Published:Updated:

டாஸ்மாக்: `அ.தி.மு.க-வுக்கு எதிராகப் போராட்டம்; இப்போது நாடகமா?'- தி.மு.க-வுக்கு வலுக்கும் எதிர்ப்பு

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை

மது விற்பனை வருமானத்தை ஈடுகட்ட, பல மாற்றுவழிகள் உள்ளன. பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்று நடத்தினால், ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.

கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், இன்று முதல் மீண்டும் செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ``மதுக்கடைகள் திறக்கப்பட்டால், லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படுவதோடு, சாலை விபத்து மற்றும் மதுவால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ, மதுக்கடைகள் நிரந்தரமாக மூடியே கிடக்கட்டும்’’ என மகளிர் ஆயம் அமைப்பினர் அபயக்குரல் எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள மகளிர் ஆயம் அமைப்பின் தலைவர் ம.லட்சுமி அம்மாள், ``கொரோனா பெருந்தொற்றின் இராண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ள இச்சூழலில், தி.மு.க அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி, இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முதலில் தேநீர் கடைகளைக்கூடத் திறக்க அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், தொற்றுப் பரவல் ஆபத்து மட்டுமன்றி மக்களின் உயிருக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் கேடு விளைவிக்கும் மதுக்கடைகளைத் திறக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வேதனையான நகை முரணாக உள்ளது.

லட்சுமி அம்மாள்
லட்சுமி அம்மாள்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளால் இளைஞர்கள் தங்கள் ஆளுமையை இழந்து, உடலுழைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், லட்சக்கணக்கானக் குடும்பங்கள் நிம்மதியின்றி தவிக்கின்றன. சாலை விபத்துகள் ஏற்படுவதற்கும் மதுவே முதன்மையான காரணமாக உள்ளது. எனவேதான், மகளிர் ஆயம் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு செயலாக்கப்பட வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றன.

கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா முடக்கக்காலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி மதுக்கடைகளைத் திறக்கலாம் என அறிவித்தபோது, எங்களது மகளிர் ஆயம் அமைப்பு, அதை எதிர்த்து 28.04.2020 அன்று சமூக வலைதளங்கள் வழியாகக் கண்டனப் போராட்டம் நடத்தியது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அப்போராட்டத்தில் பங்கெடுத்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மதுக்கடைத் திறப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தோம். அவ்வழக்கில் மதுக்கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில் முடிவெடுக்கும் முன் எங்களிடமும் கருத்து கேட்க வேண்டுமெனக் கோரி மகளிர் ஆயம் சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளோம். இன்னும் அவ்வழக்கு நிலுவையில்தான் உள்ளது.

மதுக்கடை மூடப்படும் காலங்களிலெல்லாம் மதுக்குடிப்பது பெருமளவு குறைந்து வருவதைப் பார்க்கிறோம். காவல்துறை கண்காணிப்போடு இருக்கும்போது, இதே காலகட்டத்தில் கள்ளச் சாராயமும் பெருமளவு பெருகிவிடவில்லை. மிகச்சிறு எண்ணிக்கையிலுள்ள குடி நோயாளிகள்தாம் மதுக்கடை மூடலால் சிரமப்படுவார்கள். அவர்களையும் உளவியல் ஆலோசனைகள், மருத்துவமனைகள் மூலம் அதிலிருந்து விடுவிப்பதற்குத்தான் முயல வேண்டுமே தவிர, அந்தச் சிறு எண்ணிக்கையிலான குடிநோயாளிகளைக் காட்டி மதுக்கடைகளைத் திறப்பது ஏற்கக்கூடியதல்ல.

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் விவகாரம்: 'எதிர்க்கட்சியாக எதிர்ப்பு... ஆளும்கட்சியாக திறப்பு! -   ஸ்டாலினின் மூவ் சரியா?'

இந்நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க கொரோனா முடக்கத்தைத் தளர்த்தி மதுக்கடைகளைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க ஆட்சியின்போது மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக மக்களோடு நின்று போராடிய தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு தானே மதுக்கடைகளைத் திறப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஏற்கெனவே பெருந்தொற்று முடக்கத்தால் பலரும் வேலையிழந்து தவிக்கும் சூழலில், மிகக் குறைந்த வருவாயே பல குடும்பங்களை வாழவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அக்குறைந்த வருமானம்கூட இழந்து பல குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும் பேராபத்து உள்ளதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மது விற்பனை வழியே வரும் வருமானத்தை ஈடுகட்ட மகளிர் ஆயம் தொடர்ந்து மாற்று வழிகளை முன்வைத்து வருகிறது. தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையை மாநில அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு பால் சங்கங்களின் வழியாக, தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு ரூ.40,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். தரமான பால் மக்களுக்குக் கிடைக்கும் விதமாகவும், உழவர்களின் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருப்பதோடு, அரசு எதிர்பார்க்கும் வருமானத்தைவிட இரட்டிப்பு லாபம் அடையலாம்.

இதுமட்டுமன்றி, தமிழ்நாட்டிலிருந்து ஓர் ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாயை வரியாகவும், இயற்கை வளங்கள் வழியாகவும் எடுத்துச் செல்கின்ற இந்திய அரசிடம் இதைச் சுட்டிக்காட்டி அதில் பாதி பங்கையாவது தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற்றால் கூட, மதுவால் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதலாக ஈட்ட முடியும்.

Tamilnadu CM MK Stalin
Tamilnadu CM MK Stalin

தீய வழியில் மக்கள் நல்வாழ்வைக் கெடுத்து கிடைக்கும் வருமானம் நல்வழிப்பட்டதல்ல என்பதையும் அரசு உணர வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்துப் போராடிய தி.மு.க, தற்போது தாங்களே அந்த அநீதியைச் செய்வதைக் கைவிட வேண்டும். தமிழ் மக்களும், குறிப்பாக பெண்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்று மதுக்கடைகளை மட்டுமன்றி, தமிழ்நாட்டிலுள்ள மது உற்பத்தி ஆலைகளையும் இழுத்து மூட தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இது லட்சக்கணக்கான குடும்பங்களின் அபயக்குரல்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு