Published:Updated:

`சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால்..!’ - எச்சரிக்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு

டி.ஜி.பி சைலேந்திரபாபு
டி.ஜி.பி சைலேந்திரபாபு

ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், சுய விளம்பரத்துக்காகவும், ஆதாயத்துக்காகவும் பிரச்னையைத் தூண்டும் வகையில் அவதூறு கருத்துகளையும் செய்திகளையும் பதிவிடுபவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ``நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக ஊடகங்கள்/பத்திரிகைகள் வாயிலாகப் பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கபூர்வமான தகவல்களைப் பகிர்ந்துவருகின்றனர். ஆனால், சிலர் சுய விளம்பரத்துக்காக ஊடகம், சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளைப் பதிவுசெய்து, சட்டம், ஒழுங்குப் பிரச்னையைத் தூண்டிவருகின்றனர்.

அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்துக்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துகளைப் பரப்பிவருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியைச் சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.

காவல்துறையைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறது. இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

இந்த ண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் பொது அமைதிக்கும், சட்டம், ஒழுங்குக்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறுச் செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு