Published:Updated:

`நமது கலாசாரத்தை உலகறிய செய்ய வேண்டும்'- கீழடி குறித்து நடிகர் சசிக்குமார்!

''இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு இளைஞர்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கீழடி பெருமையை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எக்காரணத்துக்காகவும் நம் வரலாற்றையும் நம் கலாசாரத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது''

சசிக்குமார்
சசிக்குமார்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய 'கீழடி வைகை நதி நாகரிகம்' பற்றிய சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் சசிக்குமார் பேசும்போது, ''எனக்கு கீழடிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கலாம், கீழடியில் ஆய்வுகள் தொடங்கப்பட்ட 2015-ல் சு.வெங்கடேசனுடன் அகழ்வாராய்ச்சியை நேரில் பார்த்தேன்.

சசிக்குமார்
சசிக்குமார்

அப்போது அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் ஆய்வுப் பணியில் வேலை செய்தவர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிக்கொண்டுவர கடினமாகவும் பொறுமையாகவும் உழைத்தார்கள். கீழடி வரலாறு பள்ளிகளில் பாடமாகவும், திரையில் படமாகவும் உருவாக வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே சு.வெங்கடேசன் கீழடிக்காக தொடர்ந்து போராடிவருகிறார் எழுதி வருகிறார். நமது கலாசாரத்தை உலகறிய செய்ய வேண்டும். கீழடி வைகை நதி நாகரீகம் சாதி, மதம், அரசியல் சார்பற்றது, கீழடி நமது வரலாறு கீழடிக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகளவில் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடி பள்ளி பாட புத்தகத்தில் பாடமாகவும், திரைப்படமாகவும் வர வேண்டும்'' என்றார்.

சசிக்குமார்
சசிக்குமார்

முன்னதாக மூத்த தொல்லியலாளர் சாந்தலிங்கம், தமிழகத்தில் இதுவரை நடந்த தொல்லியல் பெருமைகள் பற்றியும், அதை மறைக்க சிலர் செய்யும் சூழ்ச்சிகள் பற்றியும் பேசினார். நிறைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கீழடி பற்றியும் அதன் பெருமையை மறைக்க மத்திய அரசு செய்யும் அரசியல் பற்றியும் நீண்ட உரையாற்றினார்.