Published:Updated:

`மூத்த புள்ள கணக்கா உதவியிருக்கு..!’ - நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியால் நெகிழ்ந்த மூதாட்டிகள்

பாட்டிகள்
பாட்டிகள்

“என் மூத்த புள்ளை கணக்கா நின்னு லாரன்ஸ் தம்பி எங்கள காப்பாத்தியிருக்கு. கையில சல்லிக்காசு கிடையாது. எப்படி ஊருக்குப் போயி சேரப்போறோம்னு நெனச்சிட்டிருந்தோம்”

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதைத் தடுக்கும்விதமாகப் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் மே 3-ம் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ்

நோய்த் தொற்றைத் தடுப்பதற்காகக் போடப்பட்டதுதான் என்றாலும், இந்த ஊரடங்கு அடித்தட்டு மக்களின் வாழ்வைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆதரவற்று வீதியில் நின்றிருந்தவர்களை தண்ணீர்கூட இல்லாமல் தவிக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அருகில், மூடப்பட்டிருந்த டீக்கடை வாசலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க இரண்டு மூதாட்டிகள் படுத்திருந்தனர். விஜயா, பூபதி என்ற அவர்கள் இருவரும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்தினம் திருநெல்வேலியிலிருந்து திருப்பதிக்குப் புறப்பட்டிருக்கின்றனர். `விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு 35 ரூபாய் டிக்கெட்டில் திருப்பதிக்கு ரயில் இருக்கிறது' என்று அருகில் இருந்தவர்கள் கூறியதும் விழுப்புரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

மூதாட்டிகள் விஜயா மற்றும் பூபதி
மூதாட்டிகள் விஜயா மற்றும் பூபதி

அடுத்தநாள் காலையில் ஊரடங்கு உத்தரவால் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் செய்வதறியாது திகைத்துள்ளனர். கையில் வைத்திருந்த சொற்பப் பணமும் டீ, சாப்பாடு என 2 நாள்களிலேயே செலவாகிவிட்டதால், எப்படி ஊர் திரும்புவது என்று தெரியாமல் தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு சுருண்டு படுத்திருந்ததால், அவர்களுக்கு மருத்துவ உதவியும் தேவைப்பட்டது.

இதையறிந்து, அவர்கள் இருவருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களின் நிலை குறித்து `சாப்டீங்களா'னு யாராவது கேட்பாங்கனு காத்துக் கிடந்தேன்... ஊரடங்கால் விழுப்புரத்தில் தவித்த பாட்டி” என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு நமது அலுவலகத்தைத் தொடர்புகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், ``அந்தப் பாட்டிகள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான அனைத்துச் செலவுகளையும் நானே ஏற்கிறேன்” என்று கூற உடனே களத்தில் இறங்கினோம்.

விஜயா, பூபதி
விஜயா, பூபதி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகரனைச் சந்தித்து விவரங்களைக் கூறியதும், பாட்டிகள் இருவரையும் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்ல உடனடியாக அனுமதிக் கடிதத்தை வழங்கினார். கொரோனா தொற்று அச்சம் காரணமாக கார் ஓட்டுநர்கள் யாரும் வருவதற்கு தயங்கிய நேரத்தில், பகுதி நேர ஓட்டுநராகப் பணியாற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அம்பேத்ராஜ் வாடகைக் காருடன் வந்தார்.

`` `சாப்டீங்களா'னு யாராவது கேட்பாங்கனு காத்துக்கிடந்தேன்" ஊரடங்கால் விழுப்புரத்தில் தவிக்கும் பாட்டி

அந்தப் பாட்டிகளைச் சந்தித்து தகவலைத் தெரிவித்ததும், “யய்யா.. அந்த லாரன்ஸு தம்பி நல்லாருக்கணும். என் மூத்த புள்ளைக்கணக்கா நின்னு எங்கள காப்பாத்தியிருக்கு. அவங்க குடும்பத்து புள்ளைங்கள்ளாம் நல்லாருக்கணும். கையில சல்லிக்காசு கிடையாது. எப்படி ஊருக்குப் போயி சேரப்போறோம்னு நெனச்சிட்டிருந்தோம். கடவுள் மாதிரி வந்து நிக்கீங்க” என்று கண்கலங்கினார்.

திருநெல்வேலி ஆதரவற்றோர் மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட மூதாட்டிகள்
திருநெல்வேலி ஆதரவற்றோர் மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட மூதாட்டிகள்

அன்றைய தினமே அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் பாட்டில், ரொட்டி பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து அந்தக் காரில் விழுப்புரத்திலிருந்து அனுப்பி வைத்தோம். அவர்கள் இருவரும் நள்ளிரவு 12 மணியளவில் திருநெல்வேலி சென்றடைந்தனர். செல்லும் வழியெங்கும் காவல்துறையினரின் பலகட்டச் சோதனைக் கடக்க வேண்டியிருந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதிக் கடிதம் இருந்ததால் அவர்கள் செல்வதற்குச் சிரமம் இருக்கவில்லை.

நெல்லை மாநகர எல்லைக்குள் சென்று சேர்ந்ததும் தச்சநல்லூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களது காரை அனுமதிக்க மறுத்தார்கள். அனுமதிக் கடிதத்தைக் காட்டியபோதிலும், ``அதிகாரிகள் சொல்லாமல் காரை ஊருக்குள் விட மாட்டோம்” என கறாராகப் பேசியுள்ளனர்.

பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரியிடம் பேசியதால் காரை அனுமதித்தார்கள். விஜயா, பூபதி அம்மாள் ஆகியோர் வருவது பற்றி நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தோம். அதனால் மாநகராட்சி சார்பாக நடத்தப்படும் ஆதரவற்றோர் மையத்தில் அவர்களைத் தங்கவைத்து உடல் பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் அளிக்க அதிகாரிகள் சம்மதித்திருந்தார்கள்.

பாட்டிகள்
பாட்டிகள்

அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் இருவரையும் தனியாக இல்லத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் இருவருக்கும் மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள். இருவரும் தற்போது மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்கள்.

``இப்போதைக்கு அவர்கள் இங்கேயே இருக்கட்டும். நிலைமை சரியானதும் இங்கு இருக்க விரும்புகிறார்களா அல்லது வெளியில் செல்ல விரும்புகிறார்களா என்பதைக் கேட்டு அதன்படி அவர்கள் தங்க ஏற்பாடு செய்கிறோம்” என்று தெரிவித்த மையத்தின் பொறுப்பாளர் சரவணன், `இனி அவர்கள் எங்கள் உறவினர்கள். நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார். பொறுப்பான இடத்தில் இரு முதியவர்களையும் சேர்த்த நிம்மதி ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு