Published:Updated:

`ஊர் கூடாமல் கொரோனாவை விரட்டியடிப்போம்!’ - களத்தில் இறங்கிய பட்டுக்கோட்டை விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர்
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் ( ம.அரவிந்த் )

``தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்தோம்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பட்டுக்கோட்டையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் நகராட்சிக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஸ்பிரேயர் இயந்திரம் வழங்கியதுடன், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினியும் தெளித்தனர். இதை அதிகாரிகள் உட்பட அனைவரும் பாராட்டினர்.

கிருமி நாசினி ஸ்பிரேயர்
கிருமி நாசினி ஸ்பிரேயர்

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக செயலாற்றி வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் பணிகள் அளப்பறியது. அவர்களின் தன்னலமில்லா பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் நகரத் தலைவர் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கக் கூடிய 10 ஸ்பிரேயர் இயந்திரத்தை வழங்கியதுடன், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து பல இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர். அவர்களைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கிருமி நாசினி தெளிக்கும் விஜய் ரசிகர்கள்
கிருமி நாசினி தெளிக்கும் விஜய் ரசிகர்கள்

இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆதி.ராஜராமிடம் பேசினோம். ``இன்று கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், அடிப்படையிலேயே உதவும் எண்ணம் கொண்ட தளபதி விஜய்யின் வழியில் வந்த நாங்கள் மக்களுக்கு உதவக்கூடிய பணிகளைச் செய்ய நினைத்தோம். அதன்படி ரூ.20,000 மதிப்பு கொண்ட 10 கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தை ஒன்றியத்தலைவர் மதனுடன் இணைந்து வழங்கினோம்.

அத்துடன் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்தோம். இதற்கு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பாராட்டினர். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. `விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் தினமும் வந்து தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியைச் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

`இதுகுறித்து ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு’ கூறுவதாகத் தெரிவித்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காக்கும் வகையில் அரசுக்கும் மக்களுக்கும் உதவியாக நாங்க செயல்படத் தயாராக இருக்கிறோம். அந்த வகையில் அரசு என்ன சொல்கிறதோ, அதைச் செய்ய நாங்கள் இப்போதே ரெடி. ஊர் கூடாமல் கொரோனாவை விரட்டியடித்து மக்களைக் காக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு