Published:Updated:

``தஞ்சை சிறந்த மாநகராட்சின்னா சந்தோஷம்தான்; ஆனால்..!" - குறைகளால் குமுறும் ஆர்வலர்கள்

பெரியகோயில் ( படம்: ம.அரவிந்த் / விகடன் )

இது மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு என்றாலும் சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் சொலிக்கொள்ளும்படி நகரத்தில் இல்லை என்பதால் இந்த அறிவிப்பு முழுமையாக மகிழ்ச்சி தரவில்லை எனப் பலரால் பேசப்படுகிறது.

``தஞ்சை சிறந்த மாநகராட்சின்னா சந்தோஷம்தான்; ஆனால்..!" - குறைகளால் குமுறும் ஆர்வலர்கள்

இது மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு என்றாலும் சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் சொலிக்கொள்ளும்படி நகரத்தில் இல்லை என்பதால் இந்த அறிவிப்பு முழுமையாக மகிழ்ச்சி தரவில்லை எனப் பலரால் பேசப்படுகிறது.

Published:Updated:
பெரியகோயில் ( படம்: ம.அரவிந்த் / விகடன் )

தஞ்சாவூர் மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அதற்கான விருது மற்றும் ரூ.25 லட்சம் நிதியை சுதந்திர தின விழாவில் வழங்க இருக்கிறார். இந்நிலையில் சுகாதாரம், சாலை வசதி, பாதாள சாக்கடை பராமரிப்பு, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் பின் தங்கியிருப்பதால் இந்த அறிவிப்பைக் கொண்டாட முடியவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.

தஞ்சாவூர் நகரப் பகுதி
தஞ்சாவூர் நகரப் பகுதி

தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளைக் கொண்டது. நகரப் பகுதிக்குள் மட்டும் சுமார் 6 லட்சம் மக்கள் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், மற்றும் தொன்மை சிறப்புமிக்க பல இடங்களைக் கொண்டிருப்பதால் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் தஞ்சாவூருக்கு தனி இடம் உண்டு. இந்நிலையில், சீர்மிகு நகரம் எனச் சொல்லப்படுகிற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பழைய பேருந்து நிலையம், காமராஜர் மற்றும் கீழவாசல் மார்கெட், நீர் நிலைகள் அழகு படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக, பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அதில் சுமார் 100 கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கடை நடத்தியவர்களுக்கே கடையை வழங்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றார் சரவணக்குமார். மாநகராட்சிக்குச் சொந்தமான பெரிய இடங்களை மாதம் ரூ.480 என்கிற சொற்ப வாடகைக்கு எடுத்து தனி நபர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

அந்த இடங்களை ஆய்வு செய்து அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையை சரவணக்குமார் அதிரடியாக மேற்கொண்டார். அதே போல் வருமானத்தைப் பெருக்குவதற்காகப் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளுக்கு ஓப்பன் டெண்டர் முறை அறிவித்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இன்று டெண்டர் நடத்தி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராடச் செய்தனர். இந்தப் பரபரப்பான சூழலுக்கு இடையே இன்று தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு என்றாலும் சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் சொலிக்கொள்ளும்படி நகரத்தில் இல்லை என்பதால் இந்த அறிவிப்பு முழுமையாக மகிழ்ச்சி தரவில்லை எனப் பலரால் பேசப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலரான ஜீவக்குமாரிடம் பேசினோம்.

``ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரிய அளவில் கொள்ளை நடந்துள்ளது. அந்தத் திட்டத்துக்கான பணிகளின்போது வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். பெரிய கோயிலுக்கு அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலை அமைந்துள்ள இடத்தில் போர்வெல் அமைத்து கோயிலுக்கு ஆபத்தை ஏற்படுத்த நினைத்தனர். நீதிமன்றம் சென்று அந்தப் பணிக்கு தடை உத்தரவு வாங்கினோம்.

குப்பைகள்
குப்பைகள்

அதேபோல் கோயிலுக்கு அருகில் உள்ள நீர்நிலை ஒன்று மீட்கப்படாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதில் மதுபாட்டில்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றைச் சுத்தம் செய்யவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்னும் ஆக்கபூர்வமான பல பணிகளைச் செய்திருக்கலாம், அதைச் செய்ய தவறிவிட்டனர். நகரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் நிரம்பி ஓடுகிறது அதைச் சரி செய்ய சுமார் 10 நாள்களாவது ஆகிறது. அந்த துர்நாற்றத்துடனே மக்கள் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. உழவர் சந்தையில் தேங்கும் குப்பைக் கழிவுகளை உடனுக்குடன் அள்ளுவதில்லை.

புதிய பேருந்து நிலையத்தில் உள் பகுதியில் கடைகளின் கழிவுகள் திறந்த வெளியில் ஓடுகிறது. பயணிகள் சிறுநீர் கழிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் திறந்த வெளியில் கழிக்கின்றனர். இதனால் பெரும் துர்நாற்றத்துக்கு இடையே பயணிகள் செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுகிறது. பெரிய கோயிலுக்கு மிக அருகில் உள்ள ஜெபமாலைபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு நகர் பகுதி புகை மண்டலமாக மாறுவதுடன் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் உண்டாக்குகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்துக்கு அருகில் உள்ள அந்தக் குப்பைக் கிடங்கை நகரத்துக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறோம்; எந்தப் பலனும் இல்லை.

தஞ்சாவூர் மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சி

சுத்தமான குடிநீர் வசதியிலும் பின் தங்கியிருக்கிறது தஞ்சை. சுகாதாரத்திலும் பின்தங்கி உள்ளது என்பதற்குச் சான்றாகக் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள முதல் ஐந்து மாவட்டங்களில் தஞ்சாவூர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. விவசாய பகுதியான இங்கு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சிறந்த மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருப்பது ஈ-க்கு பெரிய பறவைக்கான பட்டம் கொடுத்ததுக்கான உணர்வைத் தருகிறது" என்றார்.

மதிவாணன் என்பவர், ``தஞ்சாவூர் நகருக்குள் கல்லணை கால்வாயிலிருந்து வந்த நீர் வழிப்பாதை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நகரில் உள்ள முக்கிய நீர் நிலைகளுக்கு நீர் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வர ஏற்பாடு செய்யவில்லை. லேசாக மழை பெய்தாலும் மழை நீர் ஓடுவதற்கான ஏற்பாட்டை செய்யாததால் தெற்கு வீதி உள்ளிட்ட பல பகுதியில் மழை நீர் சாக்கடை நீரில் கலந்து சாலைகளில் ஓடுவதால் சுகாதார பாதிப்பை உண்டாக்குகிறது.

மழை நீர்
மழை நீர்

சிறிய அளவிலான மழைக்கே போதிய வடிகால் வசதி இல்லாததால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து ‌நிலையம் அண்ணா சிலை, ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதற்கான தீர்வை ஏற்படுத்தவில்லை. பாதாள சாக்கடைப் பணிகள் என்ற பெயரில் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமல், அவை பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தைத் தருகின்றன.

கோடியம்மன் கோயில் அருகே உள்ள புறவழிச்சாலை உள்ளிட்ட பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ராஜா கோரி மின் மயானம் பழுதடைந்து பல ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது. முக்கிய குறைகளான இவை சரி செய்யப்படாமல் உள்ளதால் சிறந்த மாநகராட்சி என்ற அறிவிப்பு எங்களுக்கு இனிப்பைத் தரவில்லை'' என்றார்.

தஞ்சை
தஞ்சை

மற்றும் சிலரோ, ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த பல்வேறு பராமரிப்புப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. குறிப்பாக, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகரத்துக்குள் உள்ள முக்கிய நீர் நிலைகளான குளங்கள் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப் பட்டுள்ளன. குடிநீர்ப் பிரச்னையை போக்க கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு 1,300 பேர் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்துள்ளனர். தற்போது 450 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதுபோன்ற சிரமங்களுக்கு இடையேயும் சிறப்பாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் சீர்மிகு நகரம் திட்டத்தின் மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் செய்யப்பட்டுள்ளதால் சிறந்த மாநகராட்சி என முதல்வர் அறிவித்துள்ளார். இது கொண்டாடப்பட வேண்டியது" எனத் தெரிவித்தனர்.