Published:Updated:

பெரம்பலூர்:`சொத்துப் பிரச்னை; காய்ச்சலுக்கு மருந்து!’ -காவலர்களை அதிர வைத்த கொலை

பெரம்பலூர்: ``அக்குடும்பத்தின் மூத்த மகளான வள்ளி நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில்போது சொத்துக்காக இக்கொலைகளைச் செய்ததாக வள்ளி ஒப்புக்கொண்டிருக்கிறார்.”

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் இறந்து விட்டார். இவருக்கு ராணி என்ற மனைவியும் வள்ளி மற்றும் ராஜேஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர். வள்ளி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரையும் ராஜேஸ்வரி அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ராஜேஸ்வரி தன் தாய் ராணி வீட்டில் வசித்து வந்தார். வள்ளி தன் மகனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி காலை நீண்ட நேரமாகியும் ராணியின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி வீட்டின் முன் அறையில் இறந்து கிடந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் தாய் ராணி உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

கொலை
கொலை

இதையறிந்த அவர்களது உறவினர்கள் ராணியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிறிது நேரத்தில் ராணி இறந்துவிட்டார். காவல்துறையினர் தங்களுக்குக் கிடைத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் மர்மமான முறையில் இறந்துகிடந்ததால் அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அக்குடும்பத்தின் மூத்த மகளான வள்ளி நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது சொத்துக்காக இக்கொலைகளைச் செய்ததாக வள்ளி ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர்களை எப்படி கொலை செய்தார் என்பதை காவல்துறையினருக்கு வள்ளி சொன்னபோது அவர்கள் மிரண்டும் போயுள்ளனர்.

முன்விரோதம், கட்டையால் அடித்து விவசாயி கொலை! - புதுக்கோட்டையில் பெண் உட்பட 3 பேர் கைது

வள்ளி அப்படி என்னதான் செய்தார் என இவ்வழக்கை விசாரித்து வந்த காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது, ``வள்ளிக்கு அதிகளவில் கடன் இருந்திருக்கிறது. இந்த நிலையில் அவரின் தாய் ராணியிடம் சென்று எனது கடனை அடைக்கப் பணம் கொடுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறார். அதற்கு அவர் என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று சொல்ல அதற்கு, வள்ளி வீடு அல்லது நிலத்தை விற்று பணம் தர வேண்டும் என அடிக்கடி பிரச்னை செய்திருக்கிறார். இந்த நிலையில், அவரின் தங்கை ராஜேஸ்வரியும் சொத்தை விற்கச் சம்மதிக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வள்ளி மற்றும் 15 வயதுடைய அவரின் மகன் இருவரும் சேர்ந்துகொண்டு அதிகாலை 3 மணியளவில் தன் தாய் வீட்டுக்குச் சென்று வீட்டின் மேல்மாடியில் படுத்திருந்த ராணிக்குக் காய்ச்சலுக்கு இந்த மருந்து குடித்தால் குணமாகிவிடும் என்று கூறி பாலுடன் விஷத்தைக் கலந்து வலுக்கட்டாயமாகக் கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.

பெரம்பலூர் எஸ்.பி அலுவலகம்
பெரம்பலூர் எஸ்.பி அலுவலகம்

தொடர்ந்து பேசிய அதிகாரிகள், ``பின்னர் வீட்டினுள் படுத்திருந்த ராஜேஸ்வரியின் கையை கயிற்றால் கட்டிப்போட்டு போர்வையால் முகத்தை அழுத்தியும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தை ஒப்புக்கொண்டார். சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில், தன் அம்மா ராணி மற்றும் சகோதரி ராஜேஸ்வரி ஆகியோரை கொல்வதற்காக வள்ளியும் அவரின் 15 வயது மகனும் சேர்ந்து திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். இருவரையும் நேற்று இரவு கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வள்ளியைப் பெரம்பலூர் கிளைச் சிறையிலும், 15 வயது சிறுவனைத் திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர். தன் அம்மாவையும் சகோதரியையும் வள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அதிர்ச்சி: கொலை வழக்கில் விடுதலையானவர்; பிள்ளைகள் கண்முன்னே வெட்டிக் கொலை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு