Published:Updated:

`கொரோனாதான் காரணமா; அல்லது...?!' - கிராம சபை கூட்டங்களுக்குத் தடை; கேள்வியெழுப்பும் ஆர்வலர்

கிராம சபை கூட்டம் [கோப்பு படம்]
கிராம சபை கூட்டம் [கோப்பு படம்]

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்கள நடத்த அப்போதைய அதிமுக அரசு அனுமதி மறுத்தபோது, திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிரிப்பு தெரிவித்தார். ஆனால் தற்போது முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்கிறார்.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குநர் பிரவீன் நாயர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பரவலின் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி, கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயக விரோத செயல் என்றும் சட்டத்திற்கு புறம்பானது என்றும் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். கொரோனா காலத்திலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால் கிராமங்களின் இறையாண்மையை இழிவுபடுத்தும் விதமாக கிராம சபை கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என இவர்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

அரசின் சுற்றறிக்கை
அரசின் சுற்றறிக்கை
எடப்பாடிக்கு வந்தா, தக்காளி சட்னி; ஸ்டாலினுக்கு வந்தா ரத்தமா?

குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி, உழைப்பாளர்கள் தினமான மே 1-ம் தேதி , சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் இந்தியா முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இக்கூட்டங்களில் கிராம மக்கள் கலந்து கொள்வார்கள். ஊராட்சியின் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பது, வரவு-செலவு கணக்குக்கு சமர்ப்பித்தல் போன்ற மிக முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும். மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய முக்கிய தீர்மானங்களும் இந்த நாளன்று நிறைவேற்றப்படும்.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கைக் காரணம்காட்டி தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்துள்ளது.

க.சரவணன்
க.சரவணன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தன்னாட்சி அமைப்பின் தலைவர் சரவணன், ``தமிழக அரசின் இந்த முடிவு ஜனநாயக விரோத செயல்; கடும் கண்டனத்திற்கு உரியது. வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறையாவது கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கட்டாயம் நான்கு முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மாநில அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் 2020-ம் ஆண்டு ஜனவரி 26-க்குப் பிறகு தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவே இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்களில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு செய்திருந்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் கொரோனாவை காரணம் காட்டி, அக்கூட்டங்களை நடத்த அப்போதைய அதிமுக அரசு அனுமதி மறுத்தது. அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இவர் தமிழக முதலமைச்சரானவுடன் தற்போது முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

சமூக இடைவெளியுடன் பல கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த வருடங்களில் நடைபெற்ற கிராமசபை
கடந்த வருடங்களில் நடைபெற்ற கிராமசபை
கிராம சபை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது எப்படி? - ஒரு வழிகாட்டல்

2017-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து, கிராமப்புற இளைஞர்கள் தங்களது வளர்ச்சியில் அதிகமான அக்கறை காட்டி வருகிறார்கள். குறிப்பாக கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு, ஊரின் வளர்ச்சிக்குக் குரல் கொடுக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

இதனை தமிழக அரசு சீர்குலைக்கக்கூடாது. வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பதற்கு உண்கையாகவே கொரோனா அச்சம்தான் காரணமா? அல்லது வேறு எதுவும் உள்நோக்கம் உள்ளதா எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழக அரசு தனது முடிவை திரும்ப பெற்று, கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு