Published:Updated:

சிவகங்கை: `மணல் கொள்ளைக்கு எதிராகக் கடிதம்!’ - வி.ஏ.ஓ பணியிடை நீக்கத்துக்கு என்ன காரணம்?

வி.ஏ.ஓ அருள்ராஜ்
வி.ஏ.ஓ அருள்ராஜ்

மணல் கொள்ளைக்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அளித்த காரணத்தால் நேர்மையான வி.ஏ.ஓ ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதல்வருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் முதல் காரைக்குடி வரை பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணல் கொள்ளைக்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அளித்த காரணத்தால் நேர்மையான வி.ஏ.ஓ ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதல்வருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

மணல்
மணல்

இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ நம்மிடம், ``காரைக்குடி வட்டார வி.ஏ.ஓ அருள் ராஜின் தந்தை இறப்பிற்குப் பின் கருணை அடிப்படையில்தான் பணியில் சேர்ந்தார். ஆனால், தான் பணியில் சேர்ந்தது முதல் நேர்மையாக நடக்க வேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் வழியில் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்துடன்தான் அலுவலகத்தில் பணி செய்கிறார்.

இவர் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கவில்லை என்று ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது தவறான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு இலவச வேஷ்டி, சேலைகள் பதுக்கினார் என்று புகார் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் தன்னுடைய தரப்பு நியாயத்தை நிரூபித்து அதே பகுதியில் வந்து பணியில் சேர்ந்தார். இந்நிலையில் களத்தூர் கிராமத்தில் பணி செய்யும்போது ஜமாபந்தியில் தாசில்தாரிடம் கிராம கணக்குகளைக் காட்டவில்லை எனப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிவ.இளங்கோ
சிவ.இளங்கோ

ஆனால், அவர் கொரோனா காலகட்டத்தில் தொற்றுகள் ஏற்படக்கூடாது என ஆர்.ஐ யிடம் கணக்குகளை ஒப்படைத்துள்ளார். எனவே இது உண்மையான காரணம் இல்லை. இவர் மீது முன்பகை இருந்த காரணத்தாலும் இவர் மணல் கொள்ளைக்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய காரணத்தாலும், அரசியல் கட்சிகள் அழுத்தத்தால் வி.ஏ.ஓ பழிவாங்கப்பட்டுள்ளார். எனவே, இது போன்ற நியாயமான அதிகாரிகள் மீது இவ்வாறு துறை ரீதியான தாக்குதல் நிகழ்த்தப்பட்டால் நேர்மையான அதிகாரிகள் இல்லாமல் போய்விடுவார்கள். எனவே, உடனடியாக இவரை பணியில் சேர்த்து, மேலும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்வர் உட்பட அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இது குறித்து காரைக்குடி வட்டாச்சியர் பாலாஜி," சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ அருள் கொரோனா காலகட்டத்தில் சரியாக வேலை செய்யவில்லை. பெண்கள், வயதானவர்கள் எனப் பலரும் ஊரடங்கு காலத்தில் கடுமையாக வேலை செய்யும்போது அவர் சரியாகப் பணிகள் செய்யவில்லை. மேலும், ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகளை ஒப்படைக்கவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர் மீது மட்டுமல்ல கணக்கு ஒப்படைக்காத அருள் உட்பட 3 வி.ஏ.ஓ-க்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

கிராம மக்கள் போராட்டம்
கிராம மக்கள் போராட்டம்

மேலும் தேவகோட்டை கோட்டாச்சியர் சுரேந்திரன், "ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தியில் ஒவ்வொரு வி.ஏ.ஓ- வும் அந்தந்தக் கிராமத்தின் பதிவு மற்றும் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். அதில் பட்டா, சிட்டா, தீர்வை உள்ளிட்டவை முறைப்படுத்தி பணம் கட்டியுள்ளனரா. ஓ.ஏ.பி பணம் பெறுவதில் மனுவை எப்படிக் கையாண்டுள்ளனர் என்ற விபரங்கள் தெரியவரும். ஆனால், காரைக்குடி பகுதியில் 64 வி.ஏ.ஓ- க்களில் 3 வி.ஏ.ஓ-க்கள் முறையாகக் கணக்கை ஒப்படைக்கவில்லை. அதனால் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இந்த நிகழ்வில் ஒவ்வொரு வி.ஏ.ஓ-வும் கிராமக் கணக்கை ஒப்படைப்பது முக்கியமான பணி. ஆனால், இதில் முறையாகச் செயல்படவில்லை என்பதால்தான் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அவர்கள் முறையாக ஒப்படைத்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவர்கள் வெவ்வேறு விசயங்களைத் தொடர்புபடுத்தி பேசுவது உண்மையில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு