Published:Updated:

`பெரியகோயிலுக்கு நடந்த அதே சிக்கல்..!' -கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றும் சர்ச்சை

ராஜராஜ சோழன்கூட 15-க்கும் குறைவான நாடுகளையே வெற்றி பெற்று தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், ராஜேந்திர சோழன் 84 நாடுகளுக்கும் மேல் வென்ற சிறப்புக்குரியவர்.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

பெரிய கோயிலைத் தொடர்ந்து வந்த சில நம்பிக்கைகள், இப்போது கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வரத்தொடங்கியுள்ளது. `ராஜராஜனுக்கு சிலை அமைத்ததுபோல் ராஜேந்திர சோழனுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்' எனச் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கங்கை முதல் கடாரம் வரை வெற்றி பெற்று ஆட்சி செய்தவர் ராஜேந்திர சோழன். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் சிறப்புகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, அதை உலக பாரம்பர்ய புராதனச் சின்னமாக அறிவித்து பெருமை சேர்த்துள்ளது. எனவே, அவருடைய மணிமண்டபத்தை இங்கு அமைக்க வேண்டும் எனக் கூறி நூதன போராட்டத்தைச் சிலர் நடத்த தொடங்கியுள்ளனர்.

சூழலியல் செயற்பாட்டாளர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம், ``ராஜேந்திர சோழன் என்பவர் ஒரு சாதாரண மன்னர் அல்லர். அவரின் தந்தை ராஜராஜ சோழன்கூட 15-க்கும் குறைவான நாடுகளையே வெற்றி பெற்று தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ஆனால், ராஜேந்திர சோழனோ 84 நாடுகளுக்கும் மேல் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்ஜியத்தையே உலகளவில் விரிவுபடுத்திய மாமன்னன். தனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு, இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பைக் கையில் வைத்திருந்த மன்னன்.

நூதனப் போராட்டம்
நூதனப் போராட்டம்

ராஜேந்திர சோழனே முதன்முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழன். மகிபாலனை வென்று வங்காள தேசத்தைச் சோழ நாட்டுடன் இணைத்தவர். அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.

இவர் பெரிய மன்னன் என்று அரசுக்குத் தெரியாதா. இல்லை இவர் புகழைத் திட்டமிட்டு அரசு மறைக்கப் பார்க்கிறதா எனவும் தெரியவில்லை. பெரிய கோயிலைத் தொடர்ந்து வந்த சில தவறான நம்பிக்கைகளை இப்போது இங்கும் கிளப்பிவிட ஆரம்பித்துள்ளனர் சிலர். உதாரணமாக, ராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்ட 1000-மாவது ஆண்டு விழாவை வெகுவிமரிசையாக 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டாடினார்கள்.

நூதனப் போராட்டம்
நூதனப் போராட்டம்

அதன் தொடர்ச்சியாகச் சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. அந்த விழாவை எடுத்த விளைவுதான் தி.மு.க தோற்றது என்று சிலர் வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள்.

`அதேபோல இப்போதும் நடக்கும்' என்று சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். எங்கள் மன்னன் ராஜேந்திர சோழனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். அத்தோடு அவரது வரலாறு அடங்கிய நூலகம் ஒன்றையும் அமைத்துத் தர வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மணிமண்டபம் கட்டித்தருவார் என்ற நம்புகிறோம்" என்றார் நம்பிக்கையுடன்.