Published:Updated:

`2016க்குப் பின் அனுமதி இல்லை; வேளாண் மண்டல அறிவிப்பு!' - ஓ.என்.ஜி.சி பணிகளால் கொதிக்கும் ஆர்வலர்கள்

ஓ.என்.ஜி.சி பணிகள்
ஓ.என்.ஜி.சி பணிகள்

``மக்களின் பதற்றத்தைப் போக்கவும், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஒ.என்.ஜி.சி-யின் எரிவாயுக் கிணறுகளை ஆய்வு செய்ய வேண்டும்.''

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றிய பிறகும் கூட, இப்பகுதியில் ஒரு சில இடங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில்தான், இங்குள்ள எரிவாயுக் கிணறுகளில் தமிழக அரசின் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் டாக்டர் பாரதிச்செல்வன் வலியுறுத்துகிறார்.

டாக்டர் பாரதிச்செல்வன்
டாக்டர் பாரதிச்செல்வன்

நம்மிடம் இதுகுறித்து பேசிய அவர், ``2016-ம் ஆண்டுக்குப் பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எரிவாயுக் கிணறுகள் அமைக்க, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிய கிணறுகள் அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அதற்கான பணி நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் அடி ஆழத்தில் அந்த ராட்சத கிணறு அமைக்கப்படுகிறது. அது ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான கிணறு என அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சந்தேகித்து வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியதோடு, இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லையெனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளது. ஆனால், அதற்குப் பிறகும் கூட, சோழங்கநல்லூரில் ஒ.என்.ஜி.சி பணிகள் தொடர்கின்றன.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்... தமிழக அரசின் சட்டம் வெறும் கானல்நீரா?

மக்களின் அச்சத்தைப் போக்கி, இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, விரைவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அனுப்பி, இதுபோன்ற கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உரிய அனுமதி பெறாத கிணறுகளை சட்டப்படி மூட வேண்டும். மக்களின் பதற்றத்தைப் போக்கவும், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு