்லிக்கொடுத்தார். `ஒவ்வொரு மாணவரும் அவசியம் முழுமையாகப் படிக்க வேண்டிய நூல் திருக்குறள். திருக்குறளில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை' எனச் சொன்னார். அதிலிருந்து திருக்குறள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

டீ குடித்துக்கொண்டே குறள் வாசிப்பு
டீ குடித்துக்கொண்டே குறள் வாசிப்பு

திண்பண்டம் வாங்கக் கிடைத்த காசுகளைச் சேர்த்து தனியாகத் திருக்குறள் புத்தகம் வாங்கிப் படிச்சுட்டு வந்தேன். 30 வருஷமா இந்த டீக்கடையை நடத்திட்டு வர்றேன். கடைக்குள் திருக்குறள்களை எழுதி வைத்துள்ளேன். டீ குடிக்க வருபவர்களிடம் டீ குடித்துக்கொண்டே குறளைப் படித்துப் பார்க்கச் சொல்வேன். அதற்குப் பிறகு பொருள் கேட்பேன்.

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video

`பொருள் தெரியாது’ எனச் சொன்னால், அந்தக் குறள்களுக்குரியப் பொருளைச் சொல்வேன். ஒவ்வொரு வருஷம் கடைக்கு வெள்ளை அடிக்கும்போது புதிதாகக் குறள்களை எழுதுவேன். குறள் இரண்டடி இருப்பதுபோல, விளக்கத்தையும் இரண்டடியில் சொல்லிவருகிறேன். குறள் வாசிக்க ஒரு நிமிடம், பொருள் சொல்ல ஒரு நிமிடம் என மொத்தம் இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். இதேபோல கடைக்கு மிட்டாய் வாங்க வரும் குழந்தைகளையும் குறள் வாசிக்கச் சொன்ன பிறகே மிட்டாய் கொடுப்பேன்.

டீ போடும் கந்தசாமி
டீ போடும் கந்தசாமி

குறளை சரியாக வாசித்து, பொருளையும் சரியாகச் சொன்னால் அவர்கள் விரும்பும் மிட்டாயை பரிசாகக் கொடுப்பேன். `அந்தக் கடைக்கு மிட்டாய் வாங்கப் போனா, தாத்தா திருக்குறள் வாசிக்கச் சொல்லுவாரு. வேற கடைக்குப் போகலாம்' என என் கடைக்கு வராமல் அடுத்த கடைக்கு ஓடிப் போகும் குழந்தைகளும் உண்டு.

நான் சாதாரணமாக நடந்து வந்தாலே, திருக்குறள் கேட்பேன்னு என்னைப் பார்த்து பயந்தும் சில குழந்தைகள் ஓடிவிடும். திருக்குறளில் மனித வாழ்வியலுக்கான அனைத்துச் செய்திகளும் உள்ளன. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல சினிமா டிக்கெட்டுகள், பஸ் டிக்கெட்டுகள் என திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்றார் உற்சாகக் குரலில்.

சுவரில் எழுதப்பட்டுள்ள  திருக்குறள்கள்
சுவரில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்கள்

திருவள்ளுவரை முன்வைத்து நடக்கும் அரசியல்கள் ஒருபுறம் இருந்தாலும், 30 ஆண்டுகளாக தேநீருடன் திருக்குறளையும் அதன் பொருளையும் கலந்து கொடுக்கும் கந்தசாமி தாத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே செல்கின்றனர் அவரது வாடிக்கையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு