Published:Updated:

கடலூர்: 3 கி.மீ இழுத்துச் சென்ற முதலை! - கொள்ளிடத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

முனுசாமியைத் தேடும் மீட்புக்குழுவினர்
முனுசாமியைத் தேடும் மீட்புக்குழுவினர்

கடலூர் மாவட்டத்திலிருக்கும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் ஒருவரை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றிருப்பது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் ஆறு திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம் வழியாகச் சென்று கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு 5 கிலோமீட்டர் தெற்குப் பகுதியில், வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அதில் நீந்திவரும் முதலைகள் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவருகின்றன.

கடலூர் முதியவரை இழுத்துச் சென்ற முதலை
கடலூர் முதியவரை இழுத்துச் சென்ற முதலை

பாசனக் கால்வாய்களில் நடப்பவர்களையும், குளிப்பதற்காக ஆற்றில் இறங்குபவர்களையும் அந்த முதலைகள் அடிக்கடி கடித்துக் குதறுவது தொடர்கதையாகிவருகிறது. மேய்ச்சலுக்காகச் செல்லும் ஆடு, மாடுகளையும் அவை விட்டுவைப்பதில்லை. நீர்வரத்து அதிகமில்லாத நேரத்தில் ஆற்றில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரிலும், ஏரிகள், குட்டைகளில் இருக்கும் முதலைகள் உணவு தேடி ஊருக்குள் வரும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறும்.

கடந்த மே மாதம் காட்டுமன்னார்கோயிலுக்கு அடுத்த பொன்னோரி கிராமத்திலிருக்கும் ஏரிக்கரையிலிருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த முதலை ஒன்று, மக்களின் நடமாட்டத்தைக் கண்டு அங்கிருந்த புதரில் மறைந்திருந்தது. தற்செயலாக அதைக் கண்ட மக்கள் வனத்துறைக்குத் தகவலளித்தனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில் சிதம்பரத்தை அடுத்திருக்கும் பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற அறிவானந்தம், தனது ஊரைக் கடக்கும் பழைய கொள்ளிடம் ஆற்றில் நேற்றிரவு குளிப்பதற்காகச் சென்றார். அப்போது இரைக்காக அங்கு காத்திருந்த முதலை ஒன்று தாவி, முனுசாமியைக் கவ்விப் பிடித்து ஆற்று நீரில் வேகமாக இழுத்துச் சென்றது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவலளித்தனர். அதையடுத்து அங்கு விரைந்து வந்த அண்ணாமலை நகர் காவல்துறையினரும் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தின் வீரர்களும் முனுசாமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிதம்பரம்-சீர்காழி சாலையில் அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும், தனியார் முதலை மீட்புக்குழுவினரும் பழைய கொள்ளிடம் ஆற்றில் படகில் சென்று முனுசாமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த முனுசாமி
உயிரிழந்த முனுசாமி

இன்று காலை சம்பவ இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் மேலகுண்டலவாடி என்ற பகுதியில் உயிரிழந்த முனுசாமியின் உடலை, முதலை வாயில் கடித்துப் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். உடனே படகின் துடுப்பால் முதலையைத் தாக்கினார்கள் மீட்புக்குழுவினர். இந்தத் தாக்குதலால், முனுசாமியின் உடலை வாயிலிருந்து விடுவித்துவிட்டு அங்கிருந்து நீந்தித் தப்பித்துச் சென்றது முதலை.

இது தொடர்பாக நம்மிடம் பேசனார் உயிரிழந்த முனுசாமியின் உறவினர் ஆனந்தன். ``கடந்த 30 வருஷத்துல இதே பழைய கொள்ளிடம் ஆத்துக் கரையோரத்துல மட்டும் 15-க்கும் மேற்பட்டவங்களை முதலைங்க இழுத்துட்டுப் போயி கடிச்சிப் போட்டுருக்கு. அவங்க எல்லாருமே செத்துப் போயிட்டாங்க.

Vikatan

இங்கே மட்டும் சுமார் 100 முதலைங்க இருக்கும். நேத்து ராத்திரி முனுசாமி 7 மணிக்கு ஆத்துல குளிக்கப் போயிருக்காரு. அப்போ அங்கே இருந்த முதலை அவரோட காலைப் பிடிச்சு வேகமா இழுத்துக்கிட்டுப் போயிடுச்சி. அப்போ அங்கே இருந்த பையன் ஒருத்தன்தான் கூச்சல் போட்டு ஊருக்காரங்களை கூப்பிட்டிருக்கான். அதுக்கப்புறம்தான் ராத்திரி முழுக்கத் தேடி முதலை வாயில இருந்து அவர் உடலை எடுத்திருக்காங்க. அந்த முதலை ராத்திரி முழுக்க அவரோட உடம்பை வாயிலவெச்சு கடிச்சிக்கிட்டே இருந்திருக்கு. மீட்புக்குழுக்காரங்க துடுப்பால அடிச்சப்போகூட அவ்வலவு சீக்கிரமா உடம்பை விட்டுத்தரலை அந்த முதலை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு