Published:Updated:

`கடவுளுக்கும் கண்ணில்லையா..?' - விழிச்சவால் மகன்களுடன் வறுமையில் வாடும் விசாலாட்சி

பிள்ளைகளுடன் விசாலாட்சி

``என் பெரிய பையன் அன்புக்கு, எட்டாவது படிச்சுக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு கண்பார்வை போயிடுச்சு. அதே நிலமைதான் கடைசிப் பையன் ராஜேஷுக்கும். அன்புவோட மகளுக்கும் பார்வை போயிடுச்சு. மூணாவது பையன் வினோத், ஐயப்பன் கோயிலுக்குப் போனப்போ ரயில் விபத்துல இறந்துட்டான்.''

`கடவுளுக்கும் கண்ணில்லையா..?' - விழிச்சவால் மகன்களுடன் வறுமையில் வாடும் விசாலாட்சி

``என் பெரிய பையன் அன்புக்கு, எட்டாவது படிச்சுக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு கண்பார்வை போயிடுச்சு. அதே நிலமைதான் கடைசிப் பையன் ராஜேஷுக்கும். அன்புவோட மகளுக்கும் பார்வை போயிடுச்சு. மூணாவது பையன் வினோத், ஐயப்பன் கோயிலுக்குப் போனப்போ ரயில் விபத்துல இறந்துட்டான்.''

Published:Updated:
பிள்ளைகளுடன் விசாலாட்சி

குடும்பத்தின் வறுமையையும், துயரங்களையும் தங்கள் தலைமீது வைத்து சுமக்கும் பெண்களின் மனவலிமை எப்போதும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதோடு முதுமையும் சேர்ந்துகொண்டபோதும், வாழ்க்கையை வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டபோதும், பிள்ளைகள் மீது கொண்ட ஒப்பற்ற பாசத்தால் இன்று வரை முட்டிமோதி குடும்பத்தை நடத்தி வருகிறார் விசாலாட்சி.

விசாலாட்சி கணவரால் கைவிடப்பட்டவர். இந்நிலையில், அவரின் இரண்டு பிள்ளைகளுக்குத் திடீரென கண்பார்வை பறிபோய்விட்டது. மூன்றாவது பிள்ளை ரயில் விபத்தில் திடீரென இறந்துவிட்டார். இப்படி சோகங்களையும் துயரங்களையும் மட்டுமே வாழ்வாக வாழ்ந்துவரும் விசாலாட்சிக்கு வயது 60. உறவுத் துயரங்களுடன், வறுமை என்ற இருளும் தற்போது சேர்ந்துகொண்டு அவரை வதைக்கத் தொடங்கியுள்ளது.

விசாலாட்சி வீடு
விசாலாட்சி வீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது வி.மாத்தூர் கிராமம். ஊரின் தொடக்கத்திலேயே எதிரில் வந்த முதியவரிடம், ``விசாலாட்சி பாட்டி வீடு..." என்று ஆரம்பித்தபோது, ``அதோ... அந்த மாரியாத்தா கோயில் பக்கத்துல இருக்குது பாருங்க. பாவம், பார்வை இழந்த பிள்ளைகளை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டப்படுறாங்க... காலம்தான் அவங்களுக்கு ஏதாச்சும் வெளிச்சத்தைக் காட்டணும்'' என்று வருந்தியபடி வழிகாட்டிக் கடந்தார். விசாலாட்சியின் வீட்டை அடைந்தோம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் அரசாங்கம் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு. மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதன் மேல் கீற்றுகளால் வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டு, தகர ஷீட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. அதற்கு மேல் வார்த்தைகள் எதுவும் தேவைப்படவில்லை அவர்களது வறுமையைச் சொல்ல. தன் முதுகை அழுத்திப் பிடித்தபடி பாத்திரங்களை அடுக்கிக்கொண்டிருந்தார் விசாலாட்சி. உழைக்க விதி விரட்ட, உடல் ஒத்துழைக்காமல் இருக்க... அவரது போராட்டத்தை உணர முடிந்தது.

``நான் என்னன்னு சொல்றது... தெய்வமே என் பாவத்தைக் கொட்டிக்கிச்சு..." - வேதனையின் உச்சத்தில் வார்த்தைகளை உதிர்த்தபடியே பேசத் தொடங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே என் தாய்மாமனுக்கு என்னக் கட்டிக் கொடுத்துட்டாங்க. நான் வாழவந்த ஊருதான் வி.மாத்தூர். எனக்கு நாலும் ஆம்பளப் பசங்க. என் வீட்டுக்காரரு, என்னைக் கட்டிக்கிட்டு வந்ததிலிருந்தே தண்ணி அடிச்சிட்டு பிரச்னை பண்ணிகிட்டே இருப்பாரு. கடைசிப் பையனுக்கு மூணு வயசு இருக்கும்போதே, எங்கள நிராதரவா விட்டுட்டு அவங்க அக்கா வீட்டோட அவரு போயிட்டாரு. அதுல இருந்து இன்னிக்கு வரைக்கும் அந்த மனுஷன்கிட்ட பேச்சு கிடையாது'' என்றவர், வைராக்கியத்தை மட்டுமே துணையாகக் கொண்டு தன் பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

``ஆடு, மாடு மேய்ச்சு, களைக்காம்பு வெட்டித்தான் என் புள்ளைங்கள காப்பாத்திக்கிட்டு வந்தேன். எம்புள்ளைங்கதான் எனக்கு ஒரே சொத்து, அவங்க கை, கால் சுகத்தோட இருந்து, அவங்களுக்குப் பசியாத்தி, படிக்கவெச்சு வளர்த்து விட்டுட்டேன்னா போதும்னு பொழைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அம்புட்டு பேராசையா உனக்குனு நினைச்சிருச்சு போல தெய்வம்.

என் பெரிய பையன் அன்பு எட்டாவது படிச்சிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு கண்பார்வை போயிடுச்சு. நான் தவிச்ச தவிப்பை வார்த்தைகள்ள சொல்ல முடியாது. அதுல இருந்து ஆறித்தேறி வர்றதுக்குள்ள, அதே நிலமைதான் கடைசிப் பையன் ராஜேஷுக்கும். பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்தப்போ டைபாய்டு மாதிரி ஜுரம் வந்து திடீர்னு அவனுக்கும் பார்வை போயிடுச்சு. என் நிலைமை எந்தத் தாய்க்கும் வரக்கூடாதுனு அழுது அழுது ஓய்ஞ்சேன். கண்ணீரு நம்ம துயரத்தை எல்லாம் கழுவுமா என்ன? எல்லா வைத்தியமும் செஞ்சு பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் கண்பார்வை திரும்பவே இல்ல'' எனும்போது, விசாலாட்சியின் முகம் வடிந்து வாடுகிறது.

விசாலாட்சி, மகன்கள் ராஜேஷ், அன்பு, மற்றும் அன்புவின் மகள்
விசாலாட்சி, மகன்கள் ராஜேஷ், அன்பு, மற்றும் அன்புவின் மகள்

``ரெண்டாவது பிள்ளை ராஜாவும், மூணாவது பிள்ளை வினோத்தும் மட்டும்தான் நல்லா இருந்தாங்க. ராஜா கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டோட போயிட்டான். அப்பப்போ எங்க நெனப்பு வந்தா இங்க வந்து பார்த்துட்டுப் போவான்'' என்பவருக்கு, அடுத்து விழுந்த இடி, இதுவரை எதிர்கொண்டவற்றை எல்லாம் விட கொடூரம்.

``என் மூணாவது புள்ள வினோத்து தங்கம், 17 வருஷத்துக்கு முன்னாடி ஐயப்பன் கோயிலுக்குப் போனப்போ ரயில் விபத்துல இறந்துட்டான். அதைக் கேட்டப்போ, என் கட்டையே ஆடிப்போச்சு. எங்களைக் காப்பாத்த வேண்டிய தெய்வமே, என் பாவத்தைக் கொட்டிக்கிச்சு. இதுக்கு மேல என் துயரத்தை நான் என்னன்னு சொல்ல?" - கண்ணீர் பெருக்கெடுக்கிறது விசாலாட்சிக்கு.

``வினோத் இறந்ததுக்கு அப்புறம் நடைபிணமாதான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். அதோடவும் என் பாரம் முடியல. அதுவரைக்கும் நான் பட்ட கஷ்டமெல்லாம் போதாதுனு, என்னை இன்னும் சோதிக்க ஆரம்பிச்சிடுச்சு இந்த தெய்வம். எல்லாம் பொய்யாகிப் போனாலும், என் ஒத்த ஒடம்பை வெச்சு, உழைப்பை வெச்சு என் குடும்பத்தைக் கரையேத்திடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுவும் முடிவுக்கு வந்துடுச்சு. எனக்கு முதுகுத் தண்டுவடத்துல பாதிப்பு ஏற்பட்டு, ஆபரேஷன் பண்ணினோம். அதுக்கு அப்புறம் என்னால கொஞ்ச நேரம்கூட உக்கார முடியல. படுத்துக்கிட்டுதான் இருக்கணும். அப்பப்போ மனசை புடிச்சுக்கிட்டு, வலியை பொறுத்துக்கிட்டு வீட்டு வேலைகளை செய்றேன். சில சமயம் அதுவும் முடியாமப் போகும். இப்போ வயசும் ஆகிடுச்சு. வினோத் இறந்தப்ப மனசளவுல நான் பாதிக்கப்பட்டதால இன்னிக்கு வரைக்கும் மனநலத்துக்கான மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு வர்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாடி எங்களுக்கு கஞ்சி ஊத்தின ஆடு, மாடும் இப்போ இல்ல. என்னாலயும் கூலி வேலைக்குப் போக முடியாமப் போனதால சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறோம்'' என்று சொல்லும் விசாலாட்சி வீட்டில், இன்னும் இரு ஜோடி கண்களும் விதியால் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது ஆற்றவே முடியாத சோகம்.

``என் பெரிய புள்ளை அன்புக்குக் கல்யாணமாகி மூணு பொம்பளப் புள்ளைங்க இருக்கு. அதுல கடைசிப் பொண்ணுக்கும் இப்போ கண்பார்வை போயிடுச்சு. என் கதறல் என் கட்டை வேகுற வரை ஓயுறதுக்கு வழியில்ல போல. பக்கத்துலதான் அன்பு வசிக்கிறான். அவன் பொண்டாட்டிதான் குடும்பத்தைப் பார்த்துக்குது.

இப்போ நானும் ராஜேஷ் மட்டும்தான் இந்த வீட்டுல இருக்கோம். ராஜேஷுக்கு மாசம் 1,000 ரூபாய் உதவித்தொகை அரசாங்கத்துல இருந்து தருவாங்க. அத வெச்சுதான் ஒரு வேளையாவது ஏதோ கஞ்சி குடிச்சிக்கிட்டு வர்றோம். மழை வந்துச்சுனா வீடு முழுக்க ஒழுகும், அப்பப்போ உடைஞ்சு விழும். அதனால இங்க இருக்க பயந்துக்கிட்டு பின்னாடி ஒரு கொட்டா கட்டி அதுல இருந்தோம். போன தடவை மழை வந்தப்போ அந்த கொட்டாவும் சரிஞ்சிடுச்சு. அதுக்கு அப்புறமாதான், இந்த வீட்டுக்கு மேல கூரை போட்டுக் கொடுத்து உதவி பண்ணினாங்க, என் கூடப்பொறந்த தங்கச்சிங்க. அப்பப்போ அவங்களால முடிஞ்ச உதவிய எங்களுக்குப் பண்ணுவாங்க. எனக்கு மாத்திரை, மருந்து வாங்கித் தருவாங்க. அவங்களும் இல்லைன்னா எங்க கதி எப்போவோ முடிஞ்சிருக்கும்னு தோணும்.

நான் இருக்குற வரைக்கும்தான் ராஜேஷுக்கு பாதுகாப்பு. அவனால தனியா எங்கேயும் போக முடியாது. நானும் போயிட்டா இவன் நிலைமை என்ன ஆகும்? எங்க வாழ்க்கையில இவ்வளவு அனுபவிக்கிறோமே… அந்தக் கடவுளுக்கும் கண்ணில்லையா…” - அதற்கு மேல் பேச முடியாமல் கதறி அழுதார் விசாலாட்சி.

தன் மகன்கள், பேத்தியுடன் விசாலாட்சி
தன் மகன்கள், பேத்தியுடன் விசாலாட்சி

ராஜேஷிடம் பேசினோம். ``எனக்கு இப்போ 33 வயசு ஆகுது; 90% கண்பார்வை இல்லைங்க. எனக்குக் கல்யாணம் ஆச்சு. வருமானம் இல்லைன்னு மூணு மாசத்துலேயே அவங்க விட்டுட்டுப் போயிட்டாங்க. எங்க அம்மாதான் எனக்காகவும், தனக்கும் பார்வையில்லாம, தன் பொண்ணுக்கும் பார்வையில்லாம சிரமப்படுற எங்க அண்ணனுக்காகவும் படாத பாடு படுறாங்க.

இந்த வீடு பங்காளிகளுக்குப் பங்கு என்பதால, இதுவும் நிரந்தரம் இல்ல. விழுப்புரத்துல முன்னாள் எஸ்.பி-யா இருந்த ராதாகிருஷ்ணன் சார், முதல் கொரோனா அலை நேரத்துல அரிசி, மளிகைப் பொருள் வாங்கிக் கொடுத்து பேருதவியா இருந்தாங்க. இப்போ அவரும் விழுப்புரத்துல இல்ல. நாங்க சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறோம். எனக்கு கொஞ்சம் செல்போன் பத்தி தெரியும். அரசாங்கம், செல்போன்ல சம்பந்தமா பார்க்குற மாதிரி எனக்கு ஒரு வேலையும், எங்களுக்கு ஒரு வீடும் கட்டித் தந்தா எங்க கஷ்டம் கொஞ்சம் குறையும். அம்மா என்னையும், நான் அம்மாவையும் கடைசிவரை பார்த்துக்கணும். ஆயுசுக்கும் துன்பங்களோடவே வாழப் பழகிட்டோம்தான். ஆனா, வயித்துக்கு இல்லாம வாழ முடியாதே...'' என்றார் சோகம் தாளாத குரலில். கனத்த மனதோடு விடைபெற்று வந்தோம்.

இந்நிலையில் நம்மை அவசரநிலையில் அழைத்த ராஜேஷ், "அம்மாவுக்கு இப்போ திடீர்னு உடம்பு முடியாம போய்டுச்சு சார். ஏற்கெனவே ஆபரேஷன் பண்ணின முதுகுத் தண்டுவடத்துல மறுபடியும் பாதிப்பாகிடுச்சு. பாண்டிச்சேரி பக்கத்துல இருக்குற கதிர்காமம் அரசாங்க ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். பாதி மாத்திரை, மருந்து ஆஸ்பத்திரியிலயே கொடுத்துடுறாங்க. மீதி வெளியில வாங்கச் சொல்லுறாங்க. சித்தி ஒருத்தவங்க, கூட வந்து பாத்துக்குறாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்றார் உறவுகளற்றுக் கைவிடப்பட்ட வறண்ட குரலில்.

கணவர் விட்டுச் சென்ற நிராதரவு, வறுமை, பறிபோன பிள்ளைகளின் பார்வை, துள்ளத் துடிக்கப் பறிகொடுத்த பிள்ளையின் உயிர், இருண்டு போயிருக்கும் பேத்தியின் உலகம், இவற்றுடன் இப்போது உழைப்பையும் கூலியையும் முடக்கும் உடல் நோவு... இருள் இரும்புத் திரையாகக் கிடக்கும் விசாலாட்சியின் வாழ்க்கைக்குக் கிடைக்குமா ஒளி..?!

விசாலாட்சி பாட்டியின் குடும்பம் தங்கள் அடிப்படை தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் பிறரின் உதவியை எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். இவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism