Published:Updated:

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா ஏஜென்ட் - க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!

கைது செய்யப்பட்ட இருவர். (உள்படம்: தாமோதரன்)

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா ஏஜென்ட்டை போலீஸார் பத்திரமாக மீட்டனர். இந்த கடத்தலில் தொடர்புடைய இருவர் பிடிபட்ட நிலையில், மூளையாக செயல்பட்ட ஏஜென்ட்டின் உறவினரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா ஏஜென்ட் - க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா ஏஜென்ட்டை போலீஸார் பத்திரமாக மீட்டனர். இந்த கடத்தலில் தொடர்புடைய இருவர் பிடிபட்ட நிலையில், மூளையாக செயல்பட்ட ஏஜென்ட்டின் உறவினரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட இருவர். (உள்படம்: தாமோதரன்)

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் பரதராமி ஊராட்சிக்கு உட்பட்ட ஆந்திர தாசராபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், வயது 45. இவர், மோசடியில் சிக்கியிருக்கும் ‘ஆருத்ரா கோல்டு’ நிதி நிறுவனத்தில் கணக்காளராகவும், ஏஜென்ட்டாகவும் பணிபுரிந்து வந்திருக்கிறார். ‘‘ரூ.1 லட்சம் டெபாசிட் செலுத்தினால் 30% வருமானம் கிடைக்கும். ரூ.3 லட்சம் முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால், மாதம் ரூ.25,000 வீதம் 12 மாதங்களுக்குத் தருவதுடன் தங்கக்காசுகளும் வழங்கப்படும்’’ எனச் சொல்லி கிராமப்புற மக்களின் ஆசையைத் தூண்டிவிட்டது ஆருத்ரா. இந்த பேச்சை நம்பி, தாமோதரனும் தன்னைச் சார்ந்த பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்து, அந்த நிறுவனத்தாரிடம் கொடுத்திருக்கிறார். மே மாதம் ஆருத்ரா நிறுவனத்தை பொருளாதாரக் குற்றப்பிரிவினர் முடக்கியதால், தாமோதரனிடம் பணம் கொடுத்த மக்கள், அவரிடம் திரும்பப் பெற்றுத்தருமாறு கேட்டுவந்தனர்.

தாமோதரன்
தாமோதரன்

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி, கோயிலுக்குச் சென்ற தாமோதரன் மீண்டும் வீட்டுக்கு வராமல் காணாமல் போயிருக்கிறார். அவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதால், அவர் மனைவி மகாலட்சுமி பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தாமோதரனை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே, நேற்று காலை தாமோதரன் மனைவிக்கு போன் செய்த மர்மநபர்கள், ‘‘உன் புருஷனை கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.1 கோடியை கொண்டு வந்து கொடு. இல்லையெனில், கொலை செய்து வீசிவிடுவோம். மறுபடியும் லைனில் வரும் வரை காத்திரு’’ என்று மிரட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார்கள்.

இது குறித்து, உடனடியாக காவல்துறையினரிடம் தெரியப்படுத்தினார் மகாலட்சுமி. போலீஸாரின் திட்டப்படி மகாலட்சுமி கடத்தல் கும்பலிடம் பேச்சுவார்த்தைக்குத் தயாரானார். குடியாத்தத்திலிருந்து பலமநேர் செல்லும் சாலையில் ஆந்திர மாநில எல்லையோரம் காத்துகொண்டிருப்பதாக கடத்தல் கும்பல் கூறியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகாலட்சுமியும் பணம் இருப்பதைப்போல போலியான ஒரு பையை எடுத்துக்கொண்டு உறவினர் ஒருவருடன் பைக்கில், அந்த இடத்துக்குச் சென்றார். அவர் சென்ற பைக்கிற்கு முன்பு ஒரு காரிலும், பின்பு ஒரு காரிலும் சாதாரண உடையில் போலீஸார் கண்காணித்தபடி சென்றனர். ஆந்திர மாநில எல்லையிலிருக்கும் சைனகுண்டா பகுதியில் மகாலட்சுமிக்காக கடத்தல் கும்பல் காத்திருந்தனர். அவர்களை நோட்டம் பார்த்த போலீஸார், அதிரடியாக இறங்கி, கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரையும் சுற்றிவளைத்தனர். அதுவரை அந்த கார்கள்மீது கடத்தல் கும்பலுக்கு சந்தேகமே ஏற்படவில்லை. சுற்றிவளைத்தப் பின்னரும் அவர்களை போலீஸார் என நினைக்கவில்லை. தாமோதரனை காப்பாற்ற அவர் மனைவி அடியாட்களோடு வந்திருக்கிறார் என்றே நினைத்திருக்கிறார்கள். கடத்தல் கும்பலில் இருந்த ஒருவர் வாட்ட சாட்டமாக இருந்தார். அவர் மட்டுமே வந்திருப்பது போலீஸார் என்பதை சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரும் சிக்கிக் கொண்டனர். தாமோதரனும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். பிடிபட்டவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, பரதராமி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்

தாமோதரனின் உறவினரான சித்தூர் மாவட்டம் சிறுசேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிகிறார். தப்பி ஓடிய அந்த வாட்ட சாட்டமான நபர், இவர்தான். ஆருத்ராவில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக தாமோதரன் ஆசைக் காட்டியதால், ரமேஷ் ரூ.23 லட்சம் கொடுத்திருக்கிறார். அதேபோல, ரமேஷின் நண்பரும் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ரூ.7 லட்சம் கொடுத்திருக்கிறார். மோசடி வளையத்துக்குள் ஆருத்ரா சிக்கிவிட்டதை அறிந்து, இருவரும் பணத்தை திரும்பக் கேட்டிருக்கிறார்கள். இது தொடர்பான தகராறு நீடிக்கவே தான், தாமோதரனை அவர்கள் கடத்தியிருக்கிறார்கள். தப்பி ஓடிய நபர் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ரமேஷை பிடிக்கவும் தனிப்படையினர் சித்தூரில் தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள். அதே சமயம், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர். பணத்துக்காக உறவினரே ஏஜென்டை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.