Published:Updated:

3 மகன்களுக்கும் இதயக் கோளாறு; உதவிய அமைச்சர்! - ஏழைத் தந்தையை நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்

ராஜ்குமார் குடும்பத்துடன்
ராஜ்குமார் குடும்பத்துடன்

தற்போது என் மகனுக்கு மாற்று இதயம் கிடைப்பதற்காகக் காத்திருக்கிறோம். விஜய் ரசிகர்களுக்கு என்னோட நிலைமை தெரிய வந்ததால், தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தந்தை ஒருவர் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகனின் உயிரைக் காப்பாற்ற வறுமையான சூழலுக்கு இடையே போராடிக்கொண்டிருக்கிறார்.

சிகிச்சையில் சிறுவன்
சிகிச்சையில் சிறுவன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). இவரின் மனைவி காளியம்மாள், (வயது 28). பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ரூபன், சசிதரன், வித்யதரன் என மூன்று மகன்கள். மூன்று பேருமே இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மூத்த மகன் இறந்துவிட்டார்.

இந்தநிலையில் கடைசி மகனான வித்யதரனுக்கு இதயத்தில் ஓட்டையிருப்பதைக் கண்டறிந்து அதற்காக சிகிச்சை எடுத்துள்ளனர். இதையடுத்து தற்போது இரண்டாவது மகனான சசிதரனுக்கும் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் பிழைப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அந்த ஏழைத் தந்தை தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார்.

தந்தை ராஜ்குமார் குடும்பத்துடன்
தந்தை ராஜ்குமார் குடும்பத்துடன்

ராஜ்குமாரிடம் பேசினோம். ``நான் பட்டுக்கோட்டையிலிருந்து சைக்கிளிலேயே பல ஊர்களுக்குச் சென்று பழைய துணி வியாபாரம் செய்து வருகிறேன். இதில் எனக்கு தினமும் 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். குறைந்த அளவே வருமானம் வந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென ஒருநாள் என் மூத்த மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. டாக்டரிடம் அழைத்துச் சென்று பார்த்தபோது, அவனுக்கு இதயத்தில் பிரச்னை இருக்கு. நிறைய செலவாகும், காப்பாத்துவது கடினம் என்றனர். ஆசையாக வளர்த்த மகனைக் காப்பாற்ற முடியாமல் கண்ணுக்கு முன்னாலேயே இறந்ததால் துடித்துப்போனோம்.

ராஜ்குமார் குடுமபம்
ராஜ்குமார் குடுமபம்

ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டு, இருக்கிற ரெண்டு பையன்களை நல்லபடியாக வளர்த்தோம். அந்தச் சந்தோஷமும் கொஞ்சநாள்கூட நீடிக்கவில்லை. என் இளைய மகனுக்கு உடலில் பிரச்னை ஏற்பட்டதில் அவனுக்கு இதயத்தில் ஓட்டையிருப்பது தெரியவந்தது. படாதபாடு பட்டு வாங்காத இடத்திலெல்லாம் கடன் வாங்கி அவனுக்கு சிகிச்சை எடுத்தோம். இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கான்.

அந்த நிம்மதி தொடர்வதற்குள் இரண்டாவது மகனான சசிதரனுக்கு உடலில் பிரச்னை ஏற்பட்டது. எனக்கும் என் மனைவிக்கும் இதயம் சுக்கு நூறாக வெடித்தது அப்படியே கலங்கி சரிந்துவிட்டோம். இதைப் பார்த்த அவன், `அப்பா நான் உங்களை விட்டுட்டு போய்டுவேனா' எனக் கேட்டபோது அவனை வாரியணைத்துக் கொண்டேன்.

சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சிறுவன்
சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சிறுவன்

எப்படியாவது அவன காப்பாற்றிவிட வேண்டும் என மனது துடித்தது. அவனை பரிசோதித்த டாக்டர்கள், `உங்க மகனுக்கு இதயம் பலவீனமாக இருக்கு... உடனே அவனுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்' என்றனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக மகனின் சிகிச்சைக்காக சென்னை வந்ததுடன் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அவனுக்கு மாற்று இதயம் பொருத்துவதற்காகப் பணிகள் நடந்தன.

ஆனால், கொரோனாவால் எல்லாமே தாமதமாகியது. நான் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபடி கட்டட வேலை, தண்ணீர் கேன் டெலிவரி என வேலைகளைச் செய்தேன். மருந்துக்கு மட்டுமே ஒரு தொகை செலவாகும், அதைச் செய்ய முடியாமல் தவித்தேன். இதையறிந்த பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் நகரத் தலைவர் ஆதி ராஜராம் 20,000 ரூபாய் கொடுத்தார். அத்துடன் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகரான சிவக்குமார் என்பவரிடமும் இதைத் தெரிவித்தார்.

கொரோனா... ரஷ்யாவை நேற்றுதான் கடந்ததா இந்தியா? #LongRead

அவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அவர் ஊரடங்கால் என் மகனுக்கான சிகிச்சை பாதிக்காத வகையிலான உதவிகளைச் செய்ததுடன் இதயத்தைப் பதிவு செய்ய வைத்து அதில் முன்னுரிமையும் கொடுக்க வைத்தார். தற்போது என் மகனுக்கு மாற்று இதயம் கிடைப்பதற்காகக் காத்திருக்கிறோம்.

அத்துடன் என் நிலையை அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் போன்செய்து, `கவலைப்படாம இருங்க... அரசு சார்பில் என்னென்ன உதவிகள் கிடைக்குமோ, அவை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்' எனத் தெம்பூட்டினார். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு என்னோட நிலை தெரியவந்தது அவர்கள் என்னிடம் விசாரிப்பதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்தும் போனில் தொடர்புகொண்டு, `எதுவானாலும் தோள் கொடுக்க நாங்க இருக்கோம். தளபதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு போறோம்' என ஆறுதல் சொன்னார்.

மகன்
மகன்

நான் தீவிரமான விஜய் ரசிகன். இளைஞரணியிலும் இருந்திருக்கிறேன். என் மகன்களுக்கும் விஜய்ன்னா உயிர். அவரின் ரசிகர்கள் மூலமாக எனக்கு உதவிகள் கிடைத்து வருவது தொடர்கிறது. என் மகனைக் காப்பாற்ற இன்னும் பல உதவிகள் தேவைப்படுகிறது. விரைவில் என் மகன் காப்பாற்றப்படுவான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார் கலங்கிய கண்களுடன்.

அடுத்த கட்டுரைக்கு