Published:Updated:

`வள்ளுவர் சொன்ன வழியில் வாழ்ந்தவர் அவர்!' - எல்லப்பனின் தமிழ்ப்பணிகளும் நினைவுகளும்

எல்லப்பன்

திருக்குறள் படிப்பதற்காகவே சிறுவர்கள் எப்போதும் அங்கு நிறைந்திருப்பார்கள். வீடு முழுக்கவே குழந்தைகளின் குரல்களில் குறள்கள் ரீங்காரமிடும். திருக்குறளை எல்லப்பன் தன் அடையாளமாகவும், தமிழுக்கான தனது தொண்டாகவும் ஆக்கிக்கொண்ட கதை நெகிழ்ச்சியானது.

`வள்ளுவர் சொன்ன வழியில் வாழ்ந்தவர் அவர்!' - எல்லப்பனின் தமிழ்ப்பணிகளும் நினைவுகளும்

திருக்குறள் படிப்பதற்காகவே சிறுவர்கள் எப்போதும் அங்கு நிறைந்திருப்பார்கள். வீடு முழுக்கவே குழந்தைகளின் குரல்களில் குறள்கள் ரீங்காரமிடும். திருக்குறளை எல்லப்பன் தன் அடையாளமாகவும், தமிழுக்கான தனது தொண்டாகவும் ஆக்கிக்கொண்ட கதை நெகிழ்ச்சியானது.

Published:Updated:
எல்லப்பன்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர் திருக்குறள் கவனகர் எல்லப்பன், கடந்த மார்ச் 12-ம் தேதி உயிரிழந்தார். திருக்குறள் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 1,330 குறளையும் கற்றுணர்ந்து, அதை பல்வேறு வகைகளில் ஒப்புவித்து, மாணவர்களுக்கும் குறள் பயிற்றுவித்து, தமிழ்த்தொண்டு செய்து வந்தவர் எல்லப்பன். அவரின் திறமைக்கு ஏற்ற உயரத்தை அவர் அடையவில்லை என்பது வருத்தத்திற்குரியது

பாரசீக தேசிய கவிஞன் பிர்தவ்ஸி, மன்னர்களின் புகழ் பரப்ப ஷானாமே என்னும் 60,000 ஈரடி நெடுங்காவியத்தை படைத்து புகழ்பெற்றவர். ஆனால் பிர்தவ்ஸியின் அந்திமக் காலம் வறுமை மிகுந்ததாக இருந்தது. தன் நிலை குறித்து மன்னருக்குப் பலமுறை கடிதம் எழுதியும், தூது அனுப்பியும் அவரது வறுமை ஒழிய வழியில்லை. இறுதியாக மன்னருக்குத் தகவல் கிடைத்து பொற்கிழி இல்லம் தேடி பிர்தவ்ஸி குடியிருந்த தெரு வழியாக உள்ளே வந்தபோது... பின் வாசல் வழியாக பிர்தவ்ஸின் உயிரற்ற உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் சுமந்து கொண்டு சென்றனர். இது நடந்தது 1020-ம் ஆண்டு

குழந்தைகளுடன் எல்லப்பன்
குழந்தைகளுடன் எல்லப்பன்

அதே நிலைதான் நம் திருக்குறள் கவனகர் எல்லப்பனுக்கும் நேர்ந்திருக்கிறது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற செய்தி அறிந்து, எத்தனையோ தமிழறிஞர்களைப் பாதுகாத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின், உடனடியாக எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருப்பதாக அறிவித்த நிலையில், அதைப் பெறுவதற்கு நம் திருக்குறள் கவனகர் எல்லப்பன் நம்மிடையே இல்லை. நேற்று இருந்தார், இன்று இல்லை... இதுதான் வாழ்க்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் துயரமான சூழலில், எல்லப்பனின் தமிழ்ப்பணிகள் பற்றி நினைவுகூர்வது அவருக்கான இறுதி மரியாதையாக அமையும்.

கடந்த 10 வருடங்களாகச் செங்கல்பட்டு பகுதியில், `திருக்குறள் நினைவாற்றல் பயிலகம்’ நடத்தி வந்தார் எல்லப்பன். திருக்குறள் படிப்பதற்காகவே சிறுவர்கள் எப்போதும் அங்கு நிறைந்திருப்பார்கள். வீடு முழுக்கவே குழந்தைகளின் குரல்களில் குறள்கள் ரீங்காரமிடும். திருக்குறளை எல்லப்பன் தன் அடையாளமாகவும், தமிழுக்கான தனது தொண்டாகவும் ஆக்கிக்கொண்ட கதை நெகிழ்ச்சியானது.

குழந்தைகளுடன் எல்லப்பன்
குழந்தைகளுடன் எல்லப்பன்

பொதுவாக, 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அதில் தனக்கென ஓர் அடையாளம் வேண்டும் என யோசித்த எல்லப்பன், திருக்குறளை தலைகீழாகச் சொல்லப் பயிற்சி எடுத்தார். குறள் சொன்னால் பொருள் சொல்வது, பொருள் சொன்னால் குறள் சொல்வது, அதிகாரம், அதிகார எண், திருக்குறள் எண், ஒவ்வொரு எழுத்தாக தலைகீழாகக் குறள் சொல்லுவது, பக்கவாட்டில் (7, 17, 27, 37) குறள் சொல்லுவது, பக்கவாட்டில் பின்பக்கமாகச் சொல்லுவது (96, 86, 76, 66), ஒன்று விட்டு ஒன்று சொல்லுவது (3, 5, 7, 9), உதடு ஒட்டாத குறள் சொல்லுவது, உதடு ஒட்டும் குரல் சொல்லுவது என 31 வழிமுறைகளில் திருக்குறளைச் சொல்லக் கூடியவர் எல்லப்பன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லப்பனிடம் நேரடியாகத் திருக்குறள் பயின்றவர்களில் இதுவரை 180 பேர் தமிழக அரசால் சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குறள் கவனக நிகழ்ச்சியை 10,000 முறைக்கு மேல் நடத்தியுள்ளார் எல்லப்பன். மாணவர்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்க, ஆரம்பத்தில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் சுமார் 30 மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தினார் . நூறு குறட்பாக்கள் முடித்த 12 மாணவர்களுக்கு அந்தப் பகுதியிலேயே விழா எடுத்துப் பரிசு வழங்கினார். இதனால் மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியில் பாராட்டுகளைப் பெற்றனர். படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும், எல்லப்பன் செய்துவந்த திருக்குறள் பணிகள் படர்ந்தன.

Thiruvalluvar
Thiruvalluvar

1995-ல் `உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை' தொடங்கப்பட்டது. அதன் பின்னர், தொடர்ந்து ஒவ்வொரு சனி, ஞாயிறும் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஊராட்சிப் பள்ளிகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளில் 10 நடுநிலைப் பள்ளி, 6, 7, 8-ம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களது பாடத் திட்டத்தில் குறிப்பிட்ட அதிகாரங்களோடு மேலும் சில அதிகாரங்களைச் சேர்த்துக் கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தினார். இப்போட்டிக்கு முன்னதாக ஊரகப் பகுதிகளுக்கு 2, 3 முறை சென்று பயிற்சி அளிப்பார். அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கிராம நாட்டாமைக்காரர்களை வைத்தும், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் பரிசுப் பொருள்கள் வழங்கிச் சிறப்பாக நடத்தினார்.

2003-ம் ஆண்டு எல்லப்பனின் ஆறு மாணவர்கள் 1,330 குறளையும் `கசடற’ பயின்று, 133 கோணங்களில் திறன் பெற்றார்கள். அவர்களுக்குத் `திருக்குறள் இளந்தூதர்' பட்டம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவர்க்கும் வெள்ளிப் பட்டயம், சிறப்புச் சான்றிதழ், கேடயம், திருவள்ளுவர் சிலை, 1330 ரூபாய் பொற்கிழி போன்றவை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு காஞ்சியில், `திருக்குறள் பேரவை' என்கிற அமைப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது என்கிற செய்தி பொதுமக்களிடையேயும், பள்ளி அளவிலும், மாணவர்களிடையேயும் பரவலானது.

திருக்குறள் பணி மட்டுமல்ல, TNPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தமிழ், வரலாறு, பொது அறிவு, நாட்டு நடப்புகளை சில நொடியில் பதிய வைப்பார் எல்லப்பன். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இவர் ஒரு நினைவாற்றல் களஞ்சியம்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

குறிப்பாகச் சொல்ல வேண்டியது என்னவெனில், எல்லப்பனிடம் திருக்குறள் பயிற்சி பெற்ற மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்து திருக்குறள் பேரவைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக, அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுப் பணிக்கு சுமார் 30 மாணவர்கள், அரசுக் கருவூலம், கல்வித்துறை, வருவாய்த் துறை, தலைமைச் செயலகம், தட்டச்சுப் பணியாளர் மற்றும் வேளாண்மைத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மின்சாரத் துறை, மத்திய அரசுப் பணி, மற்றும் பொறியாளர் பட்டம் பெற்று நம்பகமான தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் எல்லப்பன் புகட்டிய திருக்குறள், கல்வியில் ஆர்வத்தை உண்டாக்கி, ஊக்கத்தை அளித்து, தன்னம்பிக்கையை அளித்து விடாமுயற்சியுடன் வெற்றிவாகை சூட வைத்திருக்கிறது.

இப்படி, எல்லப்பனின் திருக்குறள் பணிகளையும், எளிமையே அடையாளமாகிப்போன அவரது இயல்பையும் சமூக வலைதளத்தில் நன்றியோடு பகிர்ந்து வருகின்றனர் பலர்.

திருவள்ளுவர் சொன்ன `ஈதல் இசைபட வாழ்தல்' என்பதுபோல் வாழ்ந்தவர் கவனகர்‌ எல்லப்பன். நினைவைப் போற்றுவோம்.

- மல்லை சி ஏ சத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism