Published:Updated:

ராமேஸ்வரம்: `பாம்பன் பாலத்தில் இனி ரயில்கள் இயக்கப்படாதா?’ - ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன?!

பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
News
பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வுகள் எதனால் ஏற்பட்டது என கண்டறிவதில் ஐஐடி மாணவர்கள் 20 நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் தொடர்ந்து ரயில்களை இயக்கலாமா என ரயில்வே துறை அதிகாரிகள் ஆலோசனை.

ராமேஸ்வரம்: `பாம்பன் பாலத்தில் இனி ரயில்கள் இயக்கப்படாதா?’ - ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன?!

பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வுகள் எதனால் ஏற்பட்டது என கண்டறிவதில் ஐஐடி மாணவர்கள் 20 நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் தொடர்ந்து ரயில்களை இயக்கலாமா என ரயில்வே துறை அதிகாரிகள் ஆலோசனை.

Published:Updated:
பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
News
பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

தமிழ்நாட்டுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் 108 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவுக்கும் மண்டபத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இந்தப் பாலத்தில் இயக்கப்பட்டுவருகின்றன. பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டுவருவதால் ரயில்கள் மிக மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டுவருகிறது. பாம்பன் தூக்குப் பாலத்தை ரயில்கள் கடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளைக் கண்டறிய, சென்னை ஐஐடி கல்வி நிறுவன மாணவர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரயில்வே பாலத்தில் சென்சார் கருவி பொருத்தப்பட்டது. புயல் எச்சரிக்கை எதிரொலியாக பாம்பன் பாலத்தில் மிகக் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி அதிகாலை பாம்பன் பாலத்தில் ஐஐடி மாணவர்களால் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவியிலிருந்து அபாய ஒலி கேட்டிருக்கிறது. இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்பன் பாலத்தின் வழியாக இயக்கவிருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

பாம்பன் பாலத்தில் அதிர்வுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது
பாம்பன் பாலத்தில் அதிர்வுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது

பயணிகளின் வசதிக்காக மண்டபத்திலிருந்து மதுரை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐஐடி நிறுவன மாணவர்களால் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கருவி, ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த 20 நாள்களாக ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஐஐடி கல்வி நிறுவன மாணவர்கள் அதிர்வு எதனால் ஏற்பட்டது எனத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இதுவரை அதிர்வுக்கான காரணம் குறித்து கண்டறிய முடியவில்லை. இதனால் மறு அறிவிப்பு வரும்வரை பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என மதுரை கோட்ட தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் பாம்பன் ரயில் பாலத்தை ஒட்டி நவீன புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து 2.05 கிமீ தூரத்துக்கு பாம்பன் கடலில் ரூபாய் 535 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது. இதன் கட்டுமானத்தை ரயில்வே துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் செய்துவருகிறது.

இதுவரை 90 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. புதிய பாலத்துக்காக கடலில் பல்வேறு காலநிலை சிரமங்களுக்கிடையே 101 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் 99 இணைப்பு கிர்டர்கள் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில், செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இந்த மின்தூக்கி கிர்டரைப் பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. பழைய பாலத்தில் கப்பல் செல்வதற்காக பாலத்தின் நடுப்பகுதி இணைப்பைத் திறக்க இருபுறமும் மனித ஆற்றல் பயன்படுத்தப்பட்டுவந்தது‌ குறிப்பிடத்தக்கது. புதிய பாம்பன் பாலப் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் புதிய பாலம் வருகிற மார்ச் மாதம் ரயில் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

இது தொடர்பாக ராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், ``பாம்பன் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அதில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளைக் கண்டறிந்து தற்காலிகமாக சீர் செய்துவந்தோம். இந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கிற இந்த அதிர்வு எதிலிருந்து ஏற்பட்டது என்பதைக் கண்டறிவதில் சில சிரமங்கள் உருவாகியிருக்கிறது. பல ஆயிரம் மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட இதைச் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியாது. அதனால் பாம்பன் பழைய பாலத்தில் என்ன பிரச்னை என்பதை முழுமையாகக் கண்டறிந்த பிறகுதான் ரயில் போக்குவரத்து இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்படும். மேலும், புதிய பாலம் கட்டுமானப் பணி 92 சதவிகிதம் நிறைவடைந்து வருகிற மார்ச் மாதம் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, அதுவரை பழைய பாலத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்கலாமா எனவும் ஆலோசனையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.