Published:Updated:

`கொரோனா மனச்சோர்வு நீங்க புது கேம்!' -மதுரையில் புது முயற்சி

அப்துல் ரஹ்மான்
அப்துல் ரஹ்மான்

கேம்பில் வந்து இந்த விளையாட்டை சொல்லித்தருமாறு மாவட்ட நிர்வாகம் அழைத்தது, முதலில் தயக்கத்துடன்தான் சென்றேன். ஆனால், அவர்களுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்த பின்பு அவர்கள் ஆர்வத்துடன் கேட்டு விளையாடினர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடங்கிக் கிடப்பதால் ஒருவித மனச்சோர்வு ஏற்படலாம். தொலைக்காட்சி, மொபைல் என தினமும் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள், வெளியில் சென்று விளையாட முடியாத காரணத்தினால் மொபைலிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர். இதற்கு மாறாக அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடும் வகையில் மதுரையைச் சேர்ந்த `ஸ்போர்ட்ஸ் சயின்டிஸ்ட்' அப்துல் ரஹ்மான் ஒரு புது வகையான விளையாட்டை உருவாக்கியுள்ளார்.

`ஸ்போர்ட்ஸ் சயின்டிஸ்ட்' என்ற பட்டத்தை திருநெல்வேலியிலுள்ள, மாவட்ட அறிவியல் மையம் அவருக்கு வழங்கியது.

கேம்பில்'அசூய்டு' விளையாடுகிறார்கள்
கேம்பில்'அசூய்டு' விளையாடுகிறார்கள்

ஒரு துளி நீருக்காக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் போர்தான்தான் 'அசூய்டு' (ASUDE) என்ற விளையாட்டு. இந்த விளையாட்டுதான் உலகின் முதல் சமூக சிந்தனையுடைய விளையாட்டாகும்.

'அசூய்டு ' என்றால் உலகத்தின் தினம் என்று பொருள். இது ஜப்பானிய மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல் ஆகும்.

இந்த விளையாட்டுப் பலகையைச் சரிபாதியாக வகுத்துக்கொண்டு ஒரு பாதி மனிதர்கள் வாழும் பகுதியாகவும் மற்றொரு பாதி விலங்குகள் வாழும் பகுதியாகவும் பிரித்து காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கத்தைப் போல் எதிரில் உள்ள காய்களை அடித்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இதில் இல்லை. சற்று சுவாரஸ்யமாக எதிரில் உள்ள காய்க்கு எச்சரிக்கை விடும் வகையில் இந்த விளையாட்டை வடிவமைத்துள்ளார்.

அப்துல் ரஹ்மானிடம் இந்த விளையாட்டு குறித்துப் பேசியபோது, ``ஓடி திரிந்து விளையாட வேண்டிய வயதில் மொபைல் கேமுக்குள் தஞ்சம் கிடக்கிறார்கள் குழந்தைகள். அந்த கேம்களும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குப் பயன்தரும் வகையில் இருப்பதில்லை. இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வனத்தை அதில் வாழும் வன உயிர்களே பாதுகாக்க மறந்த நமக்கும் இயற்கை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தும். பொழுதுபோக்குடன் சமூக அக்கறையும் கலந்துள்ள விளையாட்டு இது.

பள்ளிகளுக்குக் கொண்டு செல்லும்போது, மாணவர்கள் `` 'இப்படியெல்லாம் நமக்கும் விலங்குகளுக்கும் உண்மையிலேயே சண்டை வருமா சார்'னு கேப்பாங்க" ஆமா நம்மதான் சண்டை வராம இயற்கையைக் காப்பாத்தணும்னு சொல்லுவேன். நாளைய சமுதாயம் இயற்கையைக் காக்கும் சமுதாயமா அமைய இந்த விளையாட்டு சின்ன முன்னெடுப்பா அமையும்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பு பள்ளிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுத்து, அதை ஒரு பிசினஸாக செய்துவந்தேன். அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுத்தேன். ஆனால், இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால், வீடு இல்லாதவர்கள், வெளியூரிலிருந்து இங்கு வந்து திரும்பிச்செல்ல இயலாதவர்கள், மனநலம் சரியில்லாதவர்கள் என அனைவருக்கும் பழங்காநத்தத்தில் ஒரு கேம்ப் அமைத்து மாவட்ட நிர்வாகம் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம். எனவே, கேம்பில் வந்து இந்த விளையாட்டை சொல்லித்தருமாறு மாவட்ட நிர்வாகம் அழைத்தது, முதலில் தயக்கத்துடன்தான் சென்றேன். ஆனால், அவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுத்த பின்பு, அவர்கள் ஆர்வத்துடன் கேட்டு விளையாடினர். இவர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்றாகும். மேலும், இந்த விளையாட்டைச் சமூக இடைவெளியுடன் விளையாடலாம். நூறு பேர்கூட ஒரே நேரத்தில் விளையாடலாம்" என்கிறார்.

கேம் கற்றுக் கொடுகக்கும் அப்துல் ரஹ்மான்
கேம் கற்றுக் கொடுகக்கும் அப்துல் ரஹ்மான்

அவரின் இந்த விளையாட்டை, சிறப்புக் குழந்தைகளின் மன மேம்பாட்டிற்காக சிறப்புப் பள்ளியில் ஆய்வுக்குக் கேட்டுள்ளனர். ஆய்வு முடிந்தபின் அவர்களுக்கும் இந்த விளையாட்டு உதவலாம். எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களுடன் அதிக நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு இந்த மாதிரி சமூக பொறுப்புள்ள விளையாட்டை விளையாடுவதனால் புத்துணர்வுடன், சமூக பொறுப்பையும் உணரமுடியும் என்கின்றனர் கேம்பில் இருந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு