Published:Updated:

'பெண்ணுக்கு மனநலப் பிரச்னை!' - திருமணத்தை நிறுத்திய பெற்றோருடன் போராடும் மாப்பிள்ளை

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

தாலி கட்டும் நேரத்தில், மணப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி திருமணத்தைத் தடுத்துநிறுத்தினர். ஆத்திரமடைந்த மாப்பிள்ளை ``அதே பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’’ என காவல் நிலையம் சென்று தன் குடும்பத்தினர் மீதே புகார் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ravi
ravi

வேலூரை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரின் மகன் ரவி (35). கூரியர் நிறுவனத்தில் சுமை தூக்கும் வேலை செய்துவருகிறார். இவருக்கும் வேலூர் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்த சதாசிவம்-சரோஜா தம்பதியின் மகள் ரோஜா பிரியா (20) என்பவருக்கும் இன்று காலை, வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. 

ravi
ravi

உறவினர்கள் கூடினர். மணக்கோலத்தில் ரவியும், ரோஜாபிரியாவும் அருகருகில் அமர்ந்தனர். தாலி கட்டும் நேரத்தில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். ``மணப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்; எங்களை ஏமாற்றி திருமணம் செய்துவைக்கப் பார்க்கிறார்கள்; இந்தத் திருமணத்தில் எங்களுக்குத் துளியும் விருப்பமில்லை’’ என்று தகராறு செய்தனர்.

பெண் வீட்டார் பதறிப் போயினர். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அனைவரும் திகைத்து நின்ற நேரத்தில், மாப்பிள்ளை ரவி, ``மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. நான் முழுமனதுடன் திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறேன். எனக்கு இந்தப் பெண்தான் மனைவியாக வர வேண்டும்’’ என்றார். 

Marriage
Marriage

மாப்பிள்ளையின் விருப்பத்துக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணத்தை நடத்தவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். உடனே, மாப்பிள்ளை ரவி அருகில் உள்ள வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். திருமணத்தை நடத்திவைக்கக் காவல் துறையினரிடம் முறையிட்டார்.

இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய போலீஸார், ``ரவியின் திருமணத்தைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. விருப்பமில்லாதவர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை. பிரச்னை செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ரவியின் குடும்பத்தாரை எச்சரித்து அனுப்பினர். பிறகு, ரோஜா பிரியாவுடன் பதிவுத் திருமணம் செய்துகொள்ளுமாறு ரவியிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

vellore north police station
vellore north police station

திருமணத்துக்கான ஏற்பாட்டை ரவி தன்னந்தனியாக செய்துவருகிறார். ``மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. நான் வாழ்க்கை கொடுக்கிறேன்’’ என்றுகூறி குடும்பத்தையே எதிர்த்து திருமணம் செய்யும் ரவிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இதுபோன்ற நபர்களால்தான் மனித நேயம் மரித்துப் போகாமல் காக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் நெகிழ்ச்சியடைந்தனர்.