Published:Updated:

`மக்களை மகிழ்வித்தவர்கள் துயரத்தில் தவிக்கிறாங்க!’ -சர்க்கஸ் குழுவினருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

சர்க்கஸ் குழுவினருக்கு உதவும் விஜய் ரசிகர்கள்
சர்க்கஸ் குழுவினருக்கு உதவும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய், உயிரைக் கொடுத்து சாகசம் செய்து மக்களை மகிழ்வித்தவங்க தற்போது சோகத்தில் தவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது என உருகியதுடன் இது தொடர்பாக மக்கள் இயக்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்தை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

மன்னார்குடியில் சிக்கியுள்ள சர்க்கஸ் குழுவினருக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் உதவி செய்யச் சொல்ல உற்சாகமுடன் களமிறங்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள், தங்களால் முடிந்த உதவியைச் செய்து சர்க்கஸ் குழுவினரை நெகிழ வைத்துள்ளனர். சிறிய உதவி என்றாலும் இந்த நேரத்திற்கு இது ரொம்ப பெருசு என விஜய் ரசிகர்களை நினைத்து நெகிழ்ந்து போனார்கள் சர்க்கஸ் கலைஞர்கள்.

உதவிய விஜய் ரசிகர்கள்
உதவிய விஜய் ரசிகர்கள்

கொரோனா ஊரடங்கால் மன்னார்குடியில் சிக்கியுள்ள பாம்பே சர்க்கஸ் குழுவினரின் கஷ்டம் குறித்து, `நூறாண்டுகளில் நாங்க சந்திக்காத துயரம் இது’ என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். இது தொடர்பான தகவலை அறிந்த நடிகர் விஜய், `உயிரைக் கொடுத்து சாகசம் செய்து மக்களை மகிழ்வித்தவங்க தற்போது சோகத்தில் தவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது' என உருகியதுடன் இது தொடர்பாக மக்கள் இயக்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

`நூறாண்டுகளில் நாங்கள் சந்திக்காத துயரம் இது!' - மன்னார்குடியில் சிக்கித் தவிக்கும் பாம்பே சர்க்கஸ்

அவரிடம் மன்னார்குடியைச் சேர்ந்த நமது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அனுப்பி சர்க்கஸ் குழுவினரை விசாரிக்கச் சொன்னதுடன் அவர்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்லுங்க எனக் கூறியிருக்கிறார். ஏற்கெனவே மன்னார்குடியில் ரூ.60,000 மதிப்பிலான நிவாரணப் பணிகளைச் செய்து வந்த மக்கள் இயக்கத்தின் நகரத்தலைவரான ராஜா என்பவரிடம் விஜய் கூறியதை தெரிவித்துள்ளார்.

கொரோனா உதவி
கொரோனா உதவி

உடனடியாக களத்தில் இறங்கிய ராஜா, சர்க்கஸ் குழுவின் நிர்வாகிகளைச் சந்தித்து என்னென்ன தேவைகள் எனக் கேட்டறிந்ததுடன் 120 கிலோ அரிசி, 20 கிலோ கோதுமை மாவு, மளிகை மற்றும் காய்கறிகள் என ரூ.8,600 மதிப்புள்ள பொருள்களை தனது சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன் தளபதி விஜய் தான் உங்களுக்கு செய்யச் சொன்னார் எனக் கூறியதைக் கேட்டு சர்க்கஸ் குழுவினர் நெகிழ்ந்துள்ளனர்.

இது குறித்து ராஜாவிடம் பேசினோம், ``கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த அண்ணன் விஜய், சர்க்கஸ் குழுவினருக்கு உதவச் சொன்னார். இதையடுத்து அவர்களிடம் நேரடியாகச் சென்று என்ன தேவை எனக் கேட்டு அதை நிறைவேற்றி தந்திருக்கிறோம். இன்னும் செய்வதற்கான முயற்சியிலும் இருக்கிறோம்” என்றார்.

சர்க்கஸ்
சர்க்கஸ்

சர்க்கஸ் குழுவின் நிர்வாகிகளிடம் பேசினோம், `1920ம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்களது பாம்பே சர்க்கஸ் குழுவுக்கு இது நூற்றாண்டு காலம். நூற்றாண்டைக் கொண்டாட வேண்டிய தருணத்தில் பெரும் துயரத்தில் சிக்கித் தவிக்கிறது எங்களுடைய சர்க்கஸ் குழு. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆண், பெண் என 134 கலைஞர்களுடன், ஒட்டகம், குதிரை, கோழிகள், கிளிகள் என 50-க்கும் மேற்பட்ட விலங்குகளையும் கொண்டது எங்கள் சர்க்கஸ் குழு.

அரங்கு நிறைந்த காட்சிகளுடன் மக்களை மகிழ்ச்சிபடுத்தி, நாங்களும் உற்சாகமாக இருக்கவேண்டிய நேரத்தில் ஊரடங்கு இது வரை செல்லாத திசைக்கு எங்களை கொண்டு சென்றுவிட்டது. இந்த நேரத்தில் மன்னார்குடி மக்கள் எங்களுக்கு தொடர்ந்து நேசக்கரம் நீட்டுவதுடன் பொருள் உதவியையும் அள்ளித் தருகின்றனர். மின்சாரத்திற்காக பயன்படுத்தபடும் ஜெனரேட்டர் செலவு உட்பட தினமும் சுமார் ரூ.10,000 செலவிற்கு தேவைப்படும் அதை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறோம்.

சர்க்கஸ் குழுவினரோடு  விஜய் ரசிகர்கள்
சர்க்கஸ் குழுவினரோடு விஜய் ரசிகர்கள்

இந்த நேரத்தில் நடிகர் விஜய் உதவி செய்யச் சொன்னதாகக் கூறி அவரது ரசிகர்கள் உதவினர். சிறிய உதவிதான் என்றாலும் இந்த நேரத்தில் பெரியதாக எண்ணி அதனை ஏற்று கொண்டோம். தலைமையில் இருந்து செய்தி வந்தா மீண்டும் வருகிறோம் எனச் சொல்லி விட்டுச் சென்றதே பெரிய திருப்தியைத் தந்ததுள்ளது. இதுவும் கடந்து போகும் என நினைத்து ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டு வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு