Published:Updated:

ஜவ்வாதுமலை: கையோடு பெயர்ந்து வரும் புதிய தார் சாலை; வைரலான வீடியோ; மிரட்டப்பட்டார்களா மக்கள்?!

தரமற்ற சாலை? - ஜவ்வாதுமலை

நீண்ட நாள்களுக்கு பின்னர், மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் போடப்பட்ட தார் சாலை, தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவ்வாதுமலை: கையோடு பெயர்ந்து வரும் புதிய தார் சாலை; வைரலான வீடியோ; மிரட்டப்பட்டார்களா மக்கள்?!

நீண்ட நாள்களுக்கு பின்னர், மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் போடப்பட்ட தார் சாலை, தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தரமற்ற சாலை? - ஜவ்வாதுமலை

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஜவ்வாதுமலை. இதில், திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஜமுனாமரத்தூர் அருகே... ஊர்கவுண்டனூர் ஊராட்சியில் உள்ள குக்கிராமம் தான் குட்டூர். சாலையே இல்லாமல், மண்பாதையை பயன்படுத்தி வந்த இந்த மலைவாழ் பழங்குடி சமூக மக்களுக்காக 7 வருடங்களுக்கு முன்னர் சாலை ஒன்று அமைத்து தரப்பட்டுள்ளது. அந்த சாலையும் சிறிது காலத்திலேயே பழுதடைந்து போக, நல்லதொரு சாலை இல்லாமல் போராடி வந்துள்ளனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, ஊர்கவுண்டனூர் - குட்டூர் சாலையில் 2 கி.மீ தூரம் புதிய தார் சாலை அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த சாலை தரமே இல்லாமல் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிலர் அந்த சாலையை கரங்களாலே பெயர்த்தெடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, ட்வீட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை ட்விட்டர் பதிவு.
அண்ணாமலை ட்விட்டர் பதிவு.

இது தொடர்பாக, செங்கம் தாலுக்கா சி.பி.எம் செயலாளர் சர்தார் என்பவரிடம் பேசினோம். ``7 வருடங்களுக்கு முன்பு வரை குட்டூர் பகுதி மக்கள் சாலை இல்லாமல் வயல்வெளி வரப்பு, மண்பாதையை தான் பயன்படுத்தி வந்தார்கள். புதிய தார் சாலை அமைக்கும் பணி மேற்கொண்டபோது குட்டூர் வரை சாலையை கொண்டுச்செல்ல முடியாமல் இருந்தது. வழியில் இருந்த ஆக்கிரமிப்புகளை எங்கள் கட்சியின் சார்பில் அகற்ற சொல்லி குரல் கொடுத்த போது, அதிகாரிகள் அங்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், சில மாதங்களிலேயே அந்த சாலை சேதமாகிவிட்டது. அதன் பின்னர், பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்த சாலை 2 கி.மீ தூரம் அமைக்கப்பட்டது. செங்கம் பகுதி தி.மு.க நகர செயலாளர் அன்பு என்பவர் பெயரில் சாலை அமைக்கும் ஒப்பந்தம் பெறப்பட்ட நிலையில், அருகில் உள்ள கள்ளாத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் சிவானந்தம் என்பவர் இதனை சப்-கான்ட்ராக்டாக பெற்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரால் தான் இந்த தரமற்ற சாலை போடப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய சாலை அமைக்கும் பணியை, அதிகபட்சமாக 15 மணி நேரத்தில் முடித்துள்ளனர். 34 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 5 லட்ச ரூபாய் கொண்டு கூட அந்த சாலையை அமைத்திருக்க மாட்டார்கள். 9-ம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு என்பதினால் நாங்கள் யாரும் சாலை அமைக்கும் போது இல்லை. இருந்திருந்தால் தரமற்ற சாலையை அமைக்கவிடாமல் தடுத்திருப்போம்.

புதியதாக போடப்பட்ட தார் சாலையை கரங்களால் பெயர்க்கும் மக்கள்
புதியதாக போடப்பட்ட தார் சாலையை கரங்களால் பெயர்க்கும் மக்கள்

சாலை தரமற்று போடப்படுவதாகவும், நடந்து சென்றாலே நகர்கிறது என்றும் எங்களுக்கு அதிர்ச்சிப்பட தகவல் வந்ததை தொடர்ந்து, 13-ம் தேதி போல தோழர்களுடன் நேரில் சென்று சாலையை சோதித்தோம். கையால் பெயர்த்து பார்த்த போது கையோடவே வந்தது. எனவே, 15-ம் தேதியன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டோம். அப்போது அவரோ, "நாங்க ஏதும் பண்ண முடியாதுங்க. கலெக்டரிடம் பேசுங்கள்" என சொல்லிவிட்டார். ஆனால், அந்த சாலையில் ஒரு பிடிப்பே இல்லாமல்... கையில் எடுத்தால் 'பிஸ்கேட்' உதிர்வதை போல உதிர்ந்தது. அதன் வீடியோ வெளியான நிலையில், சுமார் 4 பேர் அந்த பகுதிக்கு சென்று "யார் வெளிட்டது, வெட்டிடுவோம்" என மிரட்டி உள்ளனர். ஊடகங்களில் செய்தியானதும் 10 பேர் வரை சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் தான், 17-ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தோம்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், "இது குறித்து விசாரணை பண்ணச் சொல்லி இருக்கிறேன். அதிகாரிகள் வருவார்கள்" என்றார். அதே போல, 18-ம் தேதி காலையில் இன்ஜினியர் மற்றும் இரண்டு ஏ.டி வந்தார்கள். அவர்களுடன் வந்த சப்-கான்ட்ராக்டர் சிவானந்தமோ அடியாட்கள் சுமார் 50 பேரை அழைத்து வந்திருக்கிறார். அதை எப்படி அந்த அதிகாரிகள் அனுமதித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. அடியாட்கள் முன்னிலையில், "இப்போது வந்து சாலையை பெயர்த்து காண்பியுங்கள்" என்று மக்களை அழைத்தால் எப்படி முன் வருவார்கள்?

புகார் மனு, சர்தார்
புகார் மனு, சர்தார்

விவசாய கூலி வேலைக்கு மக்கள் காலையிலேயே சென்றுவிடுவார்கள் என்பதால் யாரும் பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தகவல் கேள்விப்பட்டு ஊர்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வந்து சேர, அடியாட்களாக வந்தவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி இன்று (20.08.2022) மதியம் அதிகாரிகள் சிலர் வந்தார்கள். "10 நாட்கள் கடந்த ரோடு இப்படி கையோடு வருதே" சார் என்று நாங்கள் கேட்டதற்கு... "காய்வதற்கு இன்னும் டைம் ஆகும்" என்று சொல்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் போடும் ரோட்டில் அன்றைய தினமே கனரக வாகங்கள் சென்றாலும் போடப்பட்ட சாலை உடைவதில்லை. இந்த சாலை போட்டு10 நாட்களை கடந்த பின்னும், ஒரு அரசு அதிகாரி இப்படி சொல்கிறார். திடமாக இன்னும் எத்தனை மாதம் ஆகும் என்றுதான் தெரியவில்லை. ஜவ்வாது மலையில், குட்டூர் பகுதியான இங்கு ஒரு அருவி இருக்கிறது. அதனால் பெரும்பாலானோர் வந்து செல்வார்கள். மழை அதிகமாக பெய்யும் இந்த பகுதியில், கனரக வாகனங்கள் வந்து சென்றால் சில மாதங்களை கூட தாண்டாது இந்த சாலை. வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட உள்ளதாக தகவல். எனவே, ஆட்சியர் அவர்கள் இந்த சாலையில் தரத்தை பார்த்துவிட்டு, மீண்டும் சாலையை திடமாக அமைத்துதர வேண்டும். ஒப்பந்ததாரரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் விரிவாக.

இது குறித்து ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசினோம். "நிர்வாக பொறியாளர் அளவில் ஆய்வுக்கு செய்கிறார்கள். அதற்கான ரிப்போர்ட் வந்தால் தான் தெளிவாக கூறமுடியும்" என்றார்.

மேலும், உதவி செயற்பொறியாளரிடம் இதுகுறித்து பேசினோம். "சாலை நன்றாக தான் இருக்கிறது. வாகனங்கள் சாலையோரம் ஒதுங்குவதற்கான இடத்தை விடமாட்டேங்கிறார்கள். அதை தயார் செய்து வருகிறோம். நாங்கள் அங்கு சாலையை பரிசோதிக்க தான் சென்றோம். ஆட்கள் பலர் அங்கு வந்தார்கள் என்றால்... எங்களுக்கு எப்படி தெரியும். அவர்களை தான் கேட்க வேண்டும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கூட தெரியாது" என்றார்.