Published:Updated:

மின்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. குழந்தையுடன் போராடும் தாய்! - நியாயம் கிடைக்குமா?

Villali
Villali

`மதியம் 1 மணியிலிருந்து இங்க அழுது புலம்பிட்டு இருக்கோம். தற்காலிகமாதான் வேலை செய்திருக்காரு; கேஸ் எடுக்க முடியாதுன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க. அதனால சாலை மறியல் பண்ணினோம்.’

காவேரிப்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான் இத்துயரம் நேர்ந்தது எனப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே போட்டக்குளி அடுத்த துடுகனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லாளி(27). இவருக்குத் திருமணாகி ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாடு மின்சார வாரியம் காவேரிப்பட்டினம் வடக்குப் பிரிவில் தற்காலிக மின் வாரிய ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

Villali
Villali

நேற்று முன்தினம் பெங்களூரு டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியாண்டியூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் பணி செய்து வந்துள்ளனர். மின்கம்பத்தை 11 பேர் தாங்கிப் பிடித்தவாறு கிரேன் மூலம் மின் கம்பத்தைத் தூக்கியுள்ளனர். அப்போது உயர்மின் கம்பியில், கிரேனின் மேற்பகுதி பட்டு மின்சாரம் பாய்ந்து வில்லாளி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்ற பணியாளர்கள் அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

வில்லாளியின் உடல் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுரப்பட்ட பின்னர் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லாளியின் மனைவி லாவண்யா ``மின் இணைப்பைத் துண்டிக்காமல் பணிபுரியச் செய்த லைன் மேன் சின்னவன், மின் முகவர் (AE) சத்யநாராயணன் ஆகியோர்தான் கணவன் இறப்புக்கு முக்கியக் காரணம். இதற்கு சட்டப்படியான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் புகாரை ஏற்காததால் லாவண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Villali  wife
Villali wife

வில்லாளியின் மனைவியை சந்தித்துப் பேசினோம்.

அவர், ``மதியம் 1 மணியிலிருந்து இங்க அழுது புலம்பிட்டு இருக்கோம். தற்காலிகமாதான் வேலை செய்திருக்காரு; கேஸ் எடுக்க முடியாதுன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க. அதனால சாலை மறியல் பண்ணினோம். நடவடிக்கை எடுக்கறோம். பேசி முடிச்சிக்கலாம்னு சமாதானம் பண்ணினாங்க. இப்போ மணி 6 (மாலை) ஆகுது. இப்போ வரை கேஸ் எடுக்கல. பேசிக்கிட்டே இருக்காங்க. எனக்கு ஒரு வயசுல பையன் இருக்கான். எங்களுக்குனு இப்போ யாருடைய ஆதரவும் இல்ல. எப்படி என் புள்ளைய வளர்க்கப் போறனோ தெரியல!" என்றார் கண்ணீருடன்.

அப்போது அங்கு வந்திருந்த அ.தி.மு.க நிர்வாகியும், குண்டலப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவருமான கிருஷ்ணனை சந்தித்துப் பேசினோம். அவர், ``எம்.எல்.ஏ செங்குட்டுவன் வந்து பேசியிருக்கிறார். மின் வாரிய ஊழியர்கள் 6 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் 3 லட்சம் ரூபாயும், தற்காலிகப் பணியும் அளிப்பதாக பேசி முடித்திருக்கிறோம்" என்றார்.

Krishnan
Krishnan

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் பேசியபோது அவர் கூறியதாவது, ``வழக்கு பதிவு செய்திருக்கோம். வில்லாளியின் மனைவிக்கு அரசு வேலை வேண்டும் என கேட்கிறார்கள். தற்காலிகப் பணிகள் ஏதேனும் காலியாக இருந்தால் ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறோம் என தெரிவித்திருக்கிறேன்" என்றார். அவரிடம், ``6 லட்சம் மின் வாரிய ஊழியர்களும், 3 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியும் தற்காலிகப் பணியும் அளிக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாயிருக்கே?” என நாம் கேட்டதற்கு, ``எங்களுக்கு அப்படி எதுவும் தெரியல!" என பதில் வந்தது.

எம்.எல்.ஏ செங்குட்டுவனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``மின் இணைப்பை அணைக்காமல் வேலை செய்தது தவறுதான். எப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க, விசாரணை மேற்கொண்ட பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

அவரிடம், முதலமைச்சர் நிவாரண நிதி, தற்காலிகப் பணிக்கான உத்தரவாதம் குறித்து கேட்டோம். “நான் லேட்டாகத்தான் போனேன், அப்படி எதுவும் நான் சொல்லவில்லை” என்ற முரணான பதில் வந்தது.

Police station
Police station

அதிகாரிகரிகள், எம்.எல்.ஏ செங்குட்டுவன் என அனைவரும் முரணான பதில்களையே தெரிவித்திருக்கிறார்கள். மின்சாரத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவினால்தான் ஒரு உயிர் பறிபோயுள்ளது. கணவனை இழந்து போராடும் லாவண்யாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு