Published:Updated:

நெல்லை: `வீட்டில் புதையல்; குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி!’ - அதிரவைக்கும் பின்னணி

கிரானராஜன்
கிரானராஜன்

``புதையல் எடுப்பதற்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்த மந்திரவாதி, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். பின்னர் புதையல் எடுக்கு பூஜைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.”

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்தவர் பார்வதி. 70 வயது மூதாட்டியான அவரிடம் டோனாவூரைச் சேர்ந்த சாமியார் கிரானராஜன் (55) என்ற மந்திரவாதி அறிமுகமாகி இருக்கிறார். பில்லி சூனியம் வைப்பது மாந்திரீகம் செய்வது, புதையல் எடுப்பது ஆகியவை தனக்குத் தெரியும் என்று அவர் அப்பகுதி மக்களை நம்ப வைத்திருக்கிறார். கிரானராஜனுக்கு மாந்திரீக விஷயங்கள் தெரியும் என்று மக்கள் நம்பியதால் அவரை எதிர்த்து கூட யாரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். பார்வதி பாட்டிக்கு குழந்தைகள் இல்லாததால் குமரேசன் என்பவரை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கடைசி பையன் ஐந்து மாதக் கைக்குழந்தையாக இருக்கிறார். பார்வதியின் வீட்டில் அடிக்கடி இரவு நேர பூஜைகள் நடந்துள்ளன. பொதுமக்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.

பார்வதி
பார்வதி

மந்திரவாதி கிரானராஜன் சில வாரங்களுக்கு முன்பு பூஜை செய்தபோது, பார்வதி பாட்டியின் வீட்டில் புதையல் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் புதையலை எடுத்தால் கோடீஸ்வரனாகிவிட முடியம் என்று ஆசை வார்த்தை சொல்லியிருக்கிறார். தன்னைத் தவிர வேறு யாராலும் புதையலை எடுக்க முடியாது என்றும் அதற்காக சிறப்பு விரதம் இருந்து யாகம் நடத்த உள்ளதாகவும் சொல்லியுள்ளார். மந்திரவாதி சொன்னதை உண்மை என்று நம்பிய பார்வதி பாட்டி, வீட்டில் புதைந்து கிடக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையலை எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். புதையல் எடுப்பதற்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்த மந்திரவாதி, அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கிறார். பின்னர் புதையல் எடுக்கும் பூஜைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பூஜையைத் தொடங்கியுள்ளார், மந்திரவாதி கிரானராஜன். பூஜையில் பலியிடுவதற்காகக் கோழி மற்றும் கறுப்பு பூனை வேண்டும் எனக் கேட்டுள்ளார். பார்வதியின் மகன் குமரேசன் கோழி, கறுப்புப் பூனையைத் தயாராக வைத்திருந்திருக்கிறார். திட்டமிட்டபடி பார்வதி பாட்டின் வீட்டுக்குள் பூஜை தொடங்கியிருக்கிறது. மந்திரங்களைச் சொன்னபடியே கிரானராஜன் வீட்டை வலம் வந்திருக்கிறார். பின்னர், திட்டமிட்டபடி கோழியை வீட்டின் ஒரு மூலையில் பலி கொடுத்துள்ளார். அதன் பிறகு கறுப்புப் பூனையை வெட்டிப் பலிகொடுக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. புகை மூட்டம், ஆள் சத்தம் ஆகியவற்றால் அச்சம் அடைந்த பூனை, பலிகொடுக்க இருந்தபோது கையில் இருந்து நழுவி பாய்ந்து ஓடி மறைந்தது. அதனால் மந்திரங்கள் பலிக்காமல் போய்விடுமே என கிரானராஜன் பதறியுள்ளார்.

`பகலில் காய்கறி வியாபாரம்; இரவில் மாந்திரீகம்!’- புதுக்கோட்டை சிறுமி கொலையில் சிக்கிய மந்திரவாதி

``திட்டமிட்டபடி பூஜையில் பலி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடும். அதோடு, வீட்டுக்குள் இருக்கும் புதையல் படு பாதாளத்துக்குச் சென்றுவிடும். பாதியில் பூஜையை நிறுத்தினால் குடும்பத்து ஆட்களுக்கு ஆபத்து ஏற்படும்" என்று பயமுறுத்தியிருக்கிறார். மந்திரவாதி சொன்னதைக் கேட்டு பார்வதி பாட்டியும் அவரின் மகன் குமரேசனும் அச்சம் அடைந்துள்ளார்கள். அதனால், `பூஜையை நிறைவு செய்ய என்ன செய்ய வேண்டும்' என்று பார்வதி பாட்டி கேட்டிருக்கிறார். அப்போது மந்திரவாதி, 'இந்த பூஜை முடிக்க குமரேசனின மூத்த மகன் அல்லது இளைய மகனை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். புதையலும் கைக்குக் கிடைத்துவிடும்' என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த குமரேசன் தன்னுடைய மகன், ஐந்து மாத கைக்குழந்தையைப் பலிகொடுக்கச் சம்மதித்துள்ளார். ஆனால், அவரின் மனைவி அதற்குச் சம்மதிக்க மறுத்து சண்டையிட்டிருக்கிறார்.

வீடு
வீடு

இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது, குமரேசனின் மனைவி கையில் இருந்த குழந்தையை மந்திரவாதி கிரானராஜன் பிடுங்க முயன்றுள்ளார். அவரது கையைத் தட்டிவிட்டு கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், அழுதபடியே கிராமத்து மக்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். அவர்கள் களக்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த களக்காடு போலீஸார் குழந்தையை மீட்டதுடன், போலி சாமியார் கிரானராஜனை கைது செய்தார்கள். அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மூதாட்டி பார்வதி மற்றும் குமரேசன் ஆகியோரையும் கைது செய்தார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் பச்சிளம் குழந்தையை போலி சாமியார் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56 பக்க மாந்திரீகக் கையேடு; ஃபோர்டு கார்!-புதுக்கோட்டை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் மந்திரவாதி
அடுத்த கட்டுரைக்கு