Published:Updated:

``98 கிடா, 602 நாட்டுக்கோழி!" - இரவு 11 மணி வரை நடந்த மேலூர் கறி விருந்து!

அருண் சின்னதுரை

மேலூர் அருகே 98 கிடாயும், 602 நாட்டுக்கோழியும் வெட்டப்பட்டு வேப்ப இலையில் வேக வைத்து சமைக்கும் கறி விருந்து திருவிழா நடைபெற்றது.

கறி விருந்து
கறி விருந்து

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள வீரசூடாமனிப்பட்டி, கச்சிராயன்பட்டி, சுந்தராஜபுரம் ஆகிய மூன்று கிராமங்களும் இணைந்து ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தக் கிராம மக்கள் சேர்ந்து கறி விருந்து திருவிழாவை நடத்தியுள்ளனர். நேற்று மாலையில் இருந்து இரவுவரை கொண்டாடப்பட்ட திருவிழாவில் 98 ஆட்டுக் கிடாயும், 602 நாட்டுக்கோழிகள் சாமிக்குப் படைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. இஸ்லாமியர்களும் பங்கேற்ற இந்தத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஆடிமாத விழாவில் கறிவிருந்து
ஆடிமாத விழாவில் கறிவிருந்து

திருவிழா குறித்து வழக்கறிஞர் சுரேந்திரனிடம் பேசினோம். "அஞ்சுமுழி, அழகியாத்தாள், நெவுலிநாதன் ஆகிய மூன்று சாமிகளின் பங்காளிகள் வீரசூடாமனிப்பட்டி, கச்சிராயன்பட்டி, சுந்தராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவருகிறோம். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் முதல் திங்கள் அல்லது இரண்டாவது திங்கள் அன்று திருவிழா கொண்டாடுவோம். இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பாகவே விரதம் இருந்து காப்பு கட்டுவார்கள்.

Vikatan

திருவிழா அன்று பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் நேர்த்திக்கடன் கிடாய் மற்றும் நாட்டுக்கோழிகளை சாமிக்கு பலிகொடுத்து, அதைத் தோலுடன் வாட்டுவோம். பின்பு அதை வெட்டி மண்சட்டிகளில் வைத்து அதனுடன் வேப்ப இலைகளையும் போட்டு வேக வைப்போம். சுவைக்காக வேற எதையும் சேர்ப்பதில்லை. குறிப்பிட்ட பங்காளின் ஆண்வாரிசுகள் இந்த வேலைகளை முடித்துவிடுவோம். அதற்குப் பின் பாரம்பர்யபடி இஸ்லாமிய சகோதரர்கள் சர்க்கரை மாத்தி பாத்தியா ஓதுவார்கள்.

கறி விருந்து
கறி விருந்து

பின் பெரியகண்மாய் என்ற இடத்துக்கு மாமிச உணவுகளைக் கொண்டுவந்து ஆண்கள், பெண்கள் என்று எல்லா நபர்களுக்கும் பரிமாறுவோம். இந்த ஆண்டு 98 கிடாய்களும், 602 நாட்டுக்கோழிகளும் சாமிக்குப் படைக்கப்பட்டன. மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு விருந்து நிறைவு பெற்றது. இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர். பலியிடப்பட்ட நாட்டுக்கோழி மற்றும் கிடாயின் ரத்தங்கள் கண்மாய் நீரில் கலக்கப்படும். இதனால் நல்ல மழையும், விவசாயமும் செழிக்கும் என்று நம்பிக்கை எங்களிடம் பாரம்பர்யமாக இருந்துவருகிறது" என்றார்.