Published:Updated:

தடுமாறும் ஊரடங்கு: அரசின் தளர்வுகளால் எல்லை மீறுகின்றனரா மக்கள்?

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

காவல்துறை மக்களிடம் கடுமை காட்டவில்லை என்பதால் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு மக்கள் எல்லைமீறுகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையின் கொடூர தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30,000-ஐ கடந்து வருகிறது. இன்னொருபுறம் நாளொன்றுக்கு 20,000-ம் நபர்களுக்கு அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டாலும் ஆக்சிஜனுக்காகவும் ரெம்டெசிவிர் மருந்துக்காகவும் அல்லாடும் மக்களின் நிலை நம்மைக் கலங்கடிக்கிறது.

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதிவரை ஊரடங்கு பிறப்பித்ததில் ஆரம்பித்து தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது வரை பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டாலும் ஊரடங்கில் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்காததால் அரசின் முயற்சிகள் பலன் அளிக்காமல் போக வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

ஊரடங்கைப் பொறுத்தவரையில் அத்தியாவசிய தேவையான காய்கறி கடைகள், பல சரக்கு மற்றும் தேநீர்க் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணிக்காக அரசு அலுவலகங்களில் 50 சதவிகித பணியாளர்களுடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்பதே உண்மை நிலவரம். இறைச்சிக் கடைகளிலும் மளிகைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

பெரும்பாலான இடங்களில் போதுமான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் கடைகளில் முட்டி மோதுகின்றனர். உண்மையிலேயே அவசரத் தேவைகளுக்காகச் செல்பவர்களும் இருக்கின்றனர். ஆனால், அதைவிட வீட்டில் இருக்க முடியாமல் வெளியே நடமாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. சென்ற முறை போல காவல்துறை மக்களிடம் கடுமை காட்டவில்லை என்பதால் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு மக்கள் எல்லைமீறுகின்றனர்.

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் கொரோனாவின் கோரத் தாண்டவம் குறித்துத் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. சமூக ஊடகங்களைத் திறந்தாலே யாரோ ஒருவருடைய கொரோனா மரணச் செய்தியைப் பார்க்க நேரிடுகிறது. இப்படியான சூழலிலும் ஊரடங்குக்கு மக்கள் முழுமையான ஆதரவு அளிக்காததால் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.

இதுகுறித்துப் பேசிய குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயலாளர் சத்யநாராயணன், ``தற்போதுள்ள ஊரடங்கானது ஊரடங்காகவே இல்லை. காலை 6 மணியிலிருந்து 12 மணி வரை எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. எனவே, தொற்று சதவிகிதம் குறைவதற்கோ, நாம் எதிர்பார்த்த அளவில் கொரோனா முற்றுப்பெறுவதற்கோ இந்த ஊரடங்கு பலனளிப்பதாகத் தெரியவில்லை.

சத்யநாராயணன்
சத்யநாராயணன்

ஆகவே 14.05.21 முதல் 24.05.21 வரை தளர்வே இல்லாத ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். மருந்தகம், பால், சிறிய காய்கறி கடைகள் ,ஹோட்டல் மற்றும் பேக்கரி (பார்சல் மட்டும்) இவற்றைத் தவிர வேறு கடைகள் எதுவுமே இயங்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக மளிகை, இறைச்சிக் கடைகளைத் திறக்கவே கூடாது. அப்போதுதான் ஊரடங்கினால் பலன் கிடைக்கும். இந்தச் சூழலிலிருந்து நம்மால் மீள முடியும். இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவிருக்கின்றனர். கூட்டத்தில் இதுகுறித்தும் முதல்வர் ஆலோசிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு