Published:Updated:

`இங்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 மட்டுமே..!'- கும்பகோணம் மக்களைக் குளிர்வித்த சமூக ஆர்வலர்

குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், பெண்களுக்கு உதவும் வகையில் வெங்காயத்தை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்த சம்பவம் நடந்தது.

வெங்காய விலையின் வரலாறு காணாத உயர்வு, நாடாளுமன்றம் வரையில் எதிரொலிக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், `நான் வெங்காயமே சாப்பிடுவதில்லை' என்ற தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மீம்ஸ் கிரியேட்டர்கள் வெங்காயவிலை உயர்வை வைத்து மீம்ஸ் போட்டு வருவது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தநிலையில், கும்பகோணத்தில் ஒருவர் அதிக விலைக்கு வெங்காயத்தை வாங்கி, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்துள்ளார். அவரது செயலைப் பாராட்டியபடி பல பெண்கள் வெங்காயத்தை வாங்கிச் சென்றுள்ளனர்.

குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

கும்பகோணம் பானாதுறை பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராமமூர்த்தி. இவர் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலை இவரை யோசிக்க வைத்தது. வெங்காயத்தின் விலை உயர்வால் ஏழை , நடுத்தர மக்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை எண்ணித் தாமே வெங்காயத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். அதன்படி வெங்காயத்தை மூட்டையாக வாங்கி தனது வீட்டுக்கு முன்பு தள்ளுவண்டியில் கொட்டி வைத்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்தார். இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள், தங்களுக்குத் தேவையான வெங்காயத்தை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

`ரூ.25-க்கு வெங்காயம்; குவிந்த மக்கள்!' - கூட்டத்தில் சிக்கிய முதியவர் #ViralVideo

ராமமூர்த்தியிடம் பேசினோம். ``நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் தோலை உரித்தால்தான் கண்ணில் கண்ணீர் வரும். ஆனால், அதன் விலையைக் கேட்டாலே ஏழைப் பெண்களின் கண்களில் கண்ணீர் வர வைப்பதாக உள்ளது. இதையடுத்து, வெங்காயத்தை மொத்தமாக வாங்கிக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

அதன்படி, தாராசுரம் மார்க்கெட்டில் மொத்தமாக வெங்காயத்தை வாங்கினேன். கிலோவுக்கு நான் வாங்கிய விலையை விட சுமார் ரூ.15 குறைத்து விற்றேன். ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.60-க்கு விற்பனை செய்தேன். இதை அறிந்த பெண்கள் பலர் மகிழ்ச்சியுடன் வந்து வெங்காயத்தை வாங்கிச் சென்றனர். இதே போல் நேற்றும், அதற்கு முந்தைய தினம் என மொத்தம் இரண்டு நாள்கள் சில மணி நேரங்கள் மட்டும் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்பட்டது. ஏதோ நம்மால் முடிந்த உதவியைப் பெண்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன். இதன் மூலம் எனக்கும் ஒரு திருப்தி ஏற்பட்டது'' என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு